ரொம்ப யோசிக்காதீங்க.. ஜெகதீப் தன்கர் ராஜினாமா விஷயத்தில் அமித்ஷா காட்டம்!
Jagdeep Dhankhar - Amit Shah: துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் தனது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் மீதமிருக்கும் நிலையில் திடீரென 2025 ஜூலை மாதம் ராஜினாமா செய்தார். இது எதிர்க்கட்சிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் அளித்துள்ளார்.

அமித்ஷா - ஜெகதீப் தன்கர்
இந்தியா, ஆகஸ்ட் 25: முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில் அவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த 2022 ஆம் ஆண்டு வரை மேற்குவங்க ஆளுநராக பணியாற்றினார். அதன் பிறகு துணை குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது அரசியல் களத்தில் மிகப்பெரிய சர்ச்சைகளை கிளப்பியது.
ஜெகதீப் தன்கரின் ராஜினாமா கடிதம்
மேலும் தனது ராஜினாமா கடிதத்தில் மருத்துவ காரணங்களுக்காகவும் மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றவும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அரசியலமைப்பு பிரிவு 67 a படி துணை குடியரசுத் தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். எனது பதவி காலத்தில் இருந்த அசைக்க முடியாத ஆதரவுக்கும் இனிமையான அற்புதமான பணி உறவுகளுக்கும் குடியரசு தலைவருக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Also Read: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா!
மேலும் நான் பதவி காலத்தில் இருந்த போது நிறைய கற்றுக் கொண்டேன். பிரதமருக்கும் அமைச்சரவை குழுவிற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் நினைவில் பதிக்கப்படும் அளவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரிடமும் பெற்ற அரவணைப்பு, நம்பிக்கை மற்றும் அன்பு ஆகியவை என்றென்றும் போற்றப்படும் என தெரிவித்திருந்தார்.
எதிர்க்கட்சிகள் கோரிக்கை
ஆனால் பதவியை ராஜினாமா செய்த பிறகு ஜெகதீப் தன்கர் என்ன செய்கிறார்?, எங்கு இருக்கிறார்? என்ற விவரம் இதுவரை வெளியிடப்படாமல் மௌனம் காக்கப்பட்டு வருகிறது. இதனால் அவருக்கு என்ன நடந்தது என்பதை விளக்க வேண்டும் என நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் முதல் நாளில் இருந்தே கோரிக்கை விடுத்து வந்தது. இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக பலமுறை நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.
அமித்ஷா கொடுத்த பதிலடி
இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனிப்பட்ட உடல்நல பிரச்சனைகள் காரணமாக ஜெகதீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இந்த விஷயத்தில் ஏதாவது கிடைக்குமா என எதிர்க்கட்சிகள் ஆராய வேண்டாம். துணை குடியரசுத் தலைவராக இருந்தபோது அரசியலமைப்பின்படி அவர் சிறப்பாக பணியாற்றினார். மேலும் தனது கடிதத்திலேயே பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்” என கூறியுள்ளார்
Also Read: திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் – நெல்லை கூட்டத்தில் அமித்ஷா பேச்சு..
புதிய துணை குடியரசு தலைவர்
இப்படியான நிலையில் 2025 செப்டம்பர் 9ம் தேதி புதிய துணை குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலானது நடைபெறுகிறது. இதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த சிபி ராதாகிருஷ்ணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் அதே சமயம் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். இவர்களில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.