Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கூடவே வரும் பிரியாவிடை அம்மனின் மகிமை!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள பிரியாவிடை அம்மன், சுந்தரேஸ்வரருடன் பிரிக்க முடியாத சக்தியின் அம்சமாக திகழ்கிறார். சுந்தரேஸ்வரரின் கருவறையில் அமைந்துள்ள இவரை பக்தர்கள் காண முடியாது. சிவசக்தி அம்சத்தை குறிக்கும் இவர், சுந்தரேஸ்வரருடன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வார். அதனைப் பற்றிக் காணலாம்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்.. கூடவே வரும் பிரியாவிடை அம்மனின் மகிமை!
பிரியாவிடை அம்மன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 07 May 2025 14:24 PM IST

மதுரை சித்திரை திருவிழாவின் (Madurai Chithirai Thiruvizha) சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் 2025, மே 8 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ள நிலையில், இந்த நிகழ்வுகளில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடிக்கும் பிரியாவிடை அம்மனின் சிறப்புகள் பற்றி நாம் காணலாம்.மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் (Meenakshi Sundareswarar) திருக்கல்யாணம் நடைபெறும் போது ஒவ்வொரு வருடமும் இந்த தம்பதியினருடன் பிரியாவிடை அம்மன் வளம் வருவதை பலரும் பார்த்திருக்கலாம். சிலருக்கு இந்த அம்மனின் பின்னணி கதை தெரிந்திருக்கலாம். சிவனும் சக்தியும் ஒன்றுதான் என்பதை விளக்கும் வகையில் அருள் பாலிக்கும் இந்த பிரியாவிடை அம்மன் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்.

ஈசனான சுந்தரேஸ்வரரை விட்டு ஒரு நொடி கூட பிரிய மனம் இல்லாததால் தான் இந்த அம்மனுக்கு பிரியாவிடை அம்மன் என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. பிரியாவிடை அம்மன் மீனாட்சியம்மன் ஆலயத்தில் சுந்தரேஸ்வரர் இருக்கும் கருவறையில் தான் வீச்சி இருக்கிறார். ஆனால் இந்த அம்மனை கோயிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் பார்க்க முடியாது என்பது சிறப்பான ஒன்றாகும்.

பிரியாவிடை அம்மன் என அழைக்க காரணம்

சிவபெருமான் தனக்குள் அம்பிகையை வசப்படுத்தி சிவசக்தி சொரூபமாக அருள் பாலிக்கிறார். இதனால்தான் சிவன் சக்தி வேறு வேறு இல்லை என சொல்லப்படுகிறது. சிவலிங்கத்தின் மேற்பகுதியில் இருக்கும் பானம் சிவ வடிவமாகவும், பீடம் ஆவுடை என சொல்லப்படும் அம்பிகையின் அம்சமாகவும் உள்ளது. சிவசக்தி ரூபத்தை வெளிப்படுத்துவதற்காகவே இப்படி ஒரு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்பகாலகட்டங்களில் சிவனை பிரியாத ஆவுடை என அழைக்கப்பட்ட இந்த அம்மன் காலப்போக்கில் பிரியாவிடை அம்மன் என மருவியது. இவள் சிவனுக்குள் இருக்கும் சக்தியாக இருந்து வெளிப்படுகிறாள். மேலும் மிகவும் பழமையான சிவ ஆலயங்களில் கருவறையில் பார்த்தால் சிவலிங்கத்திற்கு இடது பக்கமாக அமர்ந்த நிலையில் ஒரு அம்மன் சிலை இருக்கும். இவள் போக சக்திகள் நிறைந்த அம்பிகை ஆவார். முழுக்க முழுக்க தன் கணவன் ஈசனுக்காகவே இருக்கும் இந்த பிரியாவிடை அம்மன் மதுரையில் பக்தர்களுக்காக மீனாட்சி அம்மனாகவும் கருவறையில் சிவபெருமானுக்கு பிரியாவிடை அம்மனாகவும் உள்ளார்.

வழிபட்டால் கிடைக்கும் சிறப்பு

ஒவ்வொரு நாளும் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் முன்பு இந்த அம்மனிடம் பூஜை செய்து அனுமதி பெற வேண்டும் என்பது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் பூஜையில் ஏதேனும் குறைகள் குற்றங்கள் நிகழ்ந்தால் இவரிடமே மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகும்.

பொதுவாக கோயில்களில் ஈசன் மற்றும் அம்பிகை ஆகியோர் தனித்தனியாக பவனி வருவார்கள். ஆனால் மீனாட்சியம்மன் கோயிலில் இந்தப் பிரியாவிடை அம்மன் தன் கணவர் சுந்தரேஸ்வரர் உடன் சேர்ந்து வருவாள். இவரை வழிபட்டால் நாம் வாழ்வில் இருக்கும் கவலைகள் அனைத்தும் நீங்கி நன்மைகள் பெருகும். மாங்கல்ய பலம் அதிகரிக்கும். கணவர் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ்வார் என்பது நம்பிக்கையாக உள்ளது.

(ஆன்மிக நம்பிக்கையின்படி இந்த தகவலானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)