Diwali 2025: தீபாவளி நாளில் மறந்தும் கூட செய்யக்கூடாத விஷயங்கள்!
Diwali Rituals: தீபாவளி பண்டிகையன்று மகாலட்சுமியின் அருளைப் பெற, நாம் தவிர்க்க வேண்டிய சில முக்கிய செயல்கள் உள்ளதைப் பற்றிக் காணலாம். தாமதமாக எழுதல், பெரியோர்களை மதிக்காமை, வீட்டை அசுத்தமாக வைத்திருத்தல், சண்டை சச்சரவுகள் மற்றும் போதைப் பொருள் பயன்பாடு போன்றவை லட்சுமி கடாட்சத்தைத் தடுக்கும் என சொல்லப்படுகிறது.

தீபாவளி
தீபாவளி பண்டிகை அனைத்து மத மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகையாகும். இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் அமாவாசை திதி கணக்கிட்டு கொண்டாடப்படும். கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்ததன் காரணமாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் எண்ணெய் குளியல், புத்தாடை அணிதல், இறை வழிபாடு, இனிப்பு வழங்குதல், பட்டாசு வெடித்தல் என நடைமுறை சடங்குகளும் உள்ளது. இப்படியான நிலையில் தீபாவளி நாளில் நாம் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன என்பது பற்றிக் காணலாம்.
தீபாவளி நாளில் செய்யக்கூடாத விஷயங்கள்
தீபாவளி நாளில் லட்சுமி தேவியை மகிழ்விக்க பல்வேறு வகையான வழிபாடு முறைகளையும், விதிமுறைகளையும் நாம் கடைபிடிக்கிறோம். இதனை நாம் பின்பற்றும்போது லட்சுமி தேவியின் பரிபூரண அருள் நமக்கு கிடைத்து வாழ்க்கை வசமாகும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
Also Read: தீபாவளிக்குப் பின் இந்த 4 ராசிகளுக்கும் நல்ல நேரம் பிறக்கும்!
அந்த வகையில் பொதுவாக சிலருக்கு தாமதமாக எழுந்திருக்கும் பழக்கம் இருக்கும். சிலர் தீபாவளியை வழக்கமான ஏதோ தூங்குவதற்கு விட்ட விடுமுறை போல கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அன்றைய நாளில் அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நாளில் சூரிய உதயம் வரை தூங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு மகாலட்சுமியின் அருள் ஒருபோதும் கிடைக்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தீபாவளி நாளில் நாம் பின்பற்றும் மதத்திற்கும் நம்பிக்கைகளுக்கும் எதிராக எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது. மேலும் இந்நாளில் பெற்றவர்களையும், பெரியவர்களையும் மதிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கிறேன் என்கிற பெயரில் சிலர் பெரியவர்களிடம் வாக்குவாதம் செய்வார்கள். இதனால் லட்சுமி தேவியின் அருளும் கிடைக்காது. வறுமை தான் மிஞ்சும் என கூறப்பட்டுள்ளது.
தீபாவளி நாளில் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கும் முந்தைய நாளே சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் வீட்டை பக்தி மயமாக மாற்ற அகர்பத்திகள், சாம்பிராணி கோன்கள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
தீபாவளி என்று யாரிடமும் கோபப்படவோ சத்தமாக பேசவோ கூடாது என சொல்லப்படுகிறது. இந்த நல்ல நாளில் வீட்டில் அமைதியான மற்றும் இனிமையான வார்த்தைகளை பராமரிக்க வேண்டும். அமைதி இருக்கும் இடத்தில் லட்சுமி தேவி அருள் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல் சிலர் இந்நாளில் பகல் அல்லது மாலை நேரத்தில் தூங்குவது வழக்கமாக உள்ளது.
Also Read: Diwali 2025: நெருங்கும் தீபாவளி.. 12 ராசிகளும் வாங்க வேண்டிய பொருட்கள்!
ஆனால் இந்த சிறப்பு நாளில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோரை தவிர ஆரோக்கியமான நபர்கள் பகல் நேரங்களில் தூங்கக் கூடாது. அவ்வாறு செய்பவர்கள் வறுமையை சந்திப்பார்கள் என சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. மேலும் சண்டை சச்சரவுகள் இல்லாமல் ஒரு நல்ல நாள் என்றும் கழியாது என சொல்வார்கள். அந்த அளவுக்கு குடும்ப உறுப்பினர்கள் இடையேயும் அல்லது அக்கம் பக்கத்தினர் இடையேயும் ஏதேனும் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டால் சமாதானம் செய்து அந்த நல்ல நாளை யாருக்கும் பாதகம் இல்லாமல் சிறப்பாக கொண்டாடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதைத் தவிர வாக்குவாதம், தகாத வார்த்தைகளை பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. இது லட்சுமி தேவியின் அருள் கிடைக்காமல் போவதற்கான முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் விசேஷ நாள் என்பதால் சிலர் இந்நாளில் மது போன்ற போதைப் பொருள்களை உட்கொண்டு கொண்டாடுவது வழக்கம்.
ஆனால் தீபாவளி நாளில் மது அருந்துபவர்கள் எப்போதும் ஏழைகளாகவே இருப்பார்கள். அவர்களால் வீட்டின் அமைதி சீர்குலைந்து வீட்டில் உள்ள அனைவரும் மன அழுத்தத்தை எதிர்கொள்பவர்களாக இருப்பார்கள் என சொல்லப்படுகிறது.
(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)