மகளிர் உலகக் கோப்பை தொடர்.. போட்டி நடக்கும் இடங்கள் என்னென்ன தெரியுமா?
ICC Women's Cricket World Cup 2025: 2025 ஆம் ஆண்டு நடைபெறும் 13வது ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் விளையாட்டு மைதானங்கள் குறித்த தகவல்களைப் பற்றிக் காணலாம். இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள ஐந்து மைதானங்கள் 31 போட்டிகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே 2025 ஆம் ஆண்டு நடைபெறும் 13வது ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பை போட்டி தொடர் செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தியா இந்த நிகழ்வை நான்காவது முறையாக நடத்துகிறது. சுமார் ஐந்து வாரங்கள் நடைபெறும் போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள ஐந்து மைதானங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 31 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் நவம்பர் 2 ஆம் தேதி இறுதிப் போட்டியை எட்டும் என்று நம்பிக்கையுடன் களமிறங்குகின்றன. இப்படியான நிலையில் போட்டி நடைபெறவுள்ள மைதானங்கள் பற்றி இந்த தொகுப்பில் காண்போம்.
டி.ஒய்.பாட்டீல் மைதானம், நவி மும்பை
2008 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட DY பாட்டீல் மைதானம் 45,300 பேர் அமரக்கூடியது. இந்த மைதானம் இந்தியாவின் ஒன்பதாவது பெரிய மைதானமாகும். நவி மும்பையை தளமாகக் கொண்ட இந்த மைதானம் 2008 ஆம் ஆண்டு தொடக்க இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டியை நடத்தியது. கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஒரு டி20 போட்டியில் பெண்கள் அணிகள் விளையாடியது. மேலும் 2023 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மகளிர் டெஸ்ட் போட்டியும் இந்த மைதானத்தில் நடந்தது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் ஐந்து போட்டிகளை இந்த மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Also Read: ஆசியக் கோப்பை ஆடுகளத்தில் அடுக்கப்பட்ட சாதனை.. வரலாறு படைத்த இந்திய அணி!
அசாம் கிரிக்கெட் சங்க மைதானம், கௌஹாத்தி
46 ஆயிரம் பேர் அமரக்கூடிய இந்த மைதானம் 2012ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு ஆடவர் மற்றும் மகளிர் அணிகளின் சர்வதேச போட்டிகள் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றை நடத்தப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில் இந்திய ஆடவர் அணி ஆஸ்திரேலியாவுடன் டி20 போட்டியில் விளையாடியபோது, சர்வதேச கிரிக்கெட்டை நடத்தும் இந்தியாவின் 49 வது மைதானமாக இது மாறியது. பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2019ல் இந்திய பெண்கள் அணிகள் முதல் முறையாக டி20 போட்டியில் அங்கு விளையாடியது. இந்த ஆண்டு உலகக் கோப்பையில் அசாம் கிரிக்கெட் சங்க மைதானத்தில் 5 போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான போட்டியின் தொடக்கப் போட்டி மற்றும் அரையிறுதிப் போட்டியும் அடங்கும்.
ஏசிஏ–விடிசிஏ கிரிக்கெட் மைதானம், விசாகப்பட்டினம்
இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஏசிஏ–விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் 27,500 பார்வையாளர்கள் வரை அமர முடியும். 2003 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் இந்திய ஆடவர் அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டை போட்டிகளையும் நடத்தியுள்ளது. 2010ம் ஆண்டு இந்திய மகளிர் அணி இந்த மைதானத்தில் முதல் முறையாக ஒருநாள் போட்டியில் விளையாடியது. அதன் பின்னர் 2012ல் அங்கு தங்கள் முதல் டி20 போட்டியை விளையாடியது. 2025 மகளிர் உலகக் கோப்பையில் இங்கும் 5 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி இங்கு நடைபெறுகிறது.
Also Read: பண மழையில் நனையப்போகும் மகளிர் அணி.. 2025 மகளிர் உலகக் கோப்பை பரிசுத்தொகை அதிகரிப்பு!
ஹோல்கர் மைதானம், இந்தூர்
30 ஆயிரம் பேர் அமரக்கூடிய இந்த மைதானம் முன்பு கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளை நடத்தியது. ஹோல்கர் வம்சத்தை கௌரவிக்கும் வகையில், 2010 ஆம் ஆண்டு உரிமையாளர்களான மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2006 ஆம் ஆண்டு இந்திய ஆடவர் அணி இங்கிலாந்தை முதல் ஒருநாள் போட்டியில் இங்கு சந்தித்தது. இன்றுவரை மூன்று டெஸ்ட் போட்டிகள், எட்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் நான்கு டி20 போட்டிகள் மட்டுமே இங்கு நடந்துள்ளது. மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஐந்து போட்டிகள் நடக்கும் நிலையில் இதில் இந்தியா இங்கிலாந்து அணியுடன் மோதும் போட்டியும் இடம் பெற்றுள்ளது.
பிரேமதாச மைதானம், கொழும்பு
இந்த ஆண்டு ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் போட்டிகளை நடத்த இந்தியாவிற்கு வெளியே தேர்வு செய்யப்படுள்ள ஒரே மைதானம் கொழும்பின் பிரேமதாசா ஆகும். இந்த மைதானத்தில் 35 ஆயிரம் ரசிகர்கள் வரை அமர முடியும். 1986 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த மைதானம், சர்வதேச போட்டிகளை நடத்தியதில் ஏராளமான அனுபவத்தைக் கொண்டுள்ளது, 1996 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், 2002 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2012 ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை ஆகியவை நடத்தப்பட்டுள்ளது. இங்கு 1999 ஆம் ஆண்டு இலங்கை நெதர்லாந்து அணியுடனான போட்டியின் மூலம் முதல்முறையாக மகளிர் சர்வதேச கிரிக்கெட்டை நடத்தப்பட்டது. மேலும் 2025 ஆம் ஆண்டு ஆண்டு உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி உட்பட 13 போட்டிகளை இந்த மைதானம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.