புதிய ரக தீபாவளி துப்பாக்கியால் பறிபோன குழந்தைகள் கண்பார்வை.. திடுக் சம்பவம்!
Diwali Crackers Issue: தீபாவளி துப்பாக்கியில் இருந்து வெளியான ரசாயனத்தால் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், 14க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண்பார்வை இழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்தும், இது தொடர்பான அப்டேட் குறித்தும் பார்க்கலாம்

தீபாவளி துப்பாக்கி
மத்திய பிரதேசம், அக்டோபர் 23: மத்திய பிரதேசத்தில் அறிமுகமான ‘கார்பைட் கன்’ (carbide gun) எனப்படும் புதிய ரக தீபாவளி துப்பாக்கியால், கடந்த 3 நாட்களில் மட்டும் 122 குழந்தைகள் தீவிர கண் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 14 குழந்தைகள் கண்பார்வையை இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு தீபாவளிக்கும் கம்பி மத்தாப்பு முதல் ராக்கெட் வரை விதவிதமான புதிய ரக பட்டாசுகள் அறிமுகமாவது வாடிக்கையான ஒன்றாகும். அவ்வாறு, தமிழகத்தில் கூட இந்த தீபாவளிக்கு புது வரவாக குங் பூ பாண்டா, தர்பூசணி வெடி, நருடோ அனிமேஷன், கிடார் மத்தாப்பு, பீட்சா, ஓரியோ என விதவிதமான பட்டாசுகள் அறிமுகமாகி சிறுவர்களை கவர்ந்தன.
அந்தவகையில், தமிழகத்தில் எந்தவொரு பெரும் அசம்பாவிதமும் இல்லாமல் இந்த ஆண்டு தீபாவளி வானவேடிக்கைகளோடு, வண்ணமையமாகவும், மகிழ்வோடும் கொண்டாடி முடிக்கப்பட்டது. ஆனால், மத்திய பிரதேசத்தில் இப்படி புதிதாக அறிமுகமான பட்டாசு ஒன்று அம்மாநில மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, அங்கு அறிமுகமான புதிய ரக தீபாவளி துப்பாக்கி ஒன்றால் கடந்த 3 நாட்களில் மட்டும் 122 குழந்தைகள் தீவிர கண் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 14 குழந்தைகள் தங்களது கண்பார்வையை இழந்துள்ளனர்.
தீபாவளி துப்பாக்கியால் கண் பார்வை பறிபோனது எப்படி?
மத்திய பிரதேசம் தலைநகர் போபால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தீபாவளி புது வரவாக ‘கார்பைட் கன்’ (carbide gun) எனப்படும் துப்பாக்கி ஒன்று அறிமுகமாகியுள்ளது. பார்ப்பதற்கு பிளாஸ்டிக் பைப்புகளில் செய்யப்பட்ட பொம்மை துப்பாக்கி போல் இருந்தாலும், அதில் பட்டாசு வெடித்தால் வெடி குண்டுகள் போல் சத்தம் வந்துள்ளன. அதன் விலையும் ரூ.150 – 200 என மலிவாக இருந்ததால், பெற்றோர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு ஆசையுடன் இந்த துப்பாக்கியை வாங்கிக் கொடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குழந்தைக்கு கொடுக்கப்பட்ட மருந்தில் நெளிந்த புழுக்கள்.. மபியில் அதிர்ச்சி சம்பவம்!
இதில் சிக்கல் என்னவென்றால், இந்த துப்பாக்கியை வெடிக்க வைக்க கால்சியம் கார்பைட் என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ரசாயனத்தை தண்ணீருடன் கலந்து வெடிக்கும் வகையில் அந்த துப்பாக்கி வடிவமைக்கப்பட்டதாக தெரிகிறது. அவ்வாறு கால்சியம் கார்பைட் ரசாயனத்துடன் தண்ணீர் கலக்கும்போது, பெரும் வெடி சத்தம் வருவதுடன் அசிட்டிலின் என்ற வாயுவும் வெளியாகியுள்ளது. இந்த வாயுவை சுவாசித்ததன் காரணமாகவே குழந்தைகளுக்கு கண்பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மருத்துவர்கள் கூறுவது என்ன?
இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, தீபாவளிக்கு அறிமுகமான இந்த துப்பாக்கிகள் பொம்மை துப்பாக்கிகள் அல்ல, ஒரு வகையான வெடி குண்டுகள் என்கின்றனர். இந்த துப்பாக்கியில் இருந்து வெளிவரும் வாயு, கண்களில் தீவிர பாதிப்பை ஏற்படுத்துவடன், சிலருக்கு நிரந்தர பார்வை இழப்பையும் ஏற்படுத்தும் என்றனர். அத்துடன், அவ்வாறு பாதிக்கப்பட்டு ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் பலருக்கு நிரந்தர பார்வை குறைபாடு ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.