சர்வதேச மகளிர் தினம் 2026.. தடைகளைத் தகர்த்து இந்திய வரலாற்றில் இடம்பிடித்த முதல் பெண் ஆளுமைகள்..
Women's Day 2026: அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று கேட்ட காலங்கள் மறைந்து, இன்று விண்வெளி முதல் போர்முனை வரை அனைத்துத் துறைகளிலும் பெண்கள் தங்களின் முத்திரையைப் பதித்து வருகின்றனர். பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் இந்த நாள் ஒரு உந்துசக்தியாக அமைகிறது.
“மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் வரிகளுக்கு ஏற்ப, இந்த உலகம் இயங்குவதற்கு ஆதாரமாகத் திகழ்பவள் பெண். ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது அந்தச் சமூகத்தில் உள்ள பெண்களின் முன்னேற்றத்தைக் கொண்டே அளவிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினம் என்பது வெறும் கொண்டாட்டத்திற்கான நாள் மட்டுமல்ல; அது பல தசாப்தங்களாகப் பெண்கள் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும், சமத்துவத்திற்காகவும், நீதிக்காகவும் நடத்திய போராட்டங்களின் வெற்றிச் சின்னமாகும். இந்த நன்னாளில், தங்களது சாதனைகள் மூலம் வரலாற்றை மாற்றிய இந்தியப் பெண்களைப் பற்றிப் பார்ப்போம்.
இதையும் படிக்க: சர்வதேச மகளிர் தினம் 2026: பெண்களின் வலிமையை எடுத்துரைக்கும் வரலாற்றுப் பொன்மொழிகள்
இந்தியாவின் முதல் பெண் பிரதமர்:
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் மகளான இந்திரா காந்தி, தனது சாதனைகள் மூலம் இந்திய வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார். இவர் இந்தியாவின் முதல் பெண் பிரதமராவார். இவர் 1966 முதல் 1977 வரையிலும், மீண்டும் 1980 முதல் 1984ல் அவர் படுகொலை செய்யப்படும் வரையிலும் பிரதமராக திகழ்ந்தார். அவர், பிரதமராக இருந்த காலத்தில் வங்கிகளைத் தேசியமயமாக்கியது மற்றும் 1971 போரின் போது இந்தியாவை வழிநடத்தியது போன்ற சில முக்கிய முடிவுகளை எடுத்ததற்காக அவர் தனித்து அறியப்பட்டார்.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்:
1975ல் பிறந்த கர்ணம் மல்லேஸ்வரி, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றவர். 2000ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், ‘ஸ்னாட்ச்’ (snatch) பிரிவில் 110 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ (clean and jerk) பிரிவில் 130 கிலோவும் என மொத்தம் 240 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கம் வென்று இந்த அபார சாதனையைப் படைத்தார்.
விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வம்சாவளி பெண்:
ஹரியானாவின் கர்னாலில் பிறந்த கல்பனா சாவ்லா, 1988ல் நாசாவின் (NASA) ஏம்ஸ் ஆராய்ச்சி மையத்தில் தனது பணியைத் தொடங்கினார். 1997ல் தனது முதல் விண்வெளிப் பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு பல திட்டங்களில் பணியாற்றினார். ‘கொலம்பியா விண்வெளி ஓடம்’ எஸ்டிஎஸ்-87 (STS-87) ஏவுகணையில் பறந்த ஆறு விண்வெளி வீரர்களைக் கொண்ட குழுவில் ஒருவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். எஸ்டிஎஸ்-87 ஏவப்பட்டதன் மூலம், விண்வெளிக்குச் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமையை கல்பனா சாவ்லா பெற்றார். வெற்றிகரமான முதல் பயணத்திற்குப் பிறகு, எஸ்டிஎஸ்-107 (STS-107) குழுவின் ஒரு பகுதியாகத் தனது இரண்டாவது பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவரால் பாதுகாப்பாகப் பூமிக்குத் திரும்ப முடியவில்லை.
எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் இந்தியப் பெண்:
பச்சேந்திரி பால் 1984ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் இந்தியப் பெண் என்ற சாதனையைத் தனது இளம் வயதிலேயே படைத்தார். மே 1984ல் சிகரம் ஏறத் தொடங்கிய அவர், மே 23, 1984 அன்று மதியம் 1.07 மணிக்குத் தனது குழுவினருடன் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து வரலாறு படைத்தார். இந்தச் சாதனையைப் படைக்க விரும்பிய பல இளம் பெண்களுக்கு அவர் ஒரு உத்வேகமாக அமைந்தார்.
இதையும் படிக்க: சர்வதேச மகளிர் தினம் 2026: பெண்களின் உரிமை மற்றும் சமத்துவத்துக்கான உலக அழைப்பு
உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி:
1927ல் பிறந்த நீதிபதி எம்.பாத்திமா பீவி பல சாதனைகளை முறியடித்துள்ளார். அவற்றில் மிக முக்கியமானது, 1989ல் இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி என்பதுதான். நாட்டின் உயர்மட்ட நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட முதல் முஸ்லிம் பெண்மணி என்ற பெருமையும் இவரையே சாரும். இவரது சாதனைகளுக்காக, 2023ம் ஆண்டு கேரள அரசால் வழங்கப்படும் இரண்டாவது உயரிய விருதான ‘கேரள பிரபா’ விருது வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டார்.