மே 1: உழைப்பாளர் தினமும், அதன் வரலாற்றுப் பின்னணியும்…!
May Day Memories: சென்னை மெரினாவின் அடையாளமான உழைப்பாளர் சிலை, மே தினப் போராட்டங்களின் நினைவாக முதல்வர் காமராஜரின் முயற்சியால் உருவாக்கப்பட்டது. சிற்பி ராய் சௌத்ரி, நான்கு சாமானிய மனிதர்களை மாடல்களாகக் கொண்டு, பாறையை நகர்த்தும் தொழிலாளர்களின் உடல் உழைப்பைத் துல்லியமாகச் செதுக்கினார். 1959-ல் திறக்கப்பட்ட இச்சிலை, இன்றும் பல தலைமுறைகளுக்கு உழைப்பின் மேன்மையை விளக்கி வருகிறது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில், மெரினா கடற்கரைக்குச் செல்லும் எவரும் கடந்து போக முடியாத ஒரு உன்னதச் சின்னம் ‘உழைப்பாளர் சிலை’. கருங்கல்லில் செதுக்கப்பட்ட அந்தச் சிலையின் ஒவ்வொரு நரம்பு முடிச்சுகளும் உலகத் தொழிலாளர்களின் போராட்ட வரலாற்றையும், தமிழகத்தின் கலைப் பாரம்பரியத்தையும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. உழைப்பாளர் சிலை உருவான கதைக்கு முன்னால், மே தினத்தின் வேர்களை நாம் அறிய வேண்டும். 1856-ல் ஆஸ்திரேலியாவில் தொடங்கிய ‘எட்டு மணி நேர வேலை’ எனும் கோரிக்கை, 1886-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் மாபெரும் போராட்டமாக வெடித்தது. இந்த அறப்போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஏழு தொழிலாளர்கள் தங்கள் இன்னுயிரைத் துறந்தனர். அவர்களின் தியாகத்தைப் போற்றும் விதமாகவே மே 1-ஆம் தேதி உலகத் தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
சிங்காரவேலரும் காமராஜரின் தொலைநோக்குப் பார்வையும்
இந்தியாவில் முதன்முதலாக 1923-ல் சென்னையில் தொழிலாளர் உரிமைக்கான குரலை எழுப்பியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர். பல ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழக முதல்வராக இருந்த காமராஜர், தொழிலாளர்களின் உழைப்பைப் போற்றும் வகையில் மெரினாவில் ஒரு நிரந்தரச் சின்னத்தை நிறுவ விரும்பினார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த கலைஞர் தான், சென்னை அரசு ஓவியக் கலைக்கல்லூரியின் முதல்வராக இருந்த சிற்பி தேவி பிரசாத் ராய் சௌத்ரி.
சிலை உருவான சிலிர்ப்பூட்டும் பின்னணி
சிற்பி ராய் சௌத்ரி, வெறும் சிலையாக இல்லாமல் உழைப்பின் தீவிரத்தைக் கடத்தும் ஒரு காவியமாக இதை உருவாக்கத் திட்டமிட்டார். இதற்காக நான்கு மாடல்களைத் தேர்ந்தெடுத்தார். அதில் ஒருவர் கல்லூரியின் இரவுக்காவலாளி, மற்றொருவர் அக்கல்லூரி மாணவர். தினசரி ஒரு ரூபாய் ஊதியத்தில், சுமார் 15 நாட்களுக்கும் மேலாக அவர்கள் ஒரே நிலையில் அமர்ந்து ஒத்துழைத்தனர். தொழிலாளர்கள் ஒரு பெரும் பாறையை நெம்புகோலால் நகர்த்தும் போது அவர்களின் உடலில் தோன்றும் தசை முறுக்குகளையும், நரம்புத் துடிப்புகளையும் அத்தனை துல்லியமாகச் செதுக்கினார் சௌத்ரி.
காலத்தை வென்று நிற்கும் உழைப்பின் அடையாளம்
அனைத்து பணிகளும் நிறைவடைந்த பின், 1959-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி அப்போதைய ஆளுநர் விஷ்ணுராம் மேதி முன்னிலையில் இந்தச் சிலை திறந்து வைக்கப்பட்டது. சிலையை உருவாக்கிய சௌத்ரிக்கு இந்திய அரசு ‘பத்மபூஷன்’ விருது வழங்கி கௌரவித்தது. இன்று அந்தச் சிலையமைக்கக் காரணமான காமராஜரோ, செதுக்கிய சிற்பியோ, அதற்கு உருவம் கொடுத்த மாடல்களோ நம்மிடம் இல்லை. ஆனால், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களையும் கடந்து, உழைப்பு என்றுமே அழியாது என்பதை உலகுக்கு உணர்த்தியபடி அந்தச் சிலை இன்றும் கம்பீரமாக நிற்கிறது.