India vs England Test series: அன்ஷுல் கம்போஜை அழைத்த இந்திய அணி.. நாடு திரும்பும் அர்ஷ்தீப் சிங்! காரணம் என்ன..?

Anshul Kamboj Replaces Arshdeep Singh: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கு அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக அன்ஷுல் கம்போஜ் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ரஞ்சி டிராபியில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகள் வீழ்த்திய அனுபவம் கொண்ட இவர், ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடினார்.

India vs England Test series: அன்ஷுல் கம்போஜை அழைத்த இந்திய அணி.. நாடு திரும்பும் அர்ஷ்தீப் சிங்! காரணம் என்ன..?

அன்ஷுல் கம்போஜ் - அர்ஷ்தீப் சிங்

Published: 

20 Jul 2025 11:13 AM

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் கம்போஜ் (Anshul Kamboj) சேர்க்கப்பட்டுள்ளார். இவர் ரஞ்சி டிராபியில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அணியில் இடம்பெற்றிருந்த அர்ஷ்தீப் சிங்கிற்கு (Arshdeep Singh) காயம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக இந்திய அணி (Indian Cricket Team) அன்ஷுல் கம்போஜை அணியில் சேர்த்துள்ளது. இருப்பினும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வருகின்ற 2025 ஜூலை 23 முதல் மான்செஸ்டரில் நடைபெற உள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி தற்போது 1-2 என பின்தங்கியுள்ளது. சமீபத்தில் பயிற்சியின்போது இடது கை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அர்ஷ்தீப்பிற்கு பதிலாக அன்ஷுல் கம்போஜ் அழைக்கப்பட்டுள்ளார். இந்த தொடருக்கு முன்பு, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 2 அதிகாரப்பூர்வமற்ற போட்டிகளில் விளையாடிய இந்தியா ஏ அணியில் கம்போஜ் இடம் பெற்றிருந்தார். இந்த போட்டியில் அன்ஷுல் கம்போஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், 2வது போட்டியில் அரைசதமும் அடித்து அசத்தினார்.

ALSO READ: சச்சினின் சதமே கடைசி.. ஓல்ட் டிராஃபோர்டில் 35 ஆண்டுகளாக சத வறட்சி.. முடிவு கட்டுவார்களா இந்திய பேட்ஸ்மேன்கள்..?

காயம் காரணமாக வாய்ப்பை தவறவிட்டாரா அர்ஷ்தீப் சிங்..?

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்டில் அர்ஷ்தீப் சிங் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்திய அணி நேற்று அதாவது 2025 ஜூலை 19ம் தேதி மான்செஸ்டரை அடைந்தது. முன்னதாக, பெக்கன்ஹாமில் நடந்த பயிற்சி அமர்வில் அணி உறுப்பினர்கள் பங்கேற்றனர். பணிச்சுமை மேலாண்மை காரணமாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜுக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, அர்ஷ்தீப்பிற்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். லார்ட்ஸ் டெஸ்டில், பும்ரா, சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கியது.

பும்ரா களமிறங்குவாரா..?

ஜஸ்பிரித் பும்ரா மான்செஸ்டர் டெஸ்டில் விளையாடுவாரா இல்லையா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவே என்று பும்ரா ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதன்படி, லீட்ஸில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். அதேநேரத்தில், பர்மிங்காமில் நடந்த இரண்டாவது டெஸ்டில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. மூன்றாவது டெஸ்டுக்கான பிளேயிங்-11 இல் பும்ரா சேர்க்கப்பட்டார், இப்போது அவர் அடுத்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்படுவாரா இல்லையா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். மறுபுறம், ஆகாஷ் தீப் இடுப்பு காயத்தால் அவதிப்பட்டு வருகிறார், மேலும் அவர் விளையாடுவது குறித்தும் தெளிவு இல்லை. சிராஜ் இதுவரை மூன்று போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார், எனவே அணி நிர்வாகம் அவருக்கு ஓய்வு அளிக்கிறதா இல்லையா என்பதையும் பார்க்க வேண்டும். இதில், ஏதாவது ஒன்று நடந்தாலும், இளம் வீரர் அன்ஷுல் கம்போஜுக்கு இந்திய அணிக்காக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கும்.

ALSO READ: விராட் கோலி கூட எட்ட முடியாத இடம்.. முக்கிய சாதனையை படைக்கப்போகும் கே.எல்.ராகுல்..!

அன்ஷுல் கம்போஜ் பற்றிய விவரங்கள்:


ஐபிஎல் 2025ல் அன்ஷுல் கம்போஜ் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக விளையாடினார். மெகா ஏலத்தில் ரூ.3.40 கோடிக்கு வாங்கப்பட்டார். ஐபிஎல்லில் எட்டு போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளை கம்போஸ் வீழ்த்தினார். ஹரியானாவைச் சேர்ந்த இந்த வேகப்பந்து வீச்சாளர் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியபோது பிரபலமடைந்தார். ரஞ்சி டிராபி வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை கம்போஜ் பெற்றார். 2024-25 சீசனில் கேரளாவுக்கு எதிரான போட்டியின் போது கம்போஜ் இந்த சாதனையை நிகழ்த்தினார்.