மதுரை சித்திரை திருவிழா.. பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!
Madurai Chithirai thiruvizha: இன்று மே.1 தொழிலாளர் தின விடுமுறை என்பதால் முன்னெப்போதும் இல்லாத வகையில் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். டிரோன்கள் மூலம் கூட்டத்தைக் கண்காணிக்கவும், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்கவும் மாநகராட்சி நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், இன்று அதிகாலை லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக நடைபெற்றது. அழகர்மலையில் இருந்து மதுரைக்கு வருகை தந்த கள்ளழகர், தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் இருந்து இன்று அதிகாலை ‘ஆயிரம் பொன் சப்பரத்தில்’ புறப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அதிகாலை வேளையில் பச்சை பட்டுடுத்தி, தங்கக் குதிரை வாகனத்தில் ஏறி வைகை ஆற்றில் இறங்கினார். சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வைகை ஆற்றின் இருபுறமும் குவிந்து, பக்தி பரவசத்துடன் அழகரை வரவேற்றனர்.
மேலும் படிக்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா: மாசி வீதிகளில் அசைந்தாடி வந்த திருத்தேர் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
விண்ணதிர கோவிந்தா முழக்கம்:
காலை 5.50 மணியளவில், தங்கக் குதிரை வாகனத்தில் அமர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அழகர் ஆற்றில் இறங்கிய போது, அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…” என விண்ணதிர முழக்கமிட்டு, தோல் பைகளில் கொண்டு வந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து கள்ளழகரை வரவேற்றனர். அழகர் பச்சை பட்டுடுத்தி ஆற்றில் இறங்கினால் அந்த ஆண்டு நாடு செழிப்பாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
அடுத்தடுத்த நிகழ்வுகள்:
வைகை ஆற்றில் காலை 7.25 மணி வரை பக்தர்களுக்குக் காட்சி அளித்த கள்ளழகர், பின்னர் பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்யும் நிகழ்வும், வேடம் அணிந்த பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெற உள்ளது. இன்று இரவு 9 மணிக்கு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலுக்குச் செல்லும் கள்ளழகர், அங்கு தங்கி நாளை அதிகாலை பக்தர்களுக்கு ஏகாந்த சேவை வழங்குகிறார். நாளை மதியம் தேனூர் மண்டபத்தில் மண்டுக முனிவருக்குச் சாப விமோசனம் அளிக்கும் முக்கிய நிகழ்வு நடைபெற உள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
இன்று மே.1 தொழிலாளர் தின விடுமுறை என்பதால் முன்னெப்போதும் இல்லாத வகையில் லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். டிரோன்கள் மூலம் கூட்டத்தைக் கண்காணிக்கவும், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்கவும் மாநகராட்சி நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான ‘தசாவதாரக் காட்சி’ நாளை நள்ளிரவு ராமராயர் மண்டபத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சித்ரா பௌர்ணமி கிரிவலம்.. திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு இலவச பேருந்து இயக்கம்!