ஜோதிடத்தில் கிரக பிரச்னையா?.. பசுவிற்கு இந்த உணவு தானம் கொடுக்கலாம்!
இந்து மதத்தில் பசு கடவுளின் அம்சமாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் கிரகக் குறைபாடுகள் இருந்தால், பசுவிற்கு உணவு அளிப்பது மூலம் அவற்றை சரிசெய்யலாம் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் நவக் கிரகங்களின் தாக்கத்தைக் குறைக்க பசுவிற்கு சில உணவுகளை அளிக்கலாம். அதனைப் பற்றி காண்போம்.

பசுவுக்கு உணவு தானம்
இந்து மதத்தைப் பொறுத்தவரை இந்த பூமியில் பிறந்த மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் ஒவ்வொரு கடவுளுக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அப்படியான வகையில் இந்து மக்களால் பசு ஒரு தெய்வமாக பார்க்கப்படுகிறது. அதன் உடலில் 33 கோடி தேவர்களும் தெய்வங்களும் வசிப்பதாக நம்பப்படுகிறது. அதனால் தான் வெளியே செல்லும்போது பசு எதிரில் தென்பட்டால் அதனை தொட்டு வணங்கி செல்லும் வழக்கம் நம்மிடையே உள்ளது. இப்படியான நிலையில் உங்கள் ஜாதகத்தில் கிரகக் குறைபாடுகள் மீண்டும் மீண்டும் தோன்றினால் , ஒரு பசுவுக்கு உணவளிப்பது மூலம் அதனை தீர்க்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த எளிய தெய்வீக தீர்வைப் பின்பற்றுவதன் மூலம் , ஒன்பது கிரகக் குறைபாடுகளிலிருந்து விடுபடலாம் என நம்பப்படுகிறது. மேலும் பசுவின் மீதான உங்கள் பக்தியை உங்கள் கிரகங்களின் ஆசிகளாகப் பெறலாம் என ஐதீகமாக பார்க்கப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.
கிரக பாதிப்புக்கு என்னென்ன செய்ய வேண்டும்?
உங்களுடைய ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் பலவீனமான இருக்கும் பட்சத்தில், சூரியன் பலவீனமான நிலையில் இருந்தால், பசுவுக்கு வெல்லம் கொடுக்க வேண்டும். மேலும், சந்திரன் பலவீனமான நிலையில் இருந்தால், சந்திரனை அமைதிப்படுத்த பசுவுக்கு அரிசி உணவு கொடுக்கலாம். இது மன அழுத்தத்தைக் குறைத்து அமைதியைத் தரும். இந்த பரிகாரத்தை நீங்கள் ஒரு பௌர்ணமி நாளில் செய்ய வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
பொதுவாக செவ்வாய் கிரகம் என்பது ஆக்ரோஷத்திற்கும் சக்திக்கும் உரியது என கூறப்படுகிறது. இதனால் செவ்வாய் தோஷம் உண்டாகும். அதை சரிப்படுத்த, பசுவுக்கு பருப்பு, ரொட்டி மற்றும் வெல்லம் கலந்த உணவைக் கொடுக்கலாம். இது கோபத்துடன் தொடர்புடைய தோஷங்களை சமநிலைப்படுத்தும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
Also Read: நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
புதன் கிரகம் அறிவு, பேச்சு மற்றும் தொழிலுக்கு உரியது. இதனை உங்களுக்கு சாதகமாக வைக்க பசுவிற்கு பசுந்தீவனம் அல்லது பச்சைக் கீரையை உணவாகக் கொடுக்கலாம். இது தொடர்பு, நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும் என நம்பப்படுகிறது. வியாழன் கிரகம் அறிவு மற்றும் மதத்தின் பிரதிநிதியாக பார்க்கப்படுகிறது. இதனை சாந்தப்படுத்த பசுவிற்கு கொண்டைக்கடலை மற்றும் நெய் தடவிய சப்பாத்தியை உணவாகக் கொடுக்க வேண்டும். இது குழந்தைகளுக்கு ஆன்மீக முன்னேற்றத்தையும் மகிழ்ச்சியையும் தரும் என கூறப்படுகிறது.
சனி பகவான் நீதியின் கிரகம் என அழைக்கப்படுகிறது. ஆனால் தவறு செய்தால் அதன் தாக்கம் வாழ்க்கையை கடினமாக்கும் வகையில் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், கடுகு எண்ணெயில் நனைத்த சப்பாத்தியை ஒரு பசுவுக்கு உணவளிக்கவும். இந்த பரிகாரம் தடைகள் மற்றும் கவலைகளைக் குறைக்கிறது, குறிப்பாக வேலை மற்றும் ஆரோக்கியம் தொடர்பானவற்றில் முன்னேற்றம் உண்டாகும்.
ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாக அறியப்படுகிறது. ஒருவேளை ராகு தோஷம் இருந்தால், பசுவிற்கு வெள்ளை எள் மற்றும் ரொட்டியைக் கொடுக்க வேண்டும். கேது தோஷம் இருந்தால், சமைத்த வேப்பம்பூவை கொடுக்கலாம். இந்த பரிகாரம் நிழல் கிரகங்களின் எதிர்மறை தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
Also Read: தாடி, மீசையுடன் இருக்கும் அனுமன்.. கோயிலில் குவியும் பக்தர்கள்!
பசுவிற்கு உணவு அளிக்கும் முன்..
நீங்கள் பசுவுக்கு உணவு கொடுப்பவர்களாக இருந்தால் அன்புடனும் திறந்த மனதுடனும் அதை வழங்க வேண்டும். ரொட்டி அல்லது உணவுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் புதியதாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும். இந்த பரிகாரத்தை வாரத்திற்கு 1 அல்லது 2 முறை தவறாமல் செய்ய வேண்டும். குறிப்பாக திங்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகள் இதற்கு மிகவும் நல்லதாகக் கருதப்படுகிறது.
(ஆன்மிக நம்பிக்கைகளின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)