Guru Peyarchi 2025: பிரச்னைகள் தீரும்.. சிம்ம ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!

2025-ம் ஆண்டு மே மாதம் நிகழும் குரு பெயர்ச்சி ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு நடைபெருகிறது. இதனால் சிம்ம ராசிக்கு குரு லாப ஸ்தானத்திற்கு வருவதால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள், திருமணம், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி போன்ற நன்மைகள் ஏற்படும். வேலை, வியாபாரம், அரசியல் என அனைத்து துறைகளிலும் வளர்ச்சி உண்டாகும்.

Guru Peyarchi 2025: பிரச்னைகள் தீரும்.. சிம்ம ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்!

சிம்ம ராசி பலன்கள்

Published: 

05 May 2025 12:14 PM

நவகிரகங்களில் ஒன்றான வியாழனின் அதிபதியாக கருதப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவது வழக்கமான நிகழ்வாகும். 2025 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சியானது (Guru Peyarchi) மே 11 அன்று வாக்கிய பஞ்சாங்கத்தின் படியும், மே 14 அன்று திருக்கணித பஞ்சாங்கத்தின் படியும் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். பொதுவாக ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி என்பது 12 ராசிகளிலும் மிகப்பெரிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடியது. அந்த வகையில் 2025 குரு பெயர்ச்சியால் சிம்ம ராசிக்கு (Leo Zodiac) என்னென்ன விளைவுகள் உண்டாகும் என்பது பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

இந்த ராசிக்கு குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதனால் பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. உங்களுக்கு ஆதரவாக குரு பகவான் இருப்பதால் குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிறப்பான திருமண வரன் அமையும். கணவன் – மனைவியரிடையே ஒற்றுமையும் நெருக்கமும் அதிகரிக்கும். புதுமண தம்பதிகளுக்கு அல்லது நீண்ட காலமாக குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தால் ராசிகளுக்கு சாதகமாக தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

பழைய கடன் பிரச்னை தீரும்

உத்தியோகத்தை பொருத்தவரை சனி பகவானின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர் ராகுவுடன் சேர்ந்து ராசிக்கு ஏழாவது இடத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் தற்காலிகமாக பணியாற்றி வருபவர்களுக்கு வேலை நிரந்தரமாகும். வேலை மாற்றம் தொடர்பான தகவல்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு ஆகியவை பற்றி பேசப்படும். பழைய கடன்களில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உண்டாக்கும். மொத்தத்தில் நஷ்டம் இல்லாமல் உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தைப் பெற்று மகிழ்வீர்கள்.

அதேசமயம் கும்ப ராசியில் ஏற்பட்டுள்ள சனி மற்றும் ராகுவின் கூட்டு சேர்க்கை காரணமாக சரிவை சந்தித்த வரும் வர்த்தக துறையினருக்கு குரு பெயர்ச்சி மிகப்பெரிய வரப்பிரசாதம் என சொல்லலாம். வியாபாரம் மற்றும் தொழில் வளர்ச்சி மிகவும் திருப்திகரமாக இருக்கும். லாபம் அதிகரிக்கும். அதே வேளையில் சமூகத்தில் உங்களுக்கு நல்ல அந்தஸ்து கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தேவைப்படும் இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும்.

எல்லாமே பாசிட்டிவ் தான்

அரசியலில் இருப்பவர்களுக்கு குரு பகவான் சுக்கிரனை பார்வையிடுவதால் குரு பெயர்ச்சிக்கு பின்னால் வரும் காலங்கள் அனைத்தும் செல்வாக்கு மிக்கதாக இருக்கும். மற்ற கட்சிகளும் உங்கள் மீது மிகப்பெரிய அளவில் மரியாதை செலுத்துவார்கள். வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறுவது சிறந்தது. அரசியல் வாழ்க்கையை மாற்றியமைக்கும் வகையில் வாய்ப்புகள் பிரபலங்கள் மூலம் வந்து சேரும்.

புரட்டாசி மாதம் வரை சிம்ம ராசியினருக்கு கல்வித்துறை பாசிட்டிவாகவே உள்ளது. படிப்பில் தீவிரமாக கவனம் செலுத்துவீர்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் உயர்கல்வியை தேர்வு செய்வீர்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிட்டும். வெளிநாடு சென்று பயில்வதற்கான வாய்ப்புகள் அமையும்.

வீண் வாக்குவாதங்கள் வேண்டாம்

விவசாயம் செய்யும் சிம்ம ராசியினருக்கு விளைச்சலும் வருமானமும் அபரிமிதமாக இருக்கும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு லாபகரமானதாகவே அமையும். பெண்களைப் பொறுத்தவரை சப்தம ஸ்தானத்தில் ராகு மற்றும் சனியின் இணைவு நேரத்தில் குருபகவானின் பார்வை கிடைப்பது அதிர்ஷ்டம் கொடுக்கக்கூடியது. கணவன் மனைவியரிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் அவை உடனடியாக நீங்கும். குடும்பத்தினரை அனுசரித்து செல்வது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

குழந்தைகளை அவர்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு கொண்டு செல்வது உயர்வு தரும். எக்காரணம் கொண்டும் சிறு விஷயத்திற்கெல்லாம் கணவருடன் வாக்குவாதம் செய்து மன அமைதியை கெடுக்க வேண்டாம். ஒவ்வொரு சனிக்கிழமையிலும் சிம்ம ராசியினர் பசுவிற்கு அகத்திக் கீரை அல்லது ஏதேனும் உணவுகள் வாங்கி தானம் செய்யலாம்.

(ஜோதிட நம்பிக்கையின்படி மட்டுமே இந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த அறிவியல் விளக்கமும் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)