Mohammed Shami: மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ.4 லட்சம்.. ஷமிக்கு நீதிமன்றம் உத்தரவு!
கொல்கத்தா உயர்நீதிமன்றம், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது மனைவி ஹாசின் ஜஹானுக்கு மாதம் 4 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. முன்னதாக 1.3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்ட நிலையில், தற்போது தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

முகம்மது ஷமி
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகம்மது ஷமியின் (Mohammed Shami) விவகாரத்து தொடர்பான வழக்கில் மற்றுமொரு முக்கிய உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பானது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஜீவனாம்சம் கேட்டு ஷமியின் மனைவி ஹாசின் ஜஹான் தொடர்ந்த வழக்கில் அவருக்கு மாதந்தோறும் ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என நீதிபதி அஜய் குமார் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக ரூ.10 லட்சம் மாதந்தோறும் கேட்டு ஹாசின் வழக்கு தொடர்ந்த நிலையில் அவருக்கு ரூ.1.3 லட்சம் வழங்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது. இப்படியான நிலையில் தற்போது அந்த தொகை ரூ.4 லட்சமான உயர்த்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பின்படி, ஷமி தனது மனைவி ஹாசின் ஜஹானின் தனிப்பட்ட தேவைகளுக்காக மாதத்திற்கு ரூ. 1.5 லட்சமும், மகள் ஐராவின் பராமரிப்பு மற்றும் செலவுகளுக்காக மாதத்திற்கு ரூ. 2.5 லட்சமும் என மொத்தம் ரூ. 4 லட்சமும் செலுத்த வேண்டும். இந்தத் தொகை 2018 ஆம் ஆண்டு, அதாவது வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து பொருந்தும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இதன் காரணமாக, ஷமி கடந்த 7 ஆண்டு கால நிலுவைத் தொகையையும் செலுத்த வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது.
வழக்கின் பின்னணி
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி 2014ஆம் ஆண்டு ஹாசின் ஜஹான் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2015ஆம் ஆண்டு ஐரா என்ற மகள் பிறந்தாள். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் 2018ல் புயல் வீச தொடங்கியது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட தொடங்கியது. இதன் பிறகு ஹாசின் ஜஹான் ஷமி மீது குடும்ப வன்முறை, வரதட்சணை துன்புறுத்தல், பிற பெண்களுடன் தகாத உறவு மற்றும் சூதாட்டம் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
இதுதொடர்பாக போலீசிலும் புகாரளிக்கப்பட்டது. ஷமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட அதே நேரத்தில், பிசிசிஐயும் மனைவி சுமத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரித்தது.இப்படியான நிலையில் 2018 ஆம் ஆண்டு அலிப்பூர் நீதிமன்றம் ஹாசின் ஜஹானின் விவாகரத்து மனுவை விசாரித்தது. அப்போது ஷமி மாதம் ரூ. 50,000 அவரது மனைவிக்கும், மற்றும் ரூ. 80,000 அவரது மகளுக்கும் ஜீவனாம்சமாக வழங்க உத்தரவிட்டது. இந்த தீர்ப்பால் ஹசின் ஜஹான் அதிருப்தி அடைந்தார்.
காரணம் அவர் மாதம் தனக்கு ரூ. 7 லட்சம் மற்றும் தனது மகளுக்கு ரூ. 3 லட்சம் என மொத்தமாக ரூ. 10 லட்சம் ஜீவனாம்சம் வழங்கக்கோரி கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கில் தான் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஷமியின் ஆண்டு வருமானம் மற்றும் மனைவி, மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஜீவனாம்ச தொகையானது உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.