முருகனை நாடும் இளம் வயதினர்.. ஆன்மிக அனுபவங்களைப் பகிரும் வேல்முருகன்!
பிரபல பாடகர் வேல்முருகன் தனது ஆன்மீக அனுபவங்களைப் பற்றி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். தைப்பூச நாளில் பிறந்த அவர், முருகனின் அருளால் இசைத்துறையில் பாடகராக வெற்றி பெற்றதாகவும், சமீபகாலமாக முருகன் கோயில்களுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்

தமிழ்க்கடவுள் என கொண்டாடப்படுவர் முருகன் (Lord Murugan). தமிழ்நாட்டில் முருகனுக்கு அறுபடை வீடுகள் இருக்கும் நிலையில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட மற்ற நாடுகளிலும் முருகனுக்கு கோயில்கள் உள்ளது. சமீபகாலமாக முருகனை நாடி வருவோர் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சின்ன சின்ன கோயில் தொடங்கி ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு பெயர்களில் அருள்பாலித்து வரும் பெரிய கோயில் வரை முருகனை காண படையெடுத்து வருவோர் அதிகமாக உள்ளது. இப்படியான நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகரான வேல்முருகன் (Singer Velmurugan), ஒரு நேர்காணலில் முருகனுடனான ஆன்மிக அனுபவங்களைப் பற்றி பேசியிருப்பார். அதனைப் பற்றி நாம் காணலாம்.
அதாவது, “என்னுடைய சொந்த ஊர் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே இருக்கும் முதலை கிராமமாகும். இந்த கிராமத்திற்கு அருகில் தான் வடலூர் ராமலிங்க அடிகளாரின் வள்ளலார் கோயில் உள்ளது. அங்கு தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த நாளில் வடலூரில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவார்கள். அதேபோல் நான் பிறந்த முதலை கிராமத்தில் தைப்பூச திருநாளில் வேலுடன் புனித நீராடும் போது கருட பகவான் காட்சி கொடுப்பார். அந்த நேரத்தில் 1980 ஆம் ஆண்டு நான் பிறந்ததால் எனக்கு வேல்முருகன் என பெயர் வைத்தார்கள்.
முருகன் அருளால் உண்டான மாற்றங்கள்
தைப்பூசத்தில் பிறந்ததால் முருகனின் அருளால் அவரைப் பற்றிய நிறைய பக்தி பாடல்கள் பாடுவதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது. திருச்செந்தூரில் கந்த சஷ்டி மற்றும் சூரசம்காரம் திருவிழாவில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு காலகட்டமும் ஒவ்வொரு யுகம் என சொல்வார்கள். அதன்படி தற்போது நடைபெற்று வரும் காலம் முருகனின் யுகமாக உள்ளது. இளைஞர்கள் மத்தியில் முருகன் வழிபாடு அதிகமாக உள்ளது. கையில் முருகன் சம்பந்தப்பட்ட அடையாளங்களை டாட்டூவாக குத்திக் கொள்கிறார்கள்.
அந்த அளவுக்கு முருகன் மீது அளவில்லாத பக்தியை இளம் வயதினர் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய வாழ்க்கையில் முருகப்பெருமான் நிறைய மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறார் என்று சொல்லலாம். நான் தைப்பூசத்தில் பிறந்தேன் என்பதே ஒரு ஆச்சரியமாக இருக்கும் நிலையில் என்னுடைய முதல் படமும் முருகன் சம்பந்தப்பட்ட பெயரைக் கொண்டதாகவே அமைந்தது. முருகனின் தாயாரான பார்வதி பெயர் கொண்டுள்ள மீனாட்சி அம்மன் குடியிருக்கும் மதுரையை பற்றி தான் நான் முதல் பாடல் பாடினேன்.
அதாவது சுப்பிரமணியபுரம் என்ற படத்தில் இடம்பெற்ற மதுரை குலுங்க குலுங்க என்ற பாடல் தான் சினிமாவில் என்னுடைய முதல் பாடலாக அமைந்தது. இது இயற்கையாகவே எனக்கு அமைந்தது.
தொடர்ந்து நான் பாடிய அத்தனை பாடல்களும் ஹிட்டானது. திருச்செந்தூர் சென்றாலே நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமான ஒரு காத்திருந்து முருகனை தரிசனம் செய்துவிட்டு வருகிறார்கள். அந்த மாதிரி சூழலில் முருகனைப் பற்றி பாடுவதற்காகவே திருச்செந்தூருக்கு சென்றது எனக்கு மிகப்பெரிய பாக்கியமாக அமைந்தது.
நம் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகுந்த சிரமங்களுக்கிடையே, ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் சென்னைக்கு வந்து கஷ்டப்பட்ட காலத்தில் கூட வாழ்க்கையில் இன்றைக்கு நன்றாக இருக்கிறேன் என்றால் அது முருகனின் ஆசி தான்” என வேல்முருகன் கூறியிருப்பார்.