தனிமையில் சந்தித்த காதல் ஜோடி வீட்டில் பிணமாக மீட்பு.. கேரளாவில் பகீர் சம்பவம்!
Kerala Lover's Quarrel | கேரள மாநிலம் இடுக்கியில் தனிமையில் சந்தித்துக்கொண்ட காதல் ஜோடி வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த விவகாரம் தொடர்பான முதற்கட்ட தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த காதல் ஜோடி
இடுக்கி, ஆகஸ்ட் 24 : கேரளாவில் (Kerala) காதலர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், காதலன் காதலியை கழுத்தை நெறித்து கொலை செய்த நிலையில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து பேசிய நிலையில், இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், காதலர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் காதலன், காதலியை கொலை செய்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தனிமையில் சந்தித்தபோது காதலர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவலோஷ். 28 வயதாகும் இவர் வாழைக்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வந்துள்ளார். இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் வாழைக்குளத்தில் வாடகைக்கு வீடு எடுத்த தங்கி வந்துள்ளனர். இதே போல அடிமாலியை அடுத்த பாறைத்தோடு பகுதியில் மீனாட்சி என்ற 20 வயது இளம் பெண் வசித்து வந்துள்ளார். அவர் வாழைக்குளம் பகுதியில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்து வந்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க : காதலுக்கு நோ சொன்ன பெண்… காருடன் ஏரியில் தள்ளிவிட்டு கொன்ற நபர்.. அதிர்ச்சி பின்னணி!
வீட்டில் பிணமாக கிடந்த காதல் ஜோடி
இந்த நிலையில், ஆகஸ்ட் 22, 2025 அன்று சிவலோஷன் குடும்பத்தினர் வெளியூர் சென்றுள்ளனர். இந்த நிலையில் சிவலோஷ் வீட்டில் தனியாக இருந்த நிலையில், அவரது நண்பர் அவரை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். பலமுறை செல்போனில் அழைத்தும் சிவலோஷ் அழைப்பை ஏற்காததால் சந்தேகம் அடைந்த அவர், வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்த நிலையில் உள்ளே சென்ற நண்பருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. காரணம் சிவலோஷ் வீட்டில் பிணமாக தொங்கியுள்ளார். அதுமட்டுமின்றி அதற்கு அடுத்து அருகில் சிவலோஷின் காதலி, மீனாட்சி கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இதையும் படிங்க : என்னையே அடிக்கிறீங்களா? – ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்!
விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் முதற்கட்ட தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதாவது, சம்பவத்தன்று காதலர்கள் தனியாக சந்தித்த நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிவலோஷ் காதலியை கழுத்தை நெறித்து கொலை செய்த நிலையில், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.