Evil Eye: கண் திருஷ்டி நீக்கும் ஊமத்தங்காய் தீப வழிபாடு!
ஊமத்தங்காய் தீப வழிபாடு கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை சக்திகளை நீக்குவதற்கான பரிகாரமாக கருதப்படுகிறது. ஒன்பது ஞாயிற்றுக்கிழமைகள் தொடர்ந்து ஊமத்தங்காயில் இலுப்பை எண்ணெய் விளக்கேற்றி சிவபெருமானை வழிபடுவது ஏராளமான நன்மைகளை தரும் என நம்பப்படுகிறது. அதேபோல் ஊமத்தங்காய், இலை, பூக்களை மஞ்சள் நீரில் கழுவி, வீட்டு நிலைப்படியில் கட்டலாம்.

ஊமத்தங்காய் தீபம்
வாழ்க்கையில் நாம் நல்ல நிலையில் இருந்து, திடீரென கீழ் நிலை நோக்கி சென்றால் உடனே அதனை திருஷ்டி பட்டு விட்டது என சொல்வார்கள். கண் திருஷ்டி என்பது எதிர்மறையான விஷயமாக பார்க்கப்படுகிறது. அது யாரிடம் இருந்து வேண்டுமானாலும், எந்த விஷயத்தில் வேண்டுமானாலும் வரலாம் என நம்பப்படுகிறது. உதாரணமாக பொறாமை, இயலாமை போன்றவை இருக்கும்போது கண் திருஷ்டியின் தாக்கம் பொல்லாததாக இருக்கும் என கருதப்படுகிறது. சிலர் இதனை மூட நம்பிக்கை என சொன்னாலும், நூற்றில் 90 பேருக்கு கண் திருஷ்டி மேல் முழு நம்பிக்கையானது உள்ளது. சாஸ்திரத்திலும் இதற்கான பரிகாரங்களும் சொல்லப்பட்டுள்ளது. அப்படியாக கண் திருஷ்டி நீங்க ஊமத்தங்காய் தீப வழிபாடு செய்யலாம் என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
வழிபாடு செய்வது எப்படி?
தெய்வ சக்தி நிறைந்த செடிகளில் ஒன்றாக இருப்பது ஊமத்தம் செடி. இதன் காய், இலை, பூ என அனைத்தும் எதிர்மறை சக்திகளை விரட்டுவதற்கு பரிகாரத்தில் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. பொதுவாக ஊமத்தம் காய்க்கு கெடுதலை அகற்றும் சக்தி இருப்பதாக பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்படியான நிலையில் திருஷ்டி போன்ற எதிர்மறை சக்தியை வீட்டிலிருந்து நீக்குவதற்கு ஊமத்தங்காய் தீபம் சிறந்த பரிகாரமாக அமைகிறது.
Also Read: கண் திருஷ்டியால் அவதியா? – செவ்வாய்கிழமை செய்ய வேண்டிய அனுமன் வழிபாடு
அதேசமயம் இந்த ஊமத்தங்காய் மற்றும் பூவை எடுத்துக்கொண்டு வழிபாடு செய்யலாம். வீட்டின் அருகில் இவை இல்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இரண்டு பொருட்களையும் மஞ்சள் கலந்த தண்ணீர் கொண்டு நன்றாக கழுவ வேண்டும். அவற்றில் உள்ள ஈரம் போக சிறிது நேரம் காய விட வேண்டும். பின்னர் ஒரு மஞ்சள் துணியில் குலதெய்வத்தை வேண்டி ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அதனுடன் இந்த இரண்டையும் சேர்த்து கட்டி வீட்டின் நிலைப்படியில் இறுக கட்ட வேண்டும். வீட்டில் தெய்வ வழிபாடு செய்யும்போது தீபம் காண்பிக்கும் போது இதற்கும் காட்டலாம். இதனால் கெட்ட சக்திகள் வீட்டை விட்டும், நம்மை நெருங்காமலும் அகலும்.
ஊமத்தங்காய் தீப வழிபாடு
ஊமத்தங்காய் எடுத்து அதன் காம்புகளை நீக்க வேண்டும். பின்னர் அதில் சிறிய துளை போட்டு உள்ளிருக்கும் விதைகளை அகற்ற வேண்டும். இதனைத் தொடர்ந்து அதில் சிறிது வெண்கடுகு போட்டு ஒரு சிறிய மண் விளக்கின் மீது ஊமத்தங்காயை வைத்து அதில் இலுப்பை எண்ணெய் மட்டுமே ஊற்ற வேண்டும்.
Also Read: Evil Eye: கண் திருஷ்டி பிரச்னையா?.. வீட்டு வாசலில் இந்த சின்ன விஷயம் செய்தாலே போதும்!
பஞ்சு திரி போட்டு பூஜை அறையில் வைத்து தீபம் ஏற்றி சிவபெருமானை வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஒன்பது ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து இந்த தீபத்தை ஏற்றி வந்தால் வீட்டில் உள்ள கண் திருஷ்டி நீங்கும். மேலும் வறுமை, நிதி பற்றாக்குறை, இல்வாழ்க்கை பிரச்சனை உள்ளிட்ட அனைத்து எதிர்மறை நிகழ்வுகளும் விட்டோழியும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
(இறை நம்பிக்கை அடிப்படையில் இடம் பெற்றிருக்கும் இந்த தகவல்களுக்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)