PM Modi’s Degree Case: பிரதமர் மோடியின் பட்டம் பகிரங்கப்படுத்தப்படாது.. மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்!
PM Modi's Degree Records: டெல்லி உயர்நீதிமன்றம், பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்புச் சான்றிதழ் தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் (CIC) பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ளது. டெல்லி பல்கலைக்கழகம் தாக்கல் செய்த மனுவை ஏற்று, தனிநபர் தகவல்களின் பாதுகாப்பு முக்கியம் என நீதிமன்றம் கருதியது.

பிரதமர் மோடியின் பட்டம் தொடர்பான வழக்கு
பிரதமர் நரேந்திர மோடி பட்டப்படிப்பு பட்டம் (PM Modi’s Degree Case) தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின் (CIC) உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் (Delhi High Court) இன்று அதாவது 2025 ஆகஸ்ட் 25ம் தேதி ரத்து செய்துள்ளது. முன்னதாக, மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை டெல்லி பல்கலைக்கழகம் எதிர்த்தது. கடந்த, 2016ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில், பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு பட்டம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு டெல்லி பல்கலைக்கழகத்திற்கு CIC உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, பட்டத்தை வெளியிட மத்திய தகவல் ஆணையரின் உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பட்டங்களை வெளியிடுவது கட்டாயமில்லை:
பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு தொடர்பான ஆணவத்தை வெளியிடும் உத்தரவை எதிர்த்து டெல்லி பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்தது. ஆனால், கடந்த 2017ம் ஆண்டு ஜனவரியில் முதல் விசாரணையின்போதே இது நிறுத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆஜாராண சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “ அறிந்து கொள்ளும் உரிமையை விட தனியுரிமைக்கான உரிமை முக்கியமானது என்பதால்மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு பதிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயாராக இருக்கிறோம். ஆனால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அந்நியர்களால் சரிபார்ப்பதற்காக அவற்றை பகிரங்கபப்டுத்த முடியாது” என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ALSO READ: பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு பயணம் ரத்து.. காரணம் என்ன?
தொடர்ந்து, “மாணவர்களின் தகவல்களை பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை தங்களுக்கு இருக்கிறது. பொது நலன் இல்லாத நிலையில் வெறும் ஆர்வத்தின் அடிப்படையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தனிப்பட்ட தகவல்களை தேடுவது அதை நியாயப்படுத்தாது. தகவல் வழங்கப்பட வேண்டும் என்ற கட்டாய விதி பிரிவு 6ல் உள்ளது. ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் யாருடைய ஆர்வத்தையும் பூர்த்தி செய்வதற்காக அல்ல” என்று டெல்லி பல்கலைக்கழகம் வாதிட்டது.
மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவு ரத்து:
[PM Modi Degree Judgement]
Delhi High Court says there is no implicit public interest in the disclosure of information related to Prime Minister Narendra Modi’s educational certificates. #PMModiDegree @narendramodi pic.twitter.com/k07xY6zifr
— Bar and Bench (@barandbench) August 25, 2025
வாதங்களை கேட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா, “கல்விப் பதிவுகள் மற்றும் பட்டங்களை வெளியிடுவது கட்டாயமில்லை.” என்றார். முன்னதாக, கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், 1978 ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை அரசியல் அறிவியல் (பிஏ) பட்டப்படிப்பை முடித்ததாக உறுதியளித்திருந்தார்.
அதற்கு ஒரு வருடம் முன்பு, நீரஜ் சர்மா என்ற நபர் 1978 ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட அனைத்து பி.ஏ பட்டங்களின் விவரங்களையும் கோரி ஆர்.டி.ஐ மனு தாக்கல் செய்தார். சொலிசிட்டர் ஜெனரல் (SG) துஷார் மேத்தாவின் வாதங்களைக் குறிப்பிட்ட பிறகு, சர்மாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவை நிறுத்தி வைத்தது.
ALSO READ: டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல்… பொதுமக்களை சந்தித்த போது நடந்த சம்பவம்.. பரபரப்பு!
பிரதமர் மோடியின் கல்விப் பதிவுகளை வெளியிடுவது தொடர்பான இந்த சட்டப் போராட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் விண்ணப்பம் தாக்கல் செய்த பிறகு, டிசம்பர் 21, 2016 அன்று மத்திய தகவல் ஆணையம் 1978 இல் இளங்கலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களின் பதிவுகளையும் ஆய்வு செய்ய அனுமதித்தது. பிரதமர் மோடியும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார் என டெல்லி பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.