Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Guru Peyarchi 2025: எல்லாம் சாதகம் தான்.. விருச்சிகத்துக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!

குரு பகவான் ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 7 வரை குறைவான நன்மைள் தான் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வாக்குவாதங்கள், திருமணத் தடைகள், உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம். பண விஷயத்தில் கவனம் அவசியம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Guru Peyarchi 2025: எல்லாம் சாதகம் தான்.. விருச்சிகத்துக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!
விருச்சிக ராசிக்கான பலன்கள்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 08 May 2025 17:32 PM

ஜோதிட சாஸ்திரத்தை பொருத்தவரை கிரகங்களின் பெயர்ச்சி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பல்வேறு மாற்றங்களை உண்டாக்கும் என ஐதீகமாக உள்ளது. இந்த கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் குறிப்பிட்ட காலம் சஞ்சரிப்பது வழக்கம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 11ம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி மே 14ஆம் தேதியும் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால் விருச்சக ராசியில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும் என்பது பற்றி நாம் காணலாம்.

இந்த ராசியினருக்கு 2025 அக்டோபர் 7ம் தேதி வரை குரு பகவான் மிதுன ராசியில் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் குறைவாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் நெருங்கிய உறவினர்களிடம் தேவையில்லாத வாக்குவாதம் உண்டாகலாம். திருமண முயற்சிகள் இழுபறியாக நடக்கலாம். சிறு சிறு உடல் உபாதைகளால் அவதிப்படும் சூழல் உண்டாகலாம். மருத்துவச் செலவுகள், சிறு விஷயங்களுக்கு கூட அதிகாலைச்சல் ஆகியவை ஏற்படலாம்.

பண விஷயத்தில் கவனம் தேவை

பிறரிடம் பணம் கொடுத்து ஏமாற வாய்ப்புள்ளதால் விருச்சக ராசியினர் மிக கவனமாக அடுத்த ஒரு வருட காலத்திற்கு பண விஷயத்தில் இருக்க வேண்டும். 2025 அக்டோபர் 8ம் தேதியில் இருந்து உங்கள் ராசிக்கு குருபகவானின் சுகமான பார்வை கிடைக்கப் போகிறது. அதே நேரத்தில் அஷ்டம ராசியில் சனி மற்றும் ராகுவின் கூட்டு சேர்க்கையால் இதுவரை வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஊதிய உயர்வு தொடர்பான நல்ல செய்தி வந்து சேரும்.

பதவி உயர்வு, பணியிட மாற்றம் போன்ற முயற்சிகளுக்கு வெற்றி கிட்டும். உங்கள் ராசிக்கு குரு பகவான் வாக்கு, குடும்பம் போன்றவற்றிற்கு அதிபதியாவதால் நீங்கள் யோகக்காரர்களாக மாறப் போகிறீர்கள். நீங்கள் விரும்பியது அனைத்தும் இந்த காலகட்டத்தில் நடைபெறும்.

தொழில் துறை எப்படி இருக்கும்?

தொழிலைப் பொறுத்தவரை அடுத்த ஒரு வருட காலத்திற்கு குரு பகவான் உங்களுக்கு சாதகமாக இருக்கிறார். இதன் காரணமாக சந்தைகளில் எவ்வளவு பெரிய போட்டிகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் வென்று சாதிப்பீர்கள். விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் சூழல் கைகூடும். குருபகவான் கொடுப்பதில் கொஞ்சம் தாமதம் செய்தாலும் கண்டிப்பாக உங்களுக்கு உரியதை தருவார் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.

ஆனால் இந்தக் குரு பெயர்ச்சி காலம் உங்களுக்கு பெரிய அளவில் நன்மை இருக்காது என்பதை நினைவில் வைத்து செயல்படுங்கள். 2025 அக்டோபர் 8ம் தேதியில் இருந்து தான் உங்களுக்கான நேரம் தொடங்குகிறது.

பிற துறைகளில் வாய்ப்புகள் தேடியும் தங்களை வளர்த்துக் கொள்ள உதவும் விருச்சக ராசி காரர்களுக்கும் அக்டோபர் மாதத்தில் இருந்து தான் சரியான காலம் அமைவதால் அதுவரை சற்று பொறுமையாக இருந்து உங்கள் முயற்சிகளை கைவிடாமல் இருப்பது நல்லது.

எச்சரிக்கையுடன் அணுகுங்கள்

மேலும் மாணவ மாணவியர்களுக்கு இந்த காலகட்டத்தில் பாடங்களில் கவனம் குறையும். சமூக வலைதளங்களுக்கு அடிமையாகாமல் இருப்பது நல்லது. உங்களது நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் நண்பர்களின் பழக்கத்தை கைவிடுங்கள். அனைத்து விஷயங்களையும் முன்னெச்சரிக்கையுடன் அணுகுங்கள்.

விவசாயத்தைப் பொறுத்தவரை நல்ல விளைச்சலும் வருமானமும் இருக்கும் பட்சத்தில் அடிப்படை வசதிகளுக்கு எந்தவித குறைவும் இருக்காது. மிதமான அளவு மழைப்பொழிவு இருக்கும். புதிய நிலம் வாங்கும் வாய்ப்புகள் அமையும். கால்நடைகள் பராமரிப்பில் பணம் அதிகம் செலவாகும். புதிய கடன்கள் வாங்க வேண்டிய நிலைமை வரலாம்.

பெண்களைப் பொறுத்தவரை சப்தம ஸ்தானம் ஆகிய ரிஷப ராசியில் இருந்து குரு பகவான் மிதுன ராசிக்கு செல்வது அனுகூலமான கிரக சஞ்சாரமாகும். இந்த காலகட்டத்தில் திருமணமான பெண்களுக்கு அவர்கள் கணவருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில்லாத பெண்களுக்கு தகுதிக்கேற்ப வேலை கிடைக்கும். இதுவரை பிரச்சினையாக இருந்த விஷயங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்து நிம்மதி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது.

விருச்சக ராசிக்காரர்கள் வியாழக்கிழமை தோறும் ஏழைப் பெண் ஒருவருக்கு புத்தாடை மற்றும் உணவு வழங்கி சிறப்பித்தால் அதற்கேற்ப பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

(ஜோதிட நம்பிக்கையின்படி இந்த செய்தியில் உள்ள தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பாகாது)