Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பேருந்து விபத்தில் 24 பேர் பலி.. அதீத வேகத்தால் தெலங்கானாவில் சோகம்!

Telangana Road Accident : தெலங்கானாவின் செவெல்லாவில் நடந்த பயங்கர சாலை விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிப்பர் லாரி மோதியதில் பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் 24 பேர் உயிரிழந்தனர். சரளைக் கற்கள் விழுந்ததே அதிக மரணங்களுக்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது

பேருந்து விபத்தில் 24 பேர் பலி..  அதீத வேகத்தால் தெலங்கானாவில் சோகம்!
தெலங்கானா பேருந்து விபத்து
C Murugadoss
C Murugadoss | Updated On: 03 Nov 2025 10:16 AM IST

கர்னூல் பேருந்து விபத்து சோகம் மறைவதற்கு முன்பே, இதோ இன்னொரு சோகமான சம்பவம் தெலங்கானாவின் செவெல்லாவில் நடந்துள்ளது. பேருந்தில் பாதுகாப்பாக பயணித்தவர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் இதுவரை 24 பேர் உயிரிழந்தனர். டிப்பர் லாரியில் இருந்த சரளைக் கற்கள்தான் பெரும்பாலான உயிர் இழப்புகளுக்குக் காரணம். திடீரென சரளைக் கற்கள் அவர்கள் மீது விழுந்ததால், பெரும்பாலான பயணிகள் இறந்ததாக கூறப்படுகிறது. பத்துக்கும் மேற்பட்டோர் சரளைக் கற்களுக்கு அடியில் புதைந்தனர். இந்த சம்பவத்தில் 24 பேர் இறந்தனர். இறந்தவர்களில் 18 பயணிகள், இரண்டு பேருந்து மற்றும் டிப்பர் ஓட்டுநர்கள் அடங்குவர். ஒரு வயது குழந்தை உட்பட 11 பெண்கள் மற்றும் 9 ஆண்கள் இறந்தனர். 20க்கும் மேற்ட்டோர் சிகிச்சையில் இருக்கின்றனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விபத்து காரணம் என்ன?

இந்த விபத்து ஹைதராபாத்-பிஜாப்பூர் நெடுஞ்சாலையில் நடந்தது. தந்தூர் டிப்போ பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தால் செவெல்லா-விகராபாத் வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் செவெல்லா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் ஜேசிபி மூலம் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விபத்து நடந்த இடத்திற்கு அருகில் ஒரு ஆபத்தான வளைவு உள்ளது. அதிவேகத்தில் ஒன் வேயில் விதியை மீறி  வந்த ஒரு டிப்பர் லாரி வளைவில் கட்டுப்பாட்டை மீறி பேருந்தில் மோதியதே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது

விபத்து வீடியோ

முதல்வர் உத்தரவு

மிர்ஜாகுடா சாலை விபத்து குறித்து முதல்வர் ரேவந்த் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். விபத்து நடந்த இடத்திற்கு அதிகாரிகள் செல்லுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தேவையான மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், பேருந்து விபத்தில் காயமடைந்த அனைவரையும் உடனடியாக ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு முதல்வர் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார். மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ரங்காரெட்டி மாவட்டம், செவெல்லா மண்டலத்தில் உள்ள கானாபூர் ஸ்டேஜில் நடந்த இந்த பயங்கர சாலை விபத்து குறித்து தெலுங்கானா மாநில சட்டமன்ற சபாநாயகரும், விகாராபாத் தொகுதி எம்எல்ஏவுமான கடம் பிரசாத் குமார் தனது ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் பேசிய சபாநாயகர் பிரசாத் குமார், தந்தூரிலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற பேருந்து, தவறான பாதையில் வந்த டிப்பர் லாரியில் மோதியதாக தகவல் கிடைத்தது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், படுகாயமடைந்தவர்களை சிறந்த சிகிச்சைக்காக ஹைதராபாத்திற்கு மாற்றவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.