டெல்லியில் குடியரசு தின விழா.. தேனி பழங்குடித் தம்பதியினருக்கு அழைப்பு.. ஏன் தெரியுமா?
Republic Day celebrations in Delhi: இந்த விழாவில், 10,000 பேர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் இருந்து தேனி மாவட்டம், அகமலை ஊராட்சிக்குட்பட்ட சொக்கன் அலை மலை கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (44) மற்றும் அவரது மனைவி கனகா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேனி பழங்குடித் தம்பதியினருக்கு அழைப்பு
டெல்லி, ஜனவரி 20: வரும் ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பைக் காண, தேனியைச் சேர்ந்த ஒரு பழங்குடித் தம்பதியினர் உட்பட 10,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 77-வது குடியரசு தினம் இந்த மாதம் 26-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கடமைப் பாதையில் நடைபெறும் இந்தக் குடியரசு தின விழா சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவில் வெளிநாட்டுத் தலைவர்கள் பங்கேற்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் பங்கேற்கின்றனர். இவர்கள் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள 16-வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டிலும் பங்கேற்கின்றனர்.
மேலும் படிக்க: “எங்களை மன்னித்து விடுங்கள் ஐயா”…தமிழக டிஜிபிக்கு 1500 போலீசார் கடிதம்…என்ன காரணம்!
தேனி பழங்குடித் தம்பதியினர்:
இந்த விழாவில், 10,000 பேர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் இருந்து தேனி மாவட்டம், அகமலை ஊராட்சிக்குட்பட்ட சொக்கன் அலை மலை கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (44) மற்றும் அவரது மனைவி கனகா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் பாலியர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கண்ணன் தேனி மாவட்ட பாலியர் பழங்குடி சமூகத்தின் தலைவராகவும், சொக்கனாலை கிராமத்தின் வனக் குழுவின் தலைவராகவும் உள்ளார். கனகா அங்கன்வாடியில் சமையல் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.
25 ஆண்டுகளுக்கு மேலாக சமூக சேவை:
கண்ணன்தான் அவருடைய சமூகத்திலேயே முதல் முதலாக உயர்நிலைப்பள்ளி வரை சென்று படித்தவர். தன்னைப் போலவே மற்றவர்களும் கல்வி கற்க வேண்டும் என நினைத்த கண்ணன் தன்னுடைய 17 வயதில் சமூகப்பணி செய்ய தொடங்கியுள்ளார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆனைமலைத் தொடர்களில் பழங்குடி மக்கள் வசிக்கும் 100 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நடந்தே சென்று கல்வியின் அவசியத்தை எடுத்துக் கூறி படிக்க வைத்து பலரையும் அரசுப் பணிகளில் சேர்வதற்கு உத்வேகமாக இருந்துள்ளார்.
அதோடு, மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை உரிமைகளைத் தனது மக்களுக்குப் பெற்றுத் தந்துள்ளார். இவர்களுடைய சமூகப்பணியைக் கெளரவிக்கும் விதமாக, வரும் 26ம் தேதி டெல்லியில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் முன்னிலையில் நடக்கும் குடியரசு தின விழாவில் பங்கேற்க மத்திய அரசு விவிஐபியாக அழைத்துள்ளது.
விவசாயிகள், ஆராய்ச்சியாளர்களுக்கு அழைப்பு:
இவர்களைத் தவிர்த்து, உலக தடகள பாரா சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள், இயற்கை விவசாயிகள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் மக்காச்சோளம் போன்ற பயிர் சாகுபடியில் சிறந்து விளங்கிய விவசாயிகள், ககன்யான் மற்றும் சந்திரயான் போன்ற இஸ்ரோ திட்டங்களில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், மருத்துவ மற்றும் தொழில்துறை ஆராய்ச்சியாளர்கள், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் முக்கிய இடங்களுக்குச் சென்று பார்வையிடுகின்றனர்.
குடியரசு தின கொண்டாட்டங்களுக்குப் பிறகு, இந்த சிறப்பு விருந்தினர்கள் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னம், பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் பிற முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.