நீரிழிவு நோயாளிகள் அதிகம் வாழும் முதல் 3 நாடுகள்…இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா!
Largest Diabetes Population In Country : உலக அளவில் அதிக நீரிழிவு நோயாளிகள் உள்ள நாடு எது தெரியுமா.. இந்த வரிசையில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்பது தெரியுமா. இது குறித்து விரிவாக இந்தப் பதிவில் காணலாம் .

நீரிழிவு நோய் பாதிப்பில் இந்தியா 2 ஆவது இடம்
உலகத்தில் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலை தி லான்சென்ட் நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பியியல் இதழில் ஒரு ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வில், கடந்த 2024- ஆம் ஆண்டில் சீனா 148 மில்லியன் மக்களுடன் முதல் இடத்திலும், இந்தியா 90 மில்லியன் மக்களுடன் 2- ஆவது இடத்திலும், அமெரிக்கா 39 மில்லியன் மக்களுடன் 3- ஆம் இடத்திலும் உள்ளது. சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் உலக அளவில் நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கையில் மிகப்பெரிய அளவில் பங்கு வகிப்பதாக பெல்ஜியத்தில் உள்ள சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு, இந்திய நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் சென்னையில் உள்ள டாக்டர் ஏ. ராமச்சந்திரன் நீரிழிவு மருத்துவமனை உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவை முந்தும் பாகிஸ்தான்
இந்த பட்டியலில் வரும் 2050- ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவை, பாகிஸ்தான் முந்திவிடும் என்று அவர்கள் கணித்துள்ளனர். சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் 11- ஆவது பதிப்பு நீரிழிவு நோய் அட்லஸ் மற்றும் கடந்த 2024- ஆம் ஆண்டுக்கான தேசிய, பிராந்திய மற்றும் உலகளாவிய நீரிழிவு நோய் பரவலுக்கான மதிப்பீடுகளை வழங்கி உள்ளது. கடந்த 2005 முதல் 2024- ஆம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட 246 ஆய்வுகளின் அடிப்படையில் 215 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான சர்க்கரை நோய் பாதிப்புக்கான அளவீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: பட்ஜெட் 2026: குடும்பங்களின் வரிச்சுமையை குறைக்க.. கூட்டு வரி தாக்கல் முறைக்கு ஆதரவு அதிகரிப்பு
வளர்சிதை மாற்ற கோளாறால் பாதிப்பு
உலக மக்கள் தொகையில் 11 சதவீதத்துக்கும் அதிகமானோர் அல்லது 20-79 வயதுடைய 589 மில்லியன் முதியவர்கள் கடந்த 2024- ஆம் ஆண்டில் வளர்சிதை மாற்ற கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கிட்டத்தட்ட 13 சதவீதம் பேர் ( 853 மில்லியன் முதியவர்கள்) வரும் 2050- ஆம் ஆண்டுக்குள் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024- ஆம் ஆண்டில் உலக அளவில் 9 முதியவர்களில் ஒருவர் நீரிழிவு நோயுடன் வாழ்ந்து வந்தார். கடந்த 2024- ஆம் ஆண்டில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 500 மில்லியனை தாண்டியுள்ளது.
2050-க்குள் 900 மில்லியனை நெருங்கும் என கணிப்பு
வரும் 2050- ஆம் ஆண்டுக்குள் 900 மில்லியனை நெருங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. உலகில் நீரிழிவு நோயாளிகளில் 5- இல் 4 பங்குக்கும் அதிகமானோர், அதாவது 80.64 சதவீதம் பேர் கடந்த 2024- ஆம் ஆண்டில் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் 2050- ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் இந்த நாடுகளில் நீரிழிவு நோயின் அதிகரிப்பில் 95 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு மக்கள் தொகை வளர்ச்சி, தொடர்ச்சியான நகரமயமாக்கல் மற்றும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஆகியவை முக்கிய பங்களிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: தை அமாவாசை முழுக்கு.. பிரயாக்ராஜ் சங்கமத்தில் குவியும் பக்தர்கள்!