புற்றுநோய் பாதிப்பு.. ரிங்கு சிங்கின் தந்தை காலமானார்.. சோகத்தில் இந்திய கிரிக்கெட் அணி..
Rinku Singh Father Passed Away: ரிங்கு சிங்கின் தந்தை அலிகாரில் சிலிண்டர் விநியோகம் செய்யும் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தவர். பல சவால்களுக்கு மத்தியிலும், தனது மகனின் கனவுக்குத் துணையாக நின்று, ரிங்கு சிங் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரராக உருவெடுக்க முக்கிய பங்காற்றினார்.

ரிங்கு சிங்
Rinku Singh Father Passed Away: இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை, நான்காம் நிலை (Stage 4) புற்றுநோய் பாதிப்பு காரணமாகக் காலமானார். ரிங்குவின் தந்தை கான்சந்திர சிங், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோய் பாதிப்பு தீவிரமடைந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்தது. வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் தனது கடைசி மூச்சை நிறுத்தினார்.
இதையும் படிக்க: T20 World Cup 2026 : ஜிம்பாப்வேவை 72 ரன்கள் வித்தியாத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
நேற்றைய போட்டியில் ரிங்கு சிங் நீக்கம்:
தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ரிங்கு சிங், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாகத் தனது தந்தையைப் பார்ப்பதற்காக அணியிலிருந்து தற்காலிகமாக விலகிச் சென்றார். பின்னர் போட்டியின் முதல் நாள் இரவு மீண்டும் அணியுடன் இணைந்தார். எனினும், இந்திய அணி சஞ்சு சாம்சனைத் தேர்வு செய்ததால், ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் ரிங்கு சிங் பிளேயிங் 11ல் (Playing XI) அணியில் சேர்க்கப்படவில்லை.
2024ல் சிலிண்டர் டெலிவரி:
ரிங்கு சிங்கின் தந்தை அலிகாரில் சிலிண்டர் விநியோகம் செய்யும் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தவர். பல சவால்களுக்கு மத்தியிலும், தனது மகனின் கனவுக்குத் துணையாக நின்று, ரிங்கு சிங் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரராக உருவெடுக்க அவர் முக்கிய பங்காற்றினார். கான்சந்திர சிங் மிகவும் எளிமையான மனிதர். 2024-ஆம் ஆண்டில் கூட, அவர் அலிகார் நகரில் சிலிண்டர்களை விநியோகம் செய்வதைக் காண முடிந்தது. தனது மகன் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரராக இருந்தபோதிலும், அவர் தனது வேலையைத் தொடர்ந்தார்.
வேலையை நிறுத்தச் சொல்வது கடினம்:
இதுகுறித்து ரிங்கு சிங் ஒருமுறை பேசுகையில், “என் தந்தையிடம் இப்போது ஓய்வெடுக்கும்படி சொன்னேன், சிலிண்டர் சுமக்கத் தேவையில்லை என்றேன். ஆனால் அவர் இப்போதும் அந்த வேலையைச் செய்கிறார், தனது வேலையை அவர் நேசிக்கிறார். வாழ்க்கை முழுவதும் உழைத்த ஒருவரை திடீரென வேலையை நிறுத்தச் சொல்வது கடினம் என்று எனக்குப் புரிகிறது,” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க: T20 World Cup: ஜிம்பாப்வேக்கு எதிராக இமாலய வெற்றி.. இந்தியாவின் அரையிறுதி வாய்ப்புகள் என்னென்ன?
ரிங்கு சிங்கிற்கு இந்திய அணி முழு ஆதரவு:
இந்தத் துயரமான நேரத்தில், இந்திய கிரிக்கெட் அணி ரிங்கு சிங்கிற்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. தனது தந்தையின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றுவதற்காக ரிங்கு சிங் அணியிலிருந்து விடைபெற்றுச் சென்றுள்ளார். அவர் மீண்டும் எப்போது அணியில் இணைவார் என்பது குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் இல்லை. இந்த இக்கட்டான தருணத்தில் அவருக்குத் தேவையான ஆதரவை வழங்குவதிலேயே அணி நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது.