சபரிமலை ஐயப்பனால் நிகழ்ந்த அற்புதம்.. நடிகர் ராஜ்கமலின் ஆன்மிக அனுபவம்!

பிரபல நடிகரான ராஜ்கமல் சபரிமலைக்கு முதல்முறையாக சென்ற அனுபவத்தை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அபியும் நானும் சீரியலில் மாலை அணிந்த காட்சியின் மூலம் ஏற்பட்ட ஆன்மீக உணர்வு, விரதம் இருப்பதில் ஏற்பட்ட சந்தேகம், நண்பர்களின் ஊக்கம், 48 நாட்கள் விரதம் மேற்கொண்ட அனுபவம் என பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

சபரிமலை ஐயப்பனால் நிகழ்ந்த அற்புதம்.. நடிகர் ராஜ்கமலின் ஆன்மிக அனுபவம்!

ராஜ் கமலின் ஆன்மிக அனுபவங்கள்

Published: 

21 May 2025 11:35 AM

பொதுவாக சபரிமலை பற்றி பலருக்கும் பல்வேறு விதமான உணர்வுகளும், எண்ணங்களும் இருக்கும். அப்படிப்பட்ட சூழலில் சின்னத்திரையில் தனது நடிப்பால் அனைவரது மத்தியிலும் பரீட்சையமான ராஜ்கமல் ஒரு நேர்காணலில் தான் ஐயப்பன் கோயிலுக்கு முதல்முறையாக சென்று வந்த போது நடந்த நிகழ்வுகளை பகிர்ந்திருப்பார். அதனைப் பற்றி நாம் காணலாம். அந்த நேர்காணலில் பேசிய ராஜ்கமல், “சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்பதெல்லாம் திட்டம் போட்டு நடப்பதில்லை. நாம் வரவேண்டும் என ஐயப்பன் விரும்பி விட்டால் அந்த நேரம் அது நடக்கும். என்னுடைய திருச்சி நண்பர்கள் இருவர் 15 ஆண்டுகளாக சபரிமலைக்கு சென்று வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் நான் அவர்களின் பூஜை நிகழ்ச்சிக்கு செல்வேன். இறை வழிபாட்டில் கலந்து கொள்வேன். சாப்பிட்டு விட்டு வந்து விடுவேன். ஆனால் எனக்கு சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்ற உணர்வு உண்டாகவில்லை.

மாலை அணிந்ததும் வந்த உணர்வு

ஒருநாள் திடீரென செல்ல வேண்டும் என தோன்றியது. அப்போது அபியும் நானும் என்ற சீரியலில் நான் நடித்துக் கொண்டிருந்தேன்.  அதில் நான் மாலை போட்டிருப்பது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தது. நடிப்புக்காக மாலை போட்டிருந்தாலும் மற்றவர்கள் நம்மை பார்க்கும்போது ஏதோ ஒரு இறை உணர்வு எனக்குள் இருப்பது போல தோன்றியது. இரவு ஷூட்டிங் முடிந்தால் மாலையை கழட்டி வைத்து விடுவோம் என மூளையில் தோன்றினாலும், மனதுக்குள் அந்த உணர்வு இருப்பதை அறிந்தேன்.

உடனே என் நண்பர்களிடம் விஷயத்தை சொன்னேன். அவர்கள் இந்த முறை எங்களுடன் நீ கோயிலுக்கு வா என அழைத்தார்கள். ஆனால் எனக்குள் விரத முறையை சரியாக பின்பற்ற முடியுமா என்ற சந்தேகம் இருந்துக் கொண்டே இருந்தது. அவர்கள் தான் நீ மாலையை மட்டும் போடு. மத்தது எல்லாம் தானாக நடக்கும் என சொன்னார்கள். அந்த ஆண்டு கார்த்திகை மாதம் முதல் நாள் நான் மாலை அணிந்தேன். சொல்லப்போனால் ஐயப்பன் உருவம் பதித்த டாலர் விலை ரூ.2 இருக்கும்.

சபரிமலையில் நிகழ்ந்த மாற்றம் 

ஆனால் அது கழுத்தில் ஏறியதும் உள்ளுக்குள் இருந்த உணர்வுகளே அடியோடு மாறியது. இந்த மாலையை சீக்கிரம் கழட்டி விடக்கூடாது என்று தான் தோன்றியது. மாலை போட்டதும் எப்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்போம் என்ற கேள்வி வரும். ஆனால் விரத வழிமுறைகளையும், தொழிலையும் என்றைக்கும் ஒப்பிடவேக் கூடாது. வேலைக்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதேசமயம் வேலை முடிந்ததும் விரத முறைகளை கடைபிடிக்க வேண்டும் அவ்வளவு தான்.

இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தில் இருப்பது போல இந்து மதத்தில் விரதம் இருப்பதற்கென சரியான நடைமுறைகள் கிடையாது. அது ஐயப்பனுக்கு மட்டும் தான் உள்ளது. ஐயப்பன் கோயிலுக்குள் போய் வழிபட்டு விட்டு வெளியே வரும்போது வாழ்க்கையில் நாம் ஏதோ பெரிதாக சாதித்த ஒரு உணர்வு கிடைக்கும். எல்லாருக்கும் தேடல் இருக்கும். அது ஓரிடத்தில் நிறைவு பெறும். அது எனக்கு சபரிமலையில் நடந்தது. விரத காலமாக சொல்லப்பட்டுள்ள 48 நாட்களில் நாம் அனைத்து விதமான உணர்வுகளையும் கடந்து விடுவோம். அதன்பின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட இடர்பாடுகள் வந்தாலும் கடந்து செல்ல முடியும்” என ராஜ் கமல் கூறியிருப்பார்.