இட்லி பூவில் விசேஷ அர்ச்சனை.. செல்வ வளம் அருளும் முருகன் கோயில்!

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி அவதாரத்துடன் தொடர்புடைய இந்தக் கோயில், மாங்கனி பிரசாதம் மற்றும் பல்வேறு நேர்த்திக்கடன்களுக்காகவும் பிரசித்தி பெற்றதாக திகழ்கிறது. விபத்துக்கள் மற்றும் நோய்களிலிருந்து விடுபடவும், செல்வ செழிப்பு பெறவும் பக்தர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.

இட்லி பூவில் விசேஷ அர்ச்சனை.. செல்வ வளம் அருளும் முருகன் கோயில்!

குமரகிரி முருகன் கோயில்

Published: 

03 Jul 2025 12:02 PM

பொதுவாக மலைகள் அல்லது குன்றுகளின் மேல் முருகன் கோயில் இருப்பதால் அவனை நாம் குன்றின் மேல் இருப்பான் குமரன் என சொல்கிறோம். சொல்லப்போனால் தமிழ்நாடு மட்டுமல்ல உலக அளவில் கூட முருகன் கோயில்கள் ஏராளமானவை குன்றின் மீதும்,மலை மீதும் அமைந்துள்ளது. இவ்வளவு ஏன் அறுபடை வீடுகளில் திருச்செந்தூரை தவிர்த்து மற்ற ஐந்து படை வீடுகளும் இத்தகைய இடத்தில் தான் அமைந்துள்ளது. அந்த வகையில் சேலம் மாவட்டம் குமரகிரியில் அருள் பாலித்து வரும் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்தக் கோயில் ஆனது செங்குந்த கைக்கோளர் வகுப்பைச் சார்ந்த சன்னியாசி கருப்பண்ண சுவாமி முதலியார் என்பவரால் கட்டப்பட்டது. இந்த தண்டாயுதபாணி கோயில் தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12:30 மணி வரையும், மாலையில் மீண்டும் நான்கு மணி முதல் இரவு 8:30 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். விசேஷ நாட்களில் இரவு 9 மணி வரை நடைதிறப்பு நீட்டிக்கப்படுகிறது. இந்த கோயில் பற்றிய தகவல்களைக் காணலாம்.

தல வரலாறு 

மாங்கனிக்காக பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு முருகன் நேராக பழனி மலையை நோக்கி சென்றார். செல்லும் வழியில் தண்டாயுதபாணியாக அவர் இந்த குன்றின் மேல் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. ஒருமுறை பழனிக்கு பக்தர் ஒருவர் இந்த பாதை வழியாக செல்லும்போது இங்கு இளைப்பாறினார். அப்போது, “நான் தண்டாயுதபாணியாக இந்த இடத்தில் குடியிருக்கிறேன்” என அசரீரி ஒலித்துள்ளது. இதனைக் கேட்டு மிரண்டு போன அந்த பக்தர் ஒன்றும் புரியாமல் அங்கிருந்து நேராக பழனிக்கு சென்று விட்டார்.

அப்போது அடியார் வேடத்தில் வந்த முருகப்பெருமான் அந்த பக்தரிடம் ஒரு திருவோடு ஒன்றைக் கொடுத்து அசரீரி ஒலித்த இடத்தில் கோயில் கட்டும்படி தெரிவித்துள்ளார். அந்த திருவோட்டில் விழுந்த பணத்தின் மூலம் முருகப்பெருமாள் சொன்னபடி அந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. மாம்பழத்திற்காக கோபம் கொண்டு சென்ற முருகன் தங்கிய இடம் என்பதால் இந்த இடத்தில் பிரதானமான பிரசாதமாக மாங்கனி வைத்து வணங்கப்படுகிறது. மேலும் இந்த முருகனின் அருளால்தான் சேலம் பகுதியில் மாம்பழ உற்பத்தி சிறந்து விளங்குவதாகவும் நம்பப்படுகிறது.

கோயிலின் சிறப்புகள்

தண்டாயுதபாணி கோயிலில் விபத்தில் அடிபட்டவர்கள் மற்றும் மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் இருப்பவர்களின் உறவினர்கள் திரிசதை அர்ச்சனை என்ற பெயரில் ஒரு பூஜையை மேற்கொள்கின்றனர். இக்கோயிலில் இருந்து கிடைக்கும் விரிச்சி பூவில் சந்தனம் மற்றும் பன்னீர் கலந்து இந்த அர்ச்சனையானது செய்யப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து குணமடைவதாக நம்பப்படுகிறது.

அதனால் அதிகளவில் வாகனம் வைத்திருப்பவர்கள் இந்த கோயிலுக்கு வந்து விசேஷ பூஜை செய்கின்றனர்.  குமரன் குடியிருந்த இடம் என்பதால் இந்த ஊர் குமரகிரி என அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. வடக்கு (குபேர) திசையை நோக்கி கையில் தண்டத்துடன் தண்டாயுதபாணி அருள் பாலிக்கிறார். இவரை வணங்கினால் செல்வம் செழிக்கும் என நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

இந்த கோயிலில் முருகனுக்கு மாம்பழம் வைத்து வணங்கினால் திருமண தடை, புத்திர பாக்கியம், தொழிலில் வளர்ச்சி தடை உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கி நல்ல செய்தி வந்து சேரும் என்பது நம்பிக்கையாகும்.  மேலும் பிரகாரத்தில் ஐயப்பன், நவக்கிரகம், துர்க்கை ஆகியோருக்கு தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறியவுடன் முடிகாணிக்கை, காவடி எடுப்பது, பால்குடம் சுமப்பது, சேவல் காணிக்கை ஆகியவற்றை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.

இந்த கோயிலில் முருகனுக்கு உரிய அத்தனை விஷேச தினங்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஒரு முறை சென்று வாருங்கள்.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)