Vinayagar Chaturthi: விநாயகர் சதுர்த்தி விரதத்துக்கு இவ்வளவு பலன்களா?

விநாயகர் சதுர்த்தி விரதம் என்பது அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒன்றாகும். இதனை சூரிய உதயம் அல்லது சதுர்த்தி திதி தொடக்க நேரத்தில் தொடங்கலாம். காலை, மாலை வழிபாடு, நைவேத்தியம், தானம், கோயில் செல்லுதல் ஆகியவை விரத வழிபாட்டில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Vinayagar Chaturthi: விநாயகர் சதுர்த்தி விரதத்துக்கு இவ்வளவு பலன்களா?

Ganesh Chaturthi Fasting

Updated On: 

26 Aug 2025 14:10 PM

பொதுவாக இந்து மதத்தில் விநாயகப் பெருமானை வணங்காமல் நாம் எந்த ஒரு செயலையும் செய்வது இல்லை. நாம் மேற்கொள்ளும் காரியங்களில் தடைகள் இல்லாமல் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக விநாயகரை வழிபட்டும், அவருக்கு சிதறு தேங்காய் உடைத்தும் நாம் வணங்குவோம். அதேபோல் எந்த ஒரு பண்டிகையாக இருந்தாலும் அங்கு விநாயகர் உருவம் பிடிக்கப்பட்டு வைத்து வழிபாடு நடைபெறும். இப்படியான விநாயகர் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திரியில் பிறந்ததாக ஐதீகமாக பார்க்கப்படுகிறது. இந்த நாள் விநாயகர் சதுர்த்தி என இந்தியா முழுவதும் மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது இந்நாளில் திரும்பும் திசை எங்கும் வண்ணமயமான பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பின் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.

அதேபோல் வீட்டிலும் கோயில்களிலும் விநாயகப் பெருமானுக்கு பல்வேறு வகையான சிறப்பு வழிபாடுகள் இந்நாளில் நடைபெறும். இப்படியான நிலையில் விநாயகர் சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபட்டால் பல்வேறு பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் நம் வாழ்வில் இருக்கும் சங்கடங்கள் நீங்கி, தடைகள் விலகி, செல்வ செழிப்புடன் உடல் ஆரோக்கியம், மற்றும் மன அமைதியும் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது . அப்படிப்பட்ட விநாயகர் சதுர்த்தி விரதத்தின் வளங்களை பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

Also Read: சென்னை மக்களே அலர்ட்.. மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. டைமிங் இதுதான்!

யாரெல்லாம் விநாயகர் சதுர்த்தி விரதம் இருக்கலாம்?

விநாயகர் சதுர்த்தி விரதம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மேற்கொள்ளலாம். அதனை எப்படி மேற்கொள்கிறோம் என்பதை முடிவு செய்துக் கொள்ளுங்கள். குழந்தைகள், பெரியவர்கள் உடல் நலத்தை கடினப்பட்டு வருத்த வேண்டாம். பால், பழம் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். அதேசமயம் முடிந்தவர்கள் எந்தவித உணவும் எடுத்துக்கொள்ளாமல் விரதம் மேற்கொள்ளலாம். இந்த விரதத்தை சதுர்த்தி திதி தொடங்கும் நேரத்தில் தொடங்கலாம். அல்லது விநாயகர் சதுர்த்தி நாளின் சூரிய உதயம் காலத்தில் ஆரம்பிக்கலாம்.

2025 ஆம் ஆண்டு சதுர்த்தி திதியானது ஆகஸ்ட் 26 ஆம் தேதி பிற்பகல் 2.22 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 27ம் தேதி பிற்பகல் 3.52 மணி வரை இருக்கிறது.

Also Read: Ganesh Chaturthi Special: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. ஈஸியான மோதிச்சூர் லட்டை யானைமுகத்தானுக்கு படையுங்கள்..!

விரத வழிபாடு

இந்நாளில் அதிகாலையில் எழுந்து புனித நீராட வேண்டும். காலை, மாலை என இருவேளைகளிலும் விநாயகருக்கு வீட்டில் வழிபாடு செய்ய வேண்டும். அப்போது கொழுக்கட்டை, அவல் பொரி, இனிப்புகள், சர்க்கரை பொங்கல், சுண்டல் என பலவிதமான நைவேத்தியங்கள் படைக்க வேண்டும். பூஜை வழிபாட்டின்போது விநாயகருக்கு உகந்த பூக்கள், முக்கியமாக அருகம்புல் இருக்க வேண்டும்.

விநாயகரை வழிபடும்போது அவருக்குரிய மந்திரங்கள், பாடல்கள் பாடி வணங்கலாம். எதுவும் தெரியாவிட்டால் கணபதியாய நமஹ என உச்சரிக்கலாம். முடிந்தால் இந்நாளில் தானம் செய்யுங்கள். அதேபோல் அருகிலிருக்கும் விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள். மாலையில் விளக்கேற்றி வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யலாம். இத்தகைய விநாயகர் சதுர்த்தி விரதம் இருந்தால் வாழ்க்கையில் ஏற்பட்ட குழப்பம் நீங்கி தெளிவு கிடைக்கும். வாழ்க்கை இன்பமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் கிடையாது. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)