மாதவிடாய் காலத்தில் ‘கட்டாய விடுப்பு’ கோரிய வழக்கு.. உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து..
Supreme Court On Menstrual Leaves: ஏற்கனவே பணியிடங்களில் பெண்களுக்குப் பல சவால்கள் இருக்கும் நிலையில், இந்தச் சட்டம் பெண்களின் பணிச் சூழலை இன்னும் சிக்கலாக்கும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விவகாரம் நீண்ட காலமாக விவாதமாக உள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் இம்முடிவு பெண்களின் பணியிடச் சூழல் குறித்த விவாதத்தை மீண்டும் கிளறியுள்ளது.

உச்சநீதிமன்றம்
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் கட்டாய விடுப்பு வழங்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது போன்ற சட்டங்கள் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு, இது தொடர்பாகப் பல்வேறு முக்கியக் கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், மாதவிடாய் விடுப்பைச் சட்டப்பூர்வமாக அமல்படுத்துவது, பெண்களின் வேலைவாய்ப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து தலைமை நீதிபதி சூர்யா காந்த் கூறுகையில், “பெண்களுக்குக் கட்டாய மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என்று சட்டம் இயற்றினால், வேலைக்கு ஆட்களை எடுக்கும் நிறுவனங்கள் பெண்களை வேலைக்கு அமர்த்தத் தயங்கும். இதுவே பெண்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும்,” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: கிராமப்புறங்களில் கேஸ் சிலிண்டர் முன்பதிவு காலம் 45 நாட்களாக உயர்வு – மத்திய அரசு நடவடிக்கை
கவலை தெரிவித்த நீதிமன்றம்:
பணியிடங்களில் பெண்களுக்குத் தொடர்ந்து விடுமுறை அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், நிறுவன உரிமையாளர்கள் பெண்களைப் பணியமர்த்துவதைத் தவிர்த்துவிடலாம் என்ற கவலையை நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ளது. இது போன்ற முடிவுகள் ஒரு நிறுவனத்தின் கொள்கை சார்ந்த விஷயமாக இருக்க வேண்டுமே தவிர, சட்ட ரீதியாகக் கட்டாயப்படுத்தினால் அது பெண்களுக்கு எதிராகவே முடியக்கூடும் என்று நீதிமன்றம் கருதுகிறது.
பணிச்சூழலை இன்னும் சிக்கலாக்கும்:
ஏற்கனவே பணியிடங்களில் பெண்களுக்குப் பல சவால்கள் இருக்கும் நிலையில், இந்தச் சட்டம் பெண்களின் பணிச் சூழலை இன்னும் சிக்கலாக்கும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விவகாரம் நீண்ட காலமாக விவாதத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் பணியிடச் சூழல் குறித்த விவாதத்தை மீண்டும் கிளறியுள்ளது.
இதையும் படிக்க : எல்பிஜி தட்டுப்பாடு.. ரயில்வே கேட்டரிங் பாதிக்கப்படுமா? நிலமை என்ன?
முந்தைய தீர்ப்பும் நீதிமன்றத்தின் கடமையும்:
இந்த விவகாரத்தில் நீதிமன்றம் ஏற்கனவே சில முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஜனவரி மாதம் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு, மாதவிடாய் சுகாதாரம் என்பது ஒரு பெண்ணின் கண்ணியம் மற்றும் ஆரோக்கியத்திற்கான உரிமை (Article 21) என்று குறிப்பிட்டிருந்தது. அதன்படி, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பெண்களுக்கு இலவச நாப்கின்கள் வழங்குதல், தனித்தனி கழிப்பறை வசதிகளை உறுதி செய்தல், மாதவிடாய் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு முகாம்களை நடத்துதல் ஆகியவற்றை அரசு கட்டாயம் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.