VIDEO: கத்தியுடன் இருவரை ஓட ஓட விரட்டி குத்த முயற்சி.. விமான நிலையத்தில் பரபரப்பு!!
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நள்ளிரவில் நடந்த இந்த மோதல் சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது. CISF போலீசார் துரிதமாக செயல்படமால் இருந்திருந்தால், இருவரும் கத்தியால் குத்தப்பட்டிருப்பார்கள். தாக்குதல் நடத்திய நபரை விரட்டிச் சென்று அவர்கள் மடக்கிப் பிடித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

விமான நிலையத்தில் மோதல்
கர்நாடகா, நவம்பர் 18: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் வாயிலில் இரண்டு டாக்சி டிரைவர்களை ஒருவர் கத்தியால் ஓட ஓட குத்த முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும் சர்வதேச விமான நிலையத்தில், பொது மக்கள் முன்னிலையில் நடந்த இந்த மோதல் சம்பவம் அங்கிருந்த அனைவரையும் பீதியடைய செய்துள்ளது. இந்த மோதல் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மேலும் பேசுபொருளாக மாறியுள்ளது. மோதல் நடந்த சில நிமிடங்களில், பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்புடுகிறது. அதேசமயம், விமான நிலையத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் படிக்க: கேரளாவில் தொடரும் கனமழை.. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை..
விமான நிலையத்தில் பரபரப்பு:
பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், சர்வதேச அளவில் பெயர் பெற்றதாகும். டெல்லி, மும்பை விமான நிலையங்களுக்கு பிறகு இந்தியாவின் 3வது பரபரப்பான விமான நிலையமாக திகழ்ந்து வருகிறது. அப்படிப்பட்ட இந்த விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (நவ.16) இரவு சமயத்தில், டெர்மினல் 1 (Terminal) அருகே இருந்த டாக்சி டிரைவர்கள் இருவர் மீது ஒருவர் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். அதோடு, அவர் கையில் பெரிய கத்தியும் வைத்திருந்ததால், விமான நிலையத்தில் இருந்த பயணிகள் பலரும் பதறினர்.
உடனடியாக விரைந்த போலீசார்:
தொடர்ந்து, அவர்கள் சரமாரியாக மோதிக்கொண்டிருந்த சமயம், அந்த நபர் அவர்களை கத்தியால் குத்துவதற்கு முயற்சித்து வந்துள்ளார். இதனிடையே, சம்பவம் குறித்து தகவலறிந்த CISF போலீசார் உடனடியாக அங்கு விரைந்துச் சென்றனர். அந்த நபரிடம் இருந்து இருவரையும் மீட்டனர். தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட நபரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து CISF போலீசார் கூறும்போது, தாக்குதலில் ஈடுபட்ட நபர் சோஹைல் அஹ்மது என்று தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் கூறும்போது, முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக விளக்கமளித்துள்ளனர். அதோடு, தாக்குதலில் ஈடுபட்ட அஹ்மது மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் வீடியோ:
Timely intervention by CISF, averted a major crime at Bengaluru Airport.
Around midnight on 16 Nov, a man armed with a long metal knife charged toward two taxi drivers at the T1 Arrival area of @BLRAirport. ASI/Exe Sunil Kumar & team acted swiftly, overpowered the attacker and… pic.twitter.com/upFWXEtTaW
— CISF (@CISFHQrs) November 17, 2025
அதேசமயம், இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளையும் CISF அதிகாரிகள் தங்களது X பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில், நள்ளிரவில் T1 வாயலில் கத்தியுடன் 2 டாக்சி டிரைவர்களிடம் அஹ்மது மோதலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து, அவர்கள் இருவரும் செய்வதறியாது தவிப்பதும் அதில் பதிவாகியுள்ளது. இதுபோன்ற ஆபத்தான சமயத்தில் CISF போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததால், அவர்கள் இருவர் உயிரும் காப்பற்றப்பட்டது.
மேலும் படிக்க : அதிவேகமாக சென்ற கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்து: 5 பேர் பலி.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!!
தீவிர விசாரணை:
இந்த மோதல் சம்பவத்தால் விமான நிலையப் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதேசமயம், தாக்குதலுக்கு ஆளான டாக்சி டிரைவர்கள் இருவரும் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர். தொடர்ந்து, சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு விமான நிலையத்தில் ஏற்பட்ட இந்த அசாதார சூழல் அங்கிருந்த பயணிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.