பிரதமர் மோடியின் தமிழ்நாட்டு பயணம் ரத்து.. காரணம் என்ன?
PM Modi Tamil Nadu Visit: பிரதமர் நரேந்திர மோடி வரும் 26, ஆகஸ்ட் 2025 ஆம் தேதி திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் வருகை தர இருந்தார், ஆனால் வேறு பணிகள் காரணமாக இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாஜக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, ஆகஸ்ட் 22, 2025: பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை தர இருந்த நிலையில் அந்த பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 2025 ஆகஸ்ட் 26 ஆம் தேதி தமிழ்நாடு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வேறு சில பணிகள் இருப்பதன் காரணமாக இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் 26 2025 அன்று சிதம்பரம் மற்றும் திருவண்ணாமலைக்கு பிரதமர் மோடி வருகை தர இருந்தார். அங்கு சிறப்பு சுவாமி தரிசனம் செய்தும் தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும் இந்த பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பிரதமர் மோடி தமிழகம் வருகை தருவார் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நெருங்கும் 2026 சட்டமன்ற தேர்தல்:
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் தமிழகத்திற்கு பாஜக தலைவர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி,அமித்ஷா, பி.எல் சந்தோஷ் உள்ளிட்டோர் தமிழகத்திற்கு வருகை தந்து கட்சி நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஆகஸ்ட் 22 2025 தேதியான இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். குறிப்பாக நெல்லையில் நடைபெறும் பாஜக மாநில பூத் கமிட்டி மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக தனது வலிமையை காட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி:
இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு கடந்த 2025 ஜூலை 26 ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்தார். அப்போது கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
மேலும் படிக்க: தெருநாய்களை காப்பகத்தில் அடைக்க தடை.. பொதுஇடங்களில் உணவளிக்க தடை.. உச்ச நீதிமன்றம் அதிரடி!
பின்னர் சோழப் பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு ராஜராஜ சோழன் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டு சோழர் காலத்தில் ஆட்சி காலம் குறித்து பேசினார். அப்போது பேசி அவர் சோழப் பேரரத்தின் சகாப்தம் இந்தியாவின் பொற்காலங்களில் ஒன்று என்று வரலாற்று ஆசிரியர்கள் நம்புகிறார்கள் சோழ பேரரசு இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்று அழைக்கும் பாரம்பரியத்தையும் முன்னெடுத்து சென்றது என குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: சுதர்சன் ரெட்டி தமிழகம் வருகை.. முதல்வர் ஸ்டாலினுடன் முக்கிய சந்திப்பு.. என்ன மேட்டர்?
பிரதமரின் தமிழக பயணம் ரத்து:
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு சுமார் எட்டு முறை பயணம் மேற்கொண்டார். அந்த வகையில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு பல்வேறு விஷயங்கள் தொடர்பாக வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் வர இருந்த பிரதமரின் பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அந்த பயணமானது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.