Kamakshi Amman: ஏலக்காய் மாலை வழிபாடு.. திருமண வரன் அருளும் காமாட்சி அம்மன்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அருள்பாலிக்கும் கல்யாண காமாட்சியம்மன் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. கோயிலின் சிறப்பு வரலாறு, தினசரி மற்றும் விசேஷ பூஜை நேரங்கள், குழந்தைகள் தங்கள் கைகளால் மேற்கொள்ளும் அபிஷேகம், திருமண தடை நீங்க ஏலக்காய் மாலை சாற்றுதல் போன்ற முக்கிய அம்சங்கள் பற்றி காணலாம்.

Kamakshi Amman: ஏலக்காய் மாலை வழிபாடு.. திருமண வரன் அருளும் காமாட்சி அம்மன்!

கல்யாண காமாட்சி அம்மன்

Published: 

06 Jul 2025 13:00 PM

பொதுவாக காமாட்சியம்மன் என்றால் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது காஞ்சிபுரத்தில் வீற்றிருப்பவள் தான். ஆனால் காமாட்சியம்மனுக்கு எல்லா ஊரிலும் தனி கோயில் இல்லை என்றாலும் ஒவ்வொரு கோயிலிலும் தனி சன்னதியானது அமைக்கப்பட்டிருக்கிறது. புராண ரீதியாக காமாட்சி மிக முக்கிய தெய்வமாக வழிபடப்படுகிறாள். பண்டாசுரன் எனப்பட்ட அரக்கனை அழிக்க பராசக்தி காமாட்சியம்மனாக அவதாரம் எடுத்தாக சொல்லப்படுகிறது. தன்னை வழிபடும் பக்தர்களுக்கு தாயாக இருந்து நல்வழிக்காட்டும் காமாட்சியம்மனை வழிபட்டால் பெரும் பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருக்கும் காமாட்சியம்மன் கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்த கோயிலானது தினசரி காலை 6 மணி முதல் 11 மணி வரை திறந்திருக்கும். அதேபோல் மாலையில் 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் சாமி தரிசனம் செய்யும் வகையில் நடை திறந்திருக்கும்.

கோயிலின் சிறப்புமிக்க வரலாறு 

காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மனின் மகிமை அறிந்த இப்பகுதி மக்கள் இங்கேயும் அம்பாள் அருள்பாலிக்க வேண்டும் என விரும்பினர். அதன்படி இக்கோயில் உருவானது. மேலும் கோயில் கட்டுவதற்காக கேரளாவில் பிரசன்னம் பார்க்கப்பட்டது. அதில் குழந்தைகள் தங்கள் கையால் காமாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்தால் அவர்கள் வாழ்க்கையிலும் கல்வியிலும் மிகப்பெரிய வளர்ச்சியை பெறுவார்கள். யோகமும் ஞானமும் பெற்று நல் ஆரோக்கியத்துடன், இறையுணர்வுடன் திகழ்வார்கள் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இந்த கோயில் கட்டப்பட்டவுடன் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாத உத்திர நாளில் வருஷாபிஷேக விழா நடைபெறும். அப்போது ஒரு வயது முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் அம்பாளுக்கு அபிஷேகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கோயிலின் சிறப்புகள்

இந்தக் கோயிலில் அழகே உருவமாக காமாட்சியம்மன் கிழக்குப் பார்த்தபடி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள். அது மட்டுமல்லாமல் பாலமுருகன், பால விநாயகர், நவகிரகங்கள், உற்சவம் மூர்த்திகளாக ஏகாம்பரேஸ்வரர் மற்றும் காமாட்சி அம்பாள் ஆகியோரும் காட்சி கொடுக்கின்றனர். இந்த கோயிலில் ஆடி மாதம் முழுவதும் மிகவும் விசேஷமாக வழிபாடுகள் நடைபெறுகிறது. அது மட்டுமல்லாமல் சித்திரை மாதமும், நவராத்திரி திருவிழாவும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த கோயிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் வருவதாக சொல்லப்படுகிறது. இங்கு வழிப்பட்டால் கேட்டதை எல்லாம் காமாட்சி அம்மன் தருவாள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக ஏலக்காய் மாலை சாற்றி வழிபட்டால் திருமண தடை உள்ளவர்களுக்கு விரைவில் வரன் கைகூடும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.  இதனால் அப்பகுதி மக்களால் கல்யாண காமாட்சி அம்மன் என அழைக்கப்படுகிறாள்.

அதன்படி 25 கிராம் ஏலக்காயை எடுத்துக்கொண்டு அதனை தண்ணீரில் நன்றாக ஊற வைக்க வேண்டும். பின் ஊசி நூல் கோர்த்து மாலையாக மாற்ற வேண்டும். அந்த மாலையை அம்பாளுக்கு சாற்றி வழிபட வேண்டும்.  வேண்டிக் கொண்ட பக்தரின் பெயர், முகவரி ஆகியவற்றை கோயில் நிர்வாகம் பதிவு செய்து பதிவு எண் ஒன்றை கொடுக்கிறார்கள். அந்த பதிவு எண்ணையும் தேதியையும் ஏலக்காய் மாலையில் குறித்து ஒரு டப்பாவில் பத்திரமாக வைத்து விடுகிறார்கள்.

சம்பந்தப்பட்டவர்களுக்கு திருமணம் நடந்ததும் சங்கடஹர சதுர்த்தி அன்று நடைபெறும் சிறப்பு ஹோமத்தில் அந்த மாலையை சமர்ப்பிக்கிறார்கள். வாய்ப்பு இருந்தால் நீங்களும் ஒருமுறை சென்று வழிபட்டு பலன்களைப் பெறுங்கள்.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வமாக விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)