வீட்டுல பிரச்னையா இருக்கா? – வாஸ்து குறைபாடு காரணமா இருக்கலாம்!
வீட்டு வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் வாஸ்து சாஸ்திரத்தின் முக்கியத்துவம் அளப்பரியது. பிரதான நுழைவாயில், சமையலறை, படுக்கையறை, கழிப்பறை ஆகியவற்றின் சரியான அமைவிடம் செழிப்பையும், தவறான அமைவிடம் நிதி மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ்து டிப்ஸ்
ஒருவரின் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை நிர்ணயிப்பதில் ஜோதிடத்திற்கு எத்தகைய முக்கியத்துவம் இருக்கிறதோ, அதே அளவுக்கான முக்கியத்துவம் வாஸ்து சாஸ்திரத்திலும் உள்ளது. நிலம் சம்பந்த விஷயமான வாஸ்து சாஸ்திரம் வீடு கட்டுவதில் மிகவும் முக்கியமானது. அதன் விதிகளை பின்பற்றி வீட்டின் பிரதான நுழைவாயில், சமையலறை, படுக்கையறை மற்றும் கழிப்பறை ஆகியவற்றை முறையாக வைப்பதும், பராமரிப்பதும் செழிப்பைத் தரும் என்பது ஐதீகமாக உள்ளது. தவறான இடத்தில் வாஸ்து விதிகளை மீறி பொருட்களை வைப்பது நிதி மற்றும் சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது. ஆகவே எதிர்மறை சக்தியைத் தவிர்க்க வீட்டை சுத்தமாக வைத்திருப்பது முக்கியமாகும். அந்த வகையில் வீட்டில் ஏற்பட்டுள்ள வாஸ்து குறைபாடுகளை எவ்வாறு சரிசெய்வது என்பது பற்றிக் காணலாம்.
குடும்ப பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்
வாஸ்து சாஸ்திரம் என்பது வீட்டின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்துடன் தொடர்புடைய ஒரு பண்டைய இந்திய கட்டிடக்கலை அமைப்பாகும். இது வீட்டில் ஆற்றல் ஓட்டத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையிலும் செழிப்பு மற்றும் வெற்றியையும் தருகிறது. ஆனால் வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால் அது குடும்ப உறுப்பினர்கள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. ஒருவேளை நீங்கள் வசிக்கும் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் அவை சண்டைகள் , நிதி சிக்கல்கள் மற்றும் திருமண தாமதம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
Also Read: வாழ்க்கையில் இந்த 5 பொருட்களை யாரிடமும் கடன் வாங்காதீர்கள்!
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
வாஸ்து சாஸ்திரத்தின்படி, பிரதான கதவு வீட்டிற்குள் ஆற்றலின் நுழைவுப் புள்ளியாக பார்க்கப்படுகிறது. சில நேரங்களில் அது தவறான திசையில் அமைந்திருந்தால் அது எதிர்மறை சக்தியை ஈர்க்கும் சூழலை கொடுக்கும். இது வீட்டில் அமைதியின்மை மற்றும் துரதிர்ஷ்டத்திற்கு வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது. உங்கள் வீட்டு வாசற்கதவு வடக்கு, கிழக்கு, வடகிழக்கு அல்லது மேற்கு திசையை நோக்கி இருப்பது மிகவும் மங்களகரமானது. ஆனால் தெற்கு திசை இருக்கவே கூடாது.
அதேபோல் வீட்டின் ஒரு முக்கிய பகுதியாக சமையலறை உள்ளது. அதன் இருப்பிடம் வாஸ்து சாஸ்திரத்தின்படி முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. வீட்டில் சமையலறை தவறான திசையில் இருந்தால், அது நிதிப் பிரச்சினைகளையும் உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். தென்கிழக்கு திசை சிறந்தது, ஏனெனில் அது நெருப்புக்கான திசை மற்றும் சமையல் செய்வதற்கு ஏற்றது.
படுக்கையறை என்பது வீட்டில் ஒருவர் ஓய்வெடுக்கும் மற்றும் உற்சாகப்படுத்தும் இடமாகும். படுக்கையறை தவறான திசையில் இருந்தால், அது தூக்கப் பிரச்சினைகள், மன அழுத்தம் மற்றும் உறவுகளில் சிக்கல்களை ஏற்படுத்தும். இந்த அறை தென்மேற்கு மூலையில் இருப்பது சிறப்பான ஒன்றாகும். அதேபோல் கழிப்பறையின் இருப்பிடமும் மிகவும் முக்கியமானது. உங்கள் வீட்டில் கழிப்பறை தவறான திசையில் இருந்தால், அது எதிர்மறை சக்தியை ஈர்க்கும் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதற்கு வடமேற்கு அல்லது மேற்கு திசை சிறந்தது.
Also Read: உங்கள் வீட்டில் பழைய துணி இருக்கா? – வாஸ்துப்படி என்ன செய்யலாம்?
அதுமட்டுமல்லாமல் உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருந்தால், அது குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். வீட்டிலிருந்து எதிர்மறை சக்தியை அகற்ற, வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், நேர்மறை சக்தியை ஈர்க்கும் பொருட்களை வைத்திருக்க வேண்டும், எதிர்மறை சக்தியை ஈர்க்கும் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
(வாஸ்து சாஸ்திர அடிப்படையில் இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)