ப்ரீ வெட்டிங்க் போட்டோ ஷூட் எடுக்க சென்ற ஜோடி சாலை விபத்தில் பலி!
Pre-wedding Photoshoot Tragedy | கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் திருமணம் செய்துக்கொள்ள இருந்த ஜோடி இருவர் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் எடுப்பதற்கான சென்றுள்ளனர். அவர்கள் போட்டோ ஷூட் முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டு இருந்தபோது சாலை விபத்தில் பலியாகினர்.
பெங்களூரு, டிசம்பர் 09 : கர்நாடக (Karnataka) மாநிலம், கொப்பம் மாவட்டம், கனுமனகட்டே கிராமத்தை சேர்ந்தவர் கிரியப்பா மடிவாளா. 26 வயதாகும் இவருக்கும் கொப்பல் மாவட்டம் காரடகி தாலுகா முஸ்டூரு கிராமத்தை சேர்ந்த கவிதா என்கிற 19 வயது இளம் பெண்ணுக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாகவே இருவரது பெற்றோரும் திருமணம் பேசி முடித்துள்ளனர். அதாவது, டிசம்பர் 20, 2025 அன்று அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர்.
திருமணத்திற்கு முன்பு போட்டோஷூட் எடுக்க முடிவு செய்த ஜோடி
கரியப்பாவுக்கும், கவிதாவுக்கும் திருமணம் நடைபெற இருந்த அதே நாளில் தான் கரியப்பாவின் அண்ணன் ரமேசுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இருவருக்கும் கூட்டு திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் தான் கரியப்பாவும், கவிதாவும் திருமணத்திற்கு இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட் எடுக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்து அவர்கள் தங்களது பெற்றோர்களிடம் கூறிய நிலையில், அவர்களும் அதற்கு அனுமதி அளித்துள்ளனர்.
இதையும் படிங்க : ரூ. 610 கோடி ரீஃபண்ட்.. 3000 லக்கேஜ் ரிட்டர்ன்… இயல்பு நிலைக்கு திரும்பும் இண்டிகோ!
சாலை விபத்தில் சிக்கிய ஜோடி
திருமணத்திற்கு முன்பு போட்டோஷூட் எடுக்க முடிவு செய்த காதல் ஜோடி டிசம்பர் 06, 2026 அன்று பல்லாரி மாவட்டத்தில் உள்ள ஒசப்பேட்டை, உம்னாபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தங்களுக்கு பிடித்த வகையில் போட்டோ ஷூட் எடுத்துள்ளனர். அவர்கள் போட்டோ ஷூட் எடுத்து முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர். அதன்படி கிரியப்பா, கவிதாவை தனது இருசக்கர வாகனத்தில் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க : கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரின் கார் குளத்தில் விழுந்து விபத்து.. பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு!
அவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டு இருந்த நிலையில், எதிரே வந்த லாரி அவர்கள் மீது மோதியுள்ளது. இதில் இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். கரியப்பா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இந்த அதிர்ச்சி செய்தியை கேட்ட அவரது குடும்பத்தினர் அலறி துடித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.