Vanamutti Perumal: சகல பாவங்களையும் நீக்கும் வானமுட்டி பெருமாள் கோயில்!
Kozhikuthi Perumal Temple: மயிலாடுதுறை கோழிகுத்தி வான்முட்டி பெருமாள் கோயில் தனிச்சிறப்பு மிக்கது. அத்தி மரத்தால் ஆன மூலவர் இத்தலத்தின் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இவரை தரிசித்தால் திருப்பதி, காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசித்த பலன் கிடைக்கும். சனி தோஷங்கள் நீக்கும் புண்ணிய தலமாகவும் விளங்குகிறது.

கோழிகுத்தி பெருமாள் கோயில்
தமிழ்நாடு முழுக்க உள்ள கோயில்களில் பல்வேறு பெயர்களில் பல்வேறு அவதாரங்களில் விஷ்ணு பகவான் அவதரித்துள்ளார். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் கோழிகுத்தி என்ற பகுதியில் அமைந்திருக்கும் வான்முட்டி பெருமாள் திருக்கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்தக் கோயிலானது தினமும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இக்கோயிலில் அருள் பாலிக்கும் மூலவரான வான்முட்டி பெருமாள் சிலை அத்தி மரத்தாலானது. மேலும் இந்த பெருமாள் கோயிலில் கருடாழ்வார், இராமானுஜர், விஸ்வக்ஸேனர், சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மர், நர்த்தன கிருஷ்ணர், சப்த ஆஞ்சநேயர் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.
கோயில் புராண வரலாறு
குடகு மலைச்சாரலில் முற்காலத்தில் நிர்மலன் என்ற அரசன் வாழ்ந்து வந்தான். அவன் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டு மிகவும் துன்பப்பட்ட நிலையில் ஒருமுறை காட்டின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அங்கு முனிவர் ஒருவர் வீணை மீட்டி அழகாக பாடிக் கொண்டிருந்தார். அவரிடம் நேராக சென்ற நிர்மலன் தன்னுடைய நோயை பற்றி வருந்தி முறையிட்டான்.
இதனைக் கேட்ட முனிவர் அவனுக்கு ஒரு மந்திரத்தை உபதேசம் செய்து அதை தினமும் தினமும் ஜெபிக்கும்படி கூறினார். அதன்படி நிர்மலலனும் அந்த மந்திரத்தை உருகி உச்சரிக்க தொடங்கினான். அப்போது வானில் அசரீரி ஒலித்தது.
அதில், “நான் பெருமாளின் குரலாய் ஒலிக்கிறேன். உனக்கு கடுமையான தோஷம் இருக்கிறது. இது நீங்க வேண்டும் என்றால் காவிரி கரை வழியாக உன் யாத்திரையை தொடங்க வேண்டும். உனக்கு வழிகாட்டியாக மூவலூரில் உள்ள சிவனான மார்க்க சகாயேஸ்வரர் வருவார். வழியில் இருக்கும் அனைத்து திருத்தலங்களிலும் புனித நீராடி உன் மேனி எங்கு பொன் வண்ணமாக மாறுகிறதோ அங்கேயே தங்கி விடு” என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி மன்னன் காவிரிக்கரை வழியாக தனது பயணத்தை தொடங்கி ஒரு இடத்தில் அவனது மேனி பொன்னிறமாக மாறுவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தான். பெருமாளுக்கு மனம் உருகி நன்றி கூறிய அவன் வழிபட்ட இடத்தில் ஒரு பெரிய அத்திமரம் தோன்றியது.
அந்த மரத்தில் பெருமாள் சங்கு, சக்கரம், கதை, அபயஹஸ்தம் ஆகியவற்றுடன் நிர்மலன் மன்னனுக்கு காட்சி கொடுத்தார். மன்னனின் பாவங்கள் உடனடியாக நீங்கியதால் இத்தலம் கோடிஹத்தி என அழைக்கப்பட்டு பின்னாளில் கோழிக்குத்தி என மருவியது.
கோடிஹத்தி என்றால் சகல பாவம் நீங்கும் இடம் என்பது பொருளாகும். இதன் பின்னர் அந்த மன்னர் பெருமாள் பக்தனாக மாறி மகரிஷியாக அவதரித்தார். பிற்காலத்தில் அவர் மக்களால் பிப்பல மகரிஷி என அழைக்கப்பட்டார். அவர் காவிரி கரையில் தவம் செய்த இடத்தில் இருக்கும் மண்டபம் பிப்பல மகரிஷி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: பித்ரு தோஷத்தை போக்கும் சீனிவாச பெருமாள்.. இந்த கோயில் தெரியுமா?
கோயிலின் சிறப்புகள்
இக்கோயிலின் அருள் பாலிக்கும் வான்முட்டி பெருமாளை தரிசனம் செய்தால் திருப்பதி ஏழுமலையானையும், சோளிங்கரில் கோயில் கொண்டிருக்கும் யோக நரசிம்மரையும், காஞ்சிபுரம் அத்தி வரதராஜரையும் ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும். சுமார் 800 ஆண்டு பழமையான இந்த கோயிலில் வேருடன் கூடிய அத்திமரம் இருப்பது சீனிவாச பெருமாளின் விஸ்வரூப தரிசனம் கிடைத்ததற்கான ஒரு அரிய காட்சியாக பார்க்கப்படுகிறது.
தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் தன்னுடைய தோஷத்தை நீக்கியதால் அத்தி மரத்தில் அவதரித்த பெருமாளுக்கு 15 அடி உயரத்தில் சிலை வடித்து பூஜை செய்ததாக வரலாறு இருக்கிறது. இவர் அத்தி மரத்தால் ஆனவர் என்பதால் தைலக்காப்பு மட்டும் சாத்தப்படுகிறது. அபிஷேகம் கிடையாது. உற்சவ மூர்த்தியாக இருக்கும் யோக நரசிம்மருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது.
இங்கு இருக்கும் ஆஞ்சநேயரை சப்தஸ்வர ஆஞ்சநேயர் என அழைக்கின்றனர். அவருடைய சிலையில் ஏழு இடங்களில் தட்டினால் ஓசை எழுவதால் இந்த பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திண்டுக்கலை ஆளும் சௌந்தரராஜ பெருமாள் -இந்த கோயில் சிறப்புகள் தெரியுமா?
மேலும் சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால் இன்னல்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த கோயிலில் பெருமாள் கூறிய அனைத்து விசேஷ தினங்களும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டாலும் வைகுண்ட ஏகாதசி மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. வாய்ப்பு கிடைப்பவர்கள் ஒருமுறை இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு பலன்களை பெறுங்கள்.
(ஆன்மிகம் மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)