பாகிஸ்தான் டிரான்கள் மீது இந்திய ராணுவம் குறிவைத்து தாக்குதல்… பரபரப்பு தகவல்
Drone Intrusion Attempt: ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய ராணுவம் குறிவைத்து தாக்கியுள்ளது. குடியரசு தின விழாவுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பாகிஸ்தான் டிரோன்கள் ஊடுருவல் முயற்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் டிரோன்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே பாகிஸ்தான் டிரோன்களை ஜனவரி 15, 2026 அன்று இந்திய ராணுவம் குறிவைத்து தாக்கியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே சந்தேகத்திற்கிடமான பாகிஸ்தான் ட்ரோன்கள் மீண்டும் பறந்ததைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் டிரோன் பறப்பது இந்த வாரத்தில் பதிவாகும் மூன்றாவது சம்பவமாகும். பூஞ்ச் மாவட்டத்தின் டெக்வார் பகுதியில் டிரோன் பறப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அந்தப் பகுதியில் உடனடியாக உயர் எச்சரிக்கை நிலை அமல்படுத்தப்பட்டு, பாதுகாப்புப் படைகள் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தான் டிரோன்கள் மீது இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு
இது தொடர்பாக வெளியான தகவலின்படி, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 11 முதல் 15 வரை எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே குறைந்தது 15 ட்ரோன்கள் பறந்ததாகவும், அவற்றில் சிலவற்றை பாதுகாப்புப் படைகள் தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஞ்ச் மாவட்டத்தின் டிக்வார் பகுதியிலும், சாம்பா மாவட்டத்தின் ராம்கர் பகுதியில் உள்ள இந்தியா பாகிஸ்தான் சர்வதேச எல்லை பகுதியிலும் இந்த ட்ரோன்கள் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பூஞ்ச் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டு, எந்தவொரு அச்சுறுத்தலும் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையும் படிக்க :2026 குடியரசு தினவிழா…சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் வெளிநாட்டு முக்கியஸ்தர்…யார் அவர்!
முன்னதாக, ஜனவரி 11 மற்றும் 13, 2026 ஆகிய தேதிகளில் சாம்பா மற்றும் மேந்தார் பகுதிகளில் டிரோன் இயக்கம் கண்டறியப்பட்டது. மேலும் கடந்த 11, 2026 அன்று, நவ்ஷேரா பிரிவில் டிரோன் பறந்ததை கவனித்த ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளால் சுட்டனர். அதே நாளில், ராஜௌரி மாவட்டத்தின் கலகோட், பூஞ்ச் மாவட்டத்தின் மன்கோட் பகுதி, சாம்பா மாவட்டத்தின் சாக் பாப்ரால் உள்ளிட்ட பல இடங்களிலும் டிரோன் இயக்கம் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நிமிடங்களில் அந்த ட்ரோன்கள் திரும்பிச் சென்றன.
கடந்த ஜனவரி 9 , 2026 அன்று, சாம்பா மாவட்டம் காக்வால் அருகே உள்ள பலூரா கிராமத்தில், பாகிஸ்தான் ட்ரோன் மூலம் வீசப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் அடங்கிய மூட்டை, பாதுகாப்புப் படைகளால் கைப்பற்றப்பட்டது. அதில் இரண்டு துப்பாக்கிகள், 16 தோட்டாக்கள் மற்றும் ஒரு கையெறி குண்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க : ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பல ட்ரோன்கள் ஊடுருவ முயற்சி
இந்தியாவின் குடியரசு தினம் நெருங்கி வரும் நிலையில், எல்லைப் பகுதியில் டிரோன் ஊடுருவல் முயற்சிகள் அதிகரித்துள்ளதால், பாதுகாப்புப் படைகள் உச்சக்கட்ட எச்சரிக்கையில் வைக்கப்பட்டுள்ளன. தீவிரவாதிகள் ஊடுருவும் எந்த முயற்சியும் வெற்றிபெறாத வகையில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.