Bitter Gourd: பாகற்காய் ரொம்ப கசக்குதா? – இப்படி செய்தால் குறைக்கலாம்!
பாகற்காயின் கசப்பு சுவையை எளிதாக குறைக்க பல வழிகள் உள்ளன. விதைகளை நீக்குவது, உப்பு நீரில் ஊற வைப்பது, எலுமிச்சை சாறு சேர்ப்பது, கொதிக்க வைப்பது, தோலை உரிப்பது, புளிக்கரைசலில் ஊற வைப்பது போன்றவை கசப்பை குறைக்க உதவும். சிலர் எண்ணெயில் பொரிப்பதாலும் கசப்பு குறையும் என்கிறார்கள்.

பாகற்காய்
பாகற்காய் என்ற பெயரை கேட்டாலே பலரும் தெரித்து ஓடிவிடுவார்கள். அடிப்படையில் கசப்பு சுவை கொண்ட இந்த காயானது உடலுக்கும் மிகவும் நன்மை பயக்கும். ஆனால் அதன் சுவை காரணமாக பலரும் ஓரம் கட்டி விடுகிறார்கள். குறிப்பாக வயிற்றை சுத்தப்படுத்துவதில் பாகற்காய் மிகுந்த முக்கிய பங்கு வகிக்கிறது. வயிற்றில் இருக்கும் பூச்சிகளை கொன்று பசியை தூண்டும் தன்மை கொண்ட இதில் ஏகப்பட்ட சத்துக்கள் அடங்கியுள்ளது. நம்முடைய வீடுகளில் பாகற்காய் சமைக்கும்போது வெல்லம், சீனி போன்ற பொருட்களை சிறிது சேர்ப்பார்கள். இது கசப்பு சுவையை சிறிதளவு எடுத்துவிடும். அப்படியாக பாகற்காயில் உள்ள கசப்பு போக என்னவெல்லாம் செய்யலாம் என்பது பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
இப்படி ட்ரை பண்ணி பாருங்க
- பாகற்காய்களில் உள்ள விதைகளில்தான் அதன் கசப்பு பெரும்பாலும் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் நீங்கள் பாகற்காய்களை நடுவில் உள்ள விதைகளை நீக்க வேண்டும். அவ்வாறு செய்த பின் சமைத்தால் நிச்சயம் கசப்புச் சுவை ஓரளவு குறைந்து விடும். அதேசமயம் பாகற்காயை துண்டுகளாக நறுக்கிய பிறகு சுமார் 10 நிமிடங்கள் உப்பு நீரில் (உப்பு கலந்த நீர் அல்ல) ஊற வைக்கலாம். பின்னர் அந்த தண்ணீரை வடிகட்டி விட்டு சமைக்கலாம். இவ்வாறு செய்வதால் அதில் உள்ள கசப்புச் சாறுகள் தண்ணீருடன் வெளியேறுகிறது. உப்பு ஈரப்பதத்தை வெளியேற்றி, சுவையை மேம்படுத்துகிறது.
- பாகற்காய் துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம். இதிலிருக்கும் சிட்ரிக் அமிலம் கசப்பை நன்கு குறைக்கும். அதுமட்டுமல்லாமல் எலுமிச்சை சாறு பாகற்காய்க்கு சிறிது புளிப்பு சுவையை தருவதால் இதன் கசப்பு இயற்கையாகவே குறைகிறது.
- நீங்கள் பாகற்காயை சமைப்பதற்கு முன் துண்டு துண்டாக வெட்டி சிறிது உப்பு நீரில் கொதிக்க வைக்கலாம். சுமார் 2 முதல் 3 நிமிடங்கள் கொதித்த பிறகு, தண்ணீரை வடிகட்டி சமைக்க பயன்படுத்தினாலும் அதன் கசப்பு பெருமளவு குறையும்.
- கரடு முரடாக இருக்கும் பாகற்காய் தோலும் அதிகமான கசப்பு சுவையை தரக்கூடியது. எனவே, அதை சுத்தமாக உரித்து விட்டு சமைத்தால் கசப்புச் சுவை வெகுவாகக் குறையும் என சொல்லப்படுகிறது. இது தனிப்பட்ட சுவையை கொடுக்கும் எனவும் கூறப்படுகிறது.
- புளிக்கரைசலில் பாகற்காயை அரைமணி நேரம் ஊற வைத்தால் அதன் கசப்பு சுவை குறையும். சில நேரங்களில் பாகற்காயை எண்ணெயில் பொறிப்பது அதன் சுவையை மாற்றக்கூடியதாகும்.
- மேலும் பாகற்காய் துண்டுகளிலிருந்து விதைகளை நீக்கிய பிறகு அதில் சிறிது எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்க்க வேண்டும். இதனுடன் வேர்க்கடலைப் பொடியைச் சேர்த்தால் போது சுவை வேற லெவலுக்கு மாறும்.
மேலே கூறப்பட்டுள்ள டிப்ஸ்களை முயற்சித்து இதுவரை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் சாப்பாட்டில் ஒதுக்கிய பாகற்காயை, இனிமேல் நிறைய வேண்டும் என கேட்கும் அளவுக்கு சுவையாக மாற்றி மகிழுங்கள்.