கந்த சஷ்டி கவசம்.. இந்த 6 வரி போதும்.. எவ்வளவு பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
கந்த சஷ்டி கவசம், பால தேவராயர் சுவாமிகளால் இயற்றப்பட்ட சக்திவாய்ந்த ஸ்தோத்திரமாகும். இது முருகப்பெருமானை துதிக்கும் பாடலாக உள்ளது. இதில் உள்ள காப்புச் செய்யுள், துதிப்போருக்கு வல்வினை நீங்கும், செல்வம் கிடைக்கும், இறையருள் பெறலாம் என தெரிவிக்கிறது. கந்த சஷ்டி கவசத்தை மனதில் பதிய வைப்பதன் மூலம் வாழ்வில் நன்மைகள் பெருகும் என சொல்லப்படுகிறது.

தமிழ் கடவுள் என கொண்டாடப்படுபவர் முருகன் (Lord Murugan). உலகமெங்கும் அவருக்கு தனிக்கோயில்கள் அமைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் இன்னல் தீர்க்கும் தெய்வமாக முருகன் பார்க்கப்படுகிறது. முருகன் என்றாலே நம் அனைவருக்கும் கந்த சஷ்டி கவசம் தான் நினைவுக்கு வரும். பால தேவராயர் சுவாமிகள் எழுதிய இந்த கந்த சஷ்டி கவசம் (Kandha Sasti Kavasam) மிகப்பெரிய அளவில் சிறப்புகள் வாய்ந்தது. இதனை இறை வழிபாட்டின்போது படித்தால் மிகப்பெரிய நன்மைகளைப் பெறலாம் என சொல்லப்படுகிறது. மொத்தம் 244 வரிகளைக் கொண்ட கந்த சஷ்டி கவசம் தெரியாமல் ஆன்மிக அன்பர்களே இருக்க முடியாது. நாம் கஷ்டி சஷ்டி கவசத்தில் எந்த வரிகளை படித்தாலும் முதலில் நாம் சொல்ல வேண்டியது மேலே குறிப்பிட்ட இந்த காப்பு பாடலை தான். இதன் பிறகு தான் நாம் மற்றவற்றை படிக்க வேண்டும். தேசிய கீதத்துக்கு நிகராக இதனை மனதில் பதித்து வைத்திருப்பார்கள். கந்த சஷ்டி கவசம் படித்தால் என்ன கிடைக்கும் என்பதை இந்த காப்பு பாடலில் இருந்து அறிந்துக் கொள்ளலாம்.
பாட வேண்டிய வரிகள்
துதிப்போர்க்கு வல்வினை போம், துன்பம்போம், நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.
அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.
என்ன அர்த்தம் தெரியுமா?
துதிப்போர்க்கு வல்வினை போம் என்பது முருகப்பெருமானை வணங்கி வழிபட்டால் வினைகள் நம்மை விட்டு நீங்கும் என்பது அர்த்தமாகும். எதனால் நாம் இந்த பிறவி எடுத்தோமோ அதற்கான வினைகளை இந்த பதிகம் நீக்கும் என்பதே ஐதீகமாக உள்ளது. துன்பம்போம் என்றால் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்கள் எல்லாம் காணாமல் போகும், இனி இன்பம் மட்டுமே இருக்கும் என்பதாகும். நெஞ்சில்பதிப்போர்க்கு என்றால் இந்த கந்த சஷ்டி கவசத்தை மனதில் தங்க வைத்தால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
கதித்தோங்கும் என்பதில் கதி என்றால் சரணடைதல், விரைந்து செல்லுதல் என அர்த்தமாகும். அதாவது உன்னிடம் சரணடைதல் என பொருள் கொள்ளலாம். இந்த கதித்தோங்கும் என்றால் உங்களுக்கு விரைந்து நன்மைகள் வந்து சேரும் என்பது அர்த்தமாகும். நிஷ்டையும் கைகூடும் என்ற வரியில் நிஷ்டை என்றால் தவமாகும். இறைவனை வணங்கும்போது மனம், மொழி, மெய் ஆகிய மூன்றும் ஒன்றுபடும்போது இறையருள் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
நிமலரருள் எனப்படுவதில் நிமலன் என்றால் எந்த வித அழுக்கும் மனதில் இல்லாதவன் என்பது அர்த்தமாகும். சிவனைத்தான் நிமலன், நிர்மலன், விமலன் என்றெல்லாம் அழைப்பார்கள். இங்கு முருகனை அழைக்க காரணம் சிவனும் இவரும் ஒன்று தான் என்பதை மெய்ப்பிக்கத்தான் என பொருள் கூறுகிறது. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி என்ற வரியில் அமரர் என்றால் தேவர்கள், அமரம் என்றால் போர் என சொல்லப்படுகிறது. அதாவது இந்த வரியில் தேவர்களின் சிறப்பையும், அசுரர்களை அவர் வதைத்தையும் குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது.
(ஆன்மிக நம்பிக்கையின்படி இந்த செய்தியில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது. இதற்கு டிவி9 தமிழ் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது)