கோவா அயர்ன்மேன் போட்டி: வெற்றிகரமாக முடித்த அண்ணாமலை.. பாராட்டிய பிரதமர் மோடி!
இப்போட்டியில் அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா பங்கேற்றது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதோடு, பிரதமர் மோடியும் இவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது போன்ற நிகழ்வுகள் 'FitIndia' இயக்கத்துக்கு பங்களிப்பதாக கூறி அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா!
கோவா, நவம்பர் 10: கோவாவில் நடைபெற்ற அயன்மேன் 70.3 சேலஞ்ச் (Ironman 70.3 challenge) போட்டியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பெங்களூரு எம்.பி தேஜஸ்வி சூர்யா ஆகியோர் வெற்றிகரமாக பங்கேற்று அசத்தியுள்ளார். இது உலகின் மிகக் கடினமான தடகளத்தொடர் போட்டி என்று கூறப்படுகிறது. இந்த போட்டியானது 1.9 கி.மீ நீச்சல், 90 கி.மீ மிதிவண்டி பயணம், 21.1 கி.மீ ஓட்டம் என மொத்தம் 113 கி.மீ தூரம் கொண்டது. கோவாவில் நடந்து வரும் இந்த போட்டியானது தொடர்ந்து 5ஆவது ஆண்டாக நடந்து வருகிறது. இம்முறை போட்டியில் 31 நாடுகளில் இருந்து 1,300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். போட்டி மிகுந்த வெப்பநிலையில் நடந்ததால் கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது.
Also read: குடியிருப்பு, வணிக இடங்களில் மின்சார வாகன சார்ஜிங் வசதி கட்டாயம்.. தமிழக அரசு உத்தரவு
சர்வதேச வீரர்களை ஈர்த்த போட்டி:
கோவாவில் பல ஆண்டுகளாக அயர்ன்மேன் 70.3 டிரையத்லான் போட்டி நடந்து வருகிறது. உடற்திறனைச் சோதிக்கும் வகையில் நடைபெறும் இந்தப் போட்டியில், 1.9 கி.மீ தூரம் நீச்சல் அடித்து செல்ல வேண்டும். 90 கி.மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்ட வேண்டும். 21.1 கி.மீட்டர் தூரம் ஓட வேண்டும். இந்த கடினமான சர்வதேச விளையாட்டு போட்டி, பல சர்வதேச வீரர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளது. அந்தவகையில், இந்தாண்டு நடந்த போட்டியில் அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா ஆகியோர் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளனர்.
இந்த போட்டியில் 2வது முறையாக பங்கேற்கும் தேஜஸ்வி சூர்யா 7 மணி நேரம் 49 நிமிடங்களில் கடந்தார். அவரைத் தொடர்ந்து, அண்ணாமலை 90 கி.மீ., தூரம் சைக்கிள் போட்டியில் பந்தய தூரத்தை 3.14 மணி நேரத்தில் கடந்தார். 21.1 கி.மீ., தூர ஓட்டத்தையும் வெற்றிகரமாக கடந்து, மூன்று போட்டிகளையும் சேர்த்து 8 மணி நேரம் 13 நிமிடங்களில் கடந்து முடித்தார். இப்போட்டியில் அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா பங்கேற்றது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரதமர் மோடி வாழ்த்து:
கோவாவில் இன்று நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 போன்ற நிகழ்வுகளில் நமது இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற நிகழ்வுகள் #FitIndia இயக்கத்திற்கு பெரும் பங்களிக்கின்றன. கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். நமது கட்சியின் இளம் சகாக்களான… pic.twitter.com/wls0xzD9sR
— Narendra Modi (@narendramodi) November 9, 2025
இதுகுறித்து பிரதமர் மோடி தனது x பக்கத்தில், கோவாவில் நடைபெற்ற அயர்ன்மேன் 70.3 போன்ற நிகழ்வுகளில் நமது இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் #FitIndia இயக்கத்திற்கு பெரும் பங்களிப்பதாக கூறிய அவர், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு, பாஜகவின் இளம் சகாக்களான அண்ணாமலையும் , தேஜஸ்வி சூர்யாவும் அயர்ன்மேன் டிரையத்லானை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்களில் இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.