உஷார்! வாட்ஸ் அப்பில் வந்த கல்யாண பத்திரிகையால் ரூ.2 லட்சம் அபேஸ்.. இப்படியும் மோசடி!
Fake Invitation Scam in WhatsApp | தொழில்நுட்பம் மற்றும் சமூல ஊடகங்களை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் மோசடி சம்பவங்களில் ஈடுபடுவது தொடர் கதையாக உள்ளது. அந்த வகையில், வாட்ஸ்அப்பில் போலி திருமண அழைப்பிதழ் அனுப்பி ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதிரி புகைப்படம்
ஹிங்கோலி, ஆகஸ்ட் 24 : மகாராஷ்டிரா (Maharashtra) மாநிலம், ஹிங்கோலி மாவட்டத்தில் வாட்ஸ்அப்பில் (WhatsApp) வந்த திருமண அழைப்பிதழ் மூலம் அரசு ஊழியர் ஒருவர் ரூ.2 லட்சம் பணத்தை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோசடி கும்பல் போலி திருமண அழைப்பிதழ் (Fake Marriage Invitation Scam) மூலம் இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், போலி திருமண சான்றிதழ் மூலம் அரசு ஊழியரிடம் இருந்து ரூ.2 லட்சம் பணம் பறிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
போலி திருமண அழைப்பிதழ் – ரூ. 2 லட்சத்தை இழந்த அரசு ஊழியர்
பாதிக்கப்பட்ட நபருக்கு முன்பின் தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ்அப்பிற்கு திருமண அழைப்பிதழ் ஒன்று வந்துள்ளது. அதனை அவர் தொட்டதும் அவரது தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு அவரது வங்கி கணக்கில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் அவருக்கு வந்த செய்தியில், ஆகஸ்ட் 30, 2025 அன்று நடைபெறும் திருமணத்திற்கு வருகை தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தர்மஸ்தலா வழக்கில் திடீர் திருப்பம்.. பெண்களை புதைத்தாக புகார் அளித்தவர் கைது.. ஷாக் பின்னணி!
அதற்கு கீழே திருமண அழைப்பிதழ் போன்ற ஒரு பிஎடிஎஃப் ஃபைல் ஒன்றும் இருந்துள்ளது. யாரோ திருமண அழைப்பிதழ் அனுப்பியுள்ளனர் என்ற எண்ணத்தில் அந்த நபர் அதனை கிளிக் செய்துள்ளார். உடனடியாக அவரது வங்கி கணக்கில் இருந்து சுமார் ரூ.1.90 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை
தனது வங்கி கணக்கில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டதால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான அந்த நபர் உடனடியாக நடந்தவற்றை குறித்து ஹிங்கோலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சைபர் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மும்பையில் இதுபோன்ற ஒரு சைபர் குற்ற வழக்கில் போலீசார் 7 பேர் கொண்ட கும்பலை கோவாவில் வைத்து கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க : ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு முற்றுப்புள்ளி – குடியரசுத் தலைவர் ஒப்புதல் – சட்டமாகும் மசோதா
பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கிய காவல்துறை
நாட்டில் இத்தகைய மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களது பணத்தை இழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே இத்தகைய மோசடிகள் குறித்து பொதுமக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். குறிப்பாக தெரியாத எண்களில் இருந்து வரும் லிங்குகள், பிடிஎஃப்கள் ஆகியவற்றை கிளிக் செய்ய வேண்டாம் என்று காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.