Olympics 2028: 128 ஆண்டுகளுக்கு பிறகு.. ஒலிம்பிக்கில் களமிறங்கும் கிரிக்கெட்! வெளியான போட்டி அட்டவணை!

Cricket Returns to Olympics 2028: 128 ஆண்டுகளுக்குப் பிறகு, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெறுகிறது. டி20 வடிவில் 2028 ஜூலை 12 முதல் 29 வரை ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டிகள் நடைபெறும். இறுதிப் போட்டிகள் 2028 ஜூலை 19 மற்றும் 29 ஆம் தேதிகளில் நடைபெறும். 6 அணிகள் ஒவ்வொரு பிரிவிலும் பங்கேற்கும்.

Olympics 2028: 128 ஆண்டுகளுக்கு பிறகு.. ஒலிம்பிக்கில் களமிறங்கும் கிரிக்கெட்! வெளியான போட்டி அட்டவணை!

2028 ஒலிம்பிக்கிற்கான கிரிக்கெட் அட்டவணை

Published: 

15 Jul 2025 17:10 PM

128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் மீண்டும் கிரிக்கெட் (Cricket) சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 1900ம் ஆண்டு கிரிக்கெட் கடைசியாக விளையாடப்பட்டது. 2028 ஒலிம்பிக் (Olympics 2028) போட்டிகள் லாஸ் ஏஞ்சல்ஸில் (Los Angeles)  நடைபெறவுள்ளன. அதன்படி, கிரிக்கெட் போட்டிகள் பமேனா நகரில் உள்ள ஃபேர்கிரவுண்ட்ஸ் ஸ்டேடியத்தில் விளையாடப்பட இருக்கிறது. இந்த கிரிக்கெட் ஸ்டேடியமானது லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது. முன்னதாக, 2028 ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட், பேஸ்பால், ஃபிளாக் கால்பந்து, லாக்ரோஸ் மற்றும் ஸ்குவாஷ் ஆகிய போட்டிகளை சேர்க்க சர்வதேச ஒலிம்புக் குழு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி எப்போது தொடங்குகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டிகள் எப்போது உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

கிரிக்கெட் போட்டிகள் எப்போது..?

லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் 2028 ஏற்பாட்டு குழு கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் 2028ம் ஆண்டு ஜூலை 14ம் தேதியே தொடங்கிறது என்றாலும், கிரிக்கெட் போட்டிகள் அதற்கு 2 நாட்களுக்கு முன்பே தொடங்குகிறது. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் டி20 வடிவத்தில் விளையாடப்பட இருக்கிறது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒலிம்பிக் போட்டிகள் வருகின்ற 2028 ஜூலை 12 முதல் 29 வரை நடைபெறுகிறது. இறுதிப்போட்டியானது 2028 ஜூலை 19 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

ALSO READ: சச்சின் டெண்டுல்கரின் மும்பை மாளிகை.. பாந்த்ரா வீட்டின் வடிவமைப்பு, பரப்பளவு விவரம் இதோ!

போட்டிகள் எப்படி நடைபெறும்..?


கிரிக்பஸில் வெளியிடப்பட்ட தகவலின்படி, கிரிக்கெட் அட்டவணையானது 2 செட்களாக பிரிக்கப்படும். முதல் செட்டின் போட்டிகள் 2028 ஜூலை 12 முதல் 18 வரை நடைபெறும். இதன் இறுதிப்போட்டிகள் 2028 ஜூலை 19ம் தேதி நடைபெறும். 2வது செட்டின் போட்டிகள் 2028 ஜூலை 22 முதல் 28ம் தேதி வரை பெறும். இதன் இறுதிப்போட்டிகள் 2028 ஜூலை 29ம் தேதி நடைபெறும். இதன்பிறகு, ஒலிம்பிக் போட்டிகள் முடிவடையும். அட்டவணையின்படி, 2028 ஜூலை 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் எந்த போட்டியும் இருக்காது. அதேநேரத்தில், பெரும்பாலும் ஒரே நாளில் 2 போட்டிகள் நடைபெறலாம்.

இருப்பினும், ஆண்கள் போட்டி முதலில் நடத்தப்படுமா அல்லது பெண்கள் போட்டி முதல் நடத்தப்படுமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இது தொடர்பான கூடுதல் தகவல்கள் 2025ம் ஆண்டின் கடைசி மாதங்களில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

ALSO READ: அசாத்திய ஆல்ரவுண்டராக வலம்.. யூத் டெஸ்டில் விக்கெட் எடுத்து கலக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா 6 அணிகள் பங்கேற்கும் என்று ஏற்பாட்டுக் குழு ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. கிரிக்கெட் அணிகள் ஒலிம்பிக் போட்டிகளுக்கு எவ்வாறு தகுதி பெறும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தனது வருடாந்திர மாநாட்டை வருகின்ற 2025 ஜூலை 17-20 வரை சிங்கப்பூரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, அங்கு தகுதிச் செயல்முறை விவாதிக்கப்படும்.

ஒலிம்பிக் கிரிக்கெட்டில் தங்கம் வென்ற ஒரே அணி எது தெரியுமா..?

ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி ஒரு முறை மட்டுமே, அதுவும் 1900 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் என 2 அணிகள் மட்டுமே பங்கேற்றன. இதில், பிரிட்டன் தங்கப் பதக்கத்தை வென்றது. இந்தப் போட்டி இரண்டு நாள் போட்டியாகும். இதில், ஒவ்வொரு அணியும் 12 வீரர்களைக் கொண்டிருந்தது. கிரேட் பிரிட்டன் இந்தப் போட்டியை 158 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பிரெஞ்சு அணி இன்னும் ஐந்து நிமிடங்கள் நீடித்திருந்தால், இந்தப் போட்டி டிராவாகியிருக்கும். இரு அணிகளும் தங்கப் பதக்கத்தை பகிர்ந்திருக்கும்.