Vice President C.P. Radhakrishnan: 15வது துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி ராதாகிருஷ்ணன்..
Vice President C.P. Radhakrishnan: நாட்டின் துணை ஜனாதிபதிக்கான தேர்தல் செப்டம்பர் 9, 2025 அன்று நடைபெற்ற நிலையில், 452 வாக்குகள் பெற்று சி.பி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இந்நிலையில் செப்டம்பர் 12, 2025 தேதியான இன்று அவர் துணை ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.

டெல்லி, செப்டம்பர் 12, 2025: நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், இந்திய குடியரசுத் தலைவர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் உடல்நலக் குறைவால் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தரப்பில் சி. பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை ஜே. பி. நட்டா வெளியிட்டார். பின்னர், அவருக்கு ஆதரவை திரட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், எதிர்க்கட்சிகள் தரப்பில் (இந்தியக் கூட்டணி), அவர் ஆர்எஸ்எஸ் பின்புலத்தைச் சேர்ந்தவர் என்பதால், வேறு வேட்பாளரை நிறுத்தப் போவதாக அறிவித்தனர். தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. பின்னர் தெலங்கானாவைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். 2025 ஆகஸ்ட் மாதத்தில் இருவரும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்து, கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவைத் திரட்டினர்.
பதவியேற்பு
C.P. Radhakrishnan was sworn in as the 15th Vice President of India, with the oath of office administered by President #DroupadiMurmu. #CPRadhakrishanan #vicepresidentofindia pic.twitter.com/0POqoesvSI
— DD News (@DDNewslive) September 12, 2025
452 வாக்குகள் பெற்று சி.பி ராதாகிருஷ்ணன் வெற்றி:
அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 9, 2025 அன்று நாடாளுமன்றத்தில் துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்றது. மக்களவையில் மொத்தம் 542 உறுப்பினர்கள், மாநிலங்களவையில் 228 உறுப்பினர்கள் மற்றும் 12 நியமன உறுப்பினர்கள் உள்ளனர். எனவே மொத்தம் 782 உறுப்பினர்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர். துணை ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு குறைந்தபட்சம் 392 வாக்குகள் தேவைப்பட்டது.
அந்த வகையில், பாரதிய ஜனதா கூட்டணிக்கு இரு அவைகளையும் சேர்த்து மொத்தம் 442 உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் நடைபெற்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி. பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
துணை ஜனாதிபதியாக பதவியேற்ற சி.பி. ராதாகிருஷ்ணன்:
அவரது வெற்றியைத் தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் வாழ்த்துத் தெரிவித்தனர். வெற்றியை அடுத்து தேவையான ஆவண கையெழுத்து மற்றும் பிற நடைமுறைகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், செப்டம்பர் 12, 2025 அன்று, சி. பி. ராதாகிருஷ்ணன் நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாகப் பதவியேற்றார். இவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
யார் இந்த சி.பி ராதாகிருஷ்ணன்?
சி. பி. ராதாகிருஷ்ணன் கோவையிலிருந்து இரண்டு முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும், ஏ. பி. வாஜ்பாய் மற்றும் எல். கே. அத்வானி ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய, பாஜகவின் பழைய மூத்த தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். தமிழ்நாட்டின் திருப்பூரில் 1957 அக்டோபர் 20 அன்று பிறந்த அவர், 1970களில் ஆர்எஸ்எஸ்-இல் இணைந்தார். பின்னர், 1974ஆம் ஆண்டு பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றினார். 2023ஆம் ஆண்டு அவர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னர் அவர் மகாராஷ்டிராவின் ஆளுநராக இருந்தது குறிப்பிடத்தக்கது.