தாய் அன்புக்கு ஈடே இல்லை.. 46 வயது மகனுக்கு கிட்னியை தானமாக கொடுத்த 72 வயது தாய்!
Mother Donated Kidney to Her Son | மத்திய பிரதேசத்தை சேர்ந்த 72 வயது தாய் ஒருவர் மூன்று ஆண்டுகளாக கிட்னி பிரச்னையால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த தனது 46 வயது மகனுக்கு தனது ஒரு கிட்னியை தானமாக கொடுத்துள்ளார்.

கிட்னி கொடுத்த தாய் மற்றும் பெற்றுக்கொண்ட மகன்
இந்தூர், அக்டோபர் 18 : மத்திய பிரதேசத்தில் (Madhya Pradesh) 72 வயது தாய் தனது 46 வயது மகனுக்கு தனது கிட்னியை தானமாக கொடுத்தது வரவேற்பை பெற்று வருகிறது. கிட்னியில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த மகனுக்காக அந்த தாய் தனது கிட்னியையே கொடுத்துள்ளார். இந்த உலகத்தில் தாய் பாசத்தை விடவும் சிறந்தது எதுவும் இல்லை என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், 72 வயது தாய் மகனுக்கு கிட்னி கொடுத்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மகனுக்கு கிட்னி கொடுத்த 72 வயது தாய்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்தவர் 72 வயது மூதாட்டியான கங்கா. இவருக்கு 46 வயதில் கமலேஷ் என்ற மகன் உள்ளார். கமலேசுக்கு கிட்னி பிரச்னை இருந்த நிலையில், அதற்காக அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் அவரது உடல் நலத்தில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்துள்ளது. இந்த நிலையில், கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே கமலேசை காப்பாற்ற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க : மந்திரவாதியுடன் கள்ளக்காதல்.. காதலனுடன் திட்டமிட்டு கணவனை கொலை செய்த மனைவி!
வெற்றிகரமாக நடந்து முடிந்த சிகிச்சை
கமலேசுக்கு கிட்னி மாற்று சிகிச்சை செய்ய வேண்டும் என்ற தேவை ஏற்பட்ட நிலையில், அவரது தாய் கங்கா தனது மகனுக்காக கிட்னியை கொடுக்க முன்வந்துள்ளார். 72 வயது ஆன போதிலும் கங்காவின் இரண்டு கிட்னிகளும் நல்ல நிலையில் இருந்துள்ளன. இந்த நிலையில், கங்காவின் ஒரு கிட்னி அவரது மகன் கமலேசுக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து தற்போது இரண்டு பேரும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ஒரு மருத்துவரின் 8 வருட போராட்டம்.. இனி உணவுப்பொருட்களில் ORS என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது
பிள்ளைகள் எத்தனை வயதானாலும் அவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு குழந்தைகளாகவே உள்ளனர். அதிலும், தாய்க்கு தனது குழந்தைகள் தான் உலகமாக உள்ளனர். 72 வயது ஆன போதிலும் தனது மகனுக்காக கிட்னியை வழங்கிய அந்த மூதாட்டிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.