IND vs ENG 4th Test: இந்தியா அணிக்கு எதிராக புதிய வியூகம்.. இடது கை சுழற்பந்து வீச்சாளரை களமிறக்கும் இங்கிலாந்து!

England Cricket Squad: இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB), இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டிக்கான 14 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. காயம் காரணமாக ஷோயப் பஷீருக்கு பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் லியாம் டாசன் இணைந்துள்ளார்.

IND vs ENG 4th Test: இந்தியா அணிக்கு எதிராக புதிய வியூகம்.. இடது கை சுழற்பந்து வீச்சாளரை களமிறக்கும் இங்கிலாந்து!

இங்கிலாந்து அணி

Published: 

16 Jul 2025 08:13 AM

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டுக்கான (IND vs ENG 4th Test) 14 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) அறிவித்துள்ளது. அதன்படி, காயமடைந்த வலது கை சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீருக்குப் (Shoaib Bashir) பதிலாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் லியாம் டாசனுக்கு (Liam Dawson) வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேநேரத்தில், நான்காவது டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து அணியில் 5 வேகப்பந்து வீச்சாளர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இங்கிலாந்து அணியில் டாசன் மட்டுமே சுழற்பந்து வீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் 3 டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேமி ஓவர்டன் மற்றும் சாம் குக் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ: 2025 ஆசியக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் மோதல் உறுதி.. பிசிசிஐ சுவாரஸ்ய தகவல்..!

யார் இந்த லியான் டேசன்..?


இந்தியாவிற்கு எதிராக மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெறும் 4வது டெஸ்டுக்கான அணியில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் லியாம் டாசன் சேர்க்கப்பட்டுள்ளார். இடது விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக இந்தியாவிற்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணியில் இருந்து சிறப்பாக செயல்பட்ட ஷோயப் பஷீர் நீக்கப்பட்டுள்ளார்.

35 வயதான லியாம் டாசன், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இங்கிலாந்து அணிக்காக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கவுண்டி கிரிக்கெட்டில் ஹாம்ப்ஷயர் அணிக்காக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும், 2023 மற்றும் 2024 ம் ஆண்டுகளில் பிசிஏ ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார். இருப்பினும், டாசன் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

டாசனின் தேர்வு குறித்து இங்கிலாந்து ஆண்கள் அணியின் தேசிய தேர்வாளர் லுக் ரைட் கூறுகையில், “லியாம் டாசன் அணியில் இடம் பெற தகுதியானவர். கவுண்டி சாம்பியன்ஷிப்பில் அவரது செயல்திறன் சிறப்பாக உள்ளது, மேலும் அவர் தொடர்ந்து ஹாம்ப்ஷயருக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.” என்றார்.

இங்கிலாந்து அணி முன்னிலை:

லீட்ஸின் ஹெடிங்லியில் நடைபெற்ற போட்டிகள் கொண்ட இந்தியா – இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் பின்னர், பர்மிங்காமில் நடந்த போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை தோற்கடித்தது. பின்னர் லார்ட்ஸில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக, இங்கிலாந்து இந்திய அணிக்கு எதிரான தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், தொடரை வெல்ல மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி எப்படியாவது வெற்றி பெற வேண்டும். மறுபுறம், தொடரை வெல்ல இங்கிலாந்து ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே வெற்றி பெற வேண்டும்.

ALSO READ: 128 ஆண்டுகளுக்கு பிறகு.. ஒலிம்பிக்கில் களமிறங்கும் கிரிக்கெட்! வெளியான போட்டி அட்டவணை!

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, லியாம் டாசன், பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங் மற்றும் கிறிஸ் வோக்ஸ்.