வெளியாகும் சிபிஎஸ்இ 10, பிளஸ் 2 தேர்வு முடிவுகள்? – தெரிந்துகொள்வது எப்படி?
CBSE Exam Result: 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடப்பாண்டில் சுமார் 42 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எழுதி உள்ளனர். இந்த தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்துகொள்வது உள்ளிட்ட முக்கிய தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
டெல்லி, மே 1: நாடு முழுவதும் 2024 -2025 கல்வி ஆண்டுக்கான சிபிஎஸ்இ (CBSE) 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் பிப்ரவரி 15 , 2025 அன்று தொடங்கி நடைபெற்றது. 10 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 18, 2025 அன்று வரையும், பிளஸ் 2 தேர்வுகள் ஏப்ரல் 4, 2025 ஆம் தேதி வரையும் நடைபெற்றன. நாடு முழுவதும் இந்த தேர்வை 42 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். முதலில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வருகிற மே இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ஓரிரு நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக இந்த சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி முன்பே அறிவிக்கப்படாததால் மாணவர்களிடையே குழப்பம் நீடித்து வருகிறது.
எப்படி தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்வது ?
மாணவர்கள் கீழ்க்கண்ட CBSE இணையதளங்களில் தங்களுடைய ஹால் டிக்கெட் எண் மற்றும் பிற தேவையான விவரங்களை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.
மேலும் மாணவர்கள் தங்களது ஆதார் மற்றும் பதிவான எண்ணைப் பயன்படுத்தி டிஜிலாக்கர் செயலியின் மூலம் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்யலாம். உமாங்(UMANG App) என்ற மத்திய அரசின் செயலியின் மூலமும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். சிபிஎஸ்இ பொதுவாக எஸ்எம்எஸ் சேவையின் மூலமாகவும் தேர்வு முடிவுகளை வழங்குகிறது. இதற்கான விவரங்களை முடிவுகள் வெளியானவுடன் சிபிஎஸ்இ அறிவிப்புகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
2024-25 கல்வியாண்டில் சுமார் 42 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தற்போது தேர்வு முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். முடிவுகள் வெளியாகும் நேரத்தில் இணையதளங்களில் அதிகம் பேர் நுழைவதால் ஹேங்காகும் வாய்ப்பு இருப்பதால், மாணவர்கள் பொறுமையுடன் முறையான வழிகளை பின்பற்றி தெரிந்து கொள்ளலாம்.
தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் வந்துள்ளதாக சந்தேகமிருந்தால், மாணவர்கள் மதிப்பீட்டில் மறுஆய்வு (Re-evaluation) அல்லது மறுபரிசீலனை (Verification) கோரலாம். இதற்கான விண்ணப்பங்கள் தேர்வு முடிவுகள் வெளியானவுடன் CBSE வலைதளத்தின் மூலம் மட்டும் செய்யப்பட வேண்டும். 10ம் வகுப்பு முடிவுகள் மாணவர்கள் எந்த பாடப்பிரிவில் (அர்ட்ஸ், காமர்ஸ், சயின்ஸ்) 11ம் வகுப்பு தேர்வு செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க உதவும். 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மாணவர்கள் தாங்கள் விரும்பும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் சேர விண்ணப்பிக்க மிகவும் முக்கியமானதாக இருக்கும். தேர்வு முடிவுகள் எதிர்பார்த்தபடி இல்லாவிட்டாலும் மனமுடைய வேண்டாம். அதற்கான மாற்று வழிகள் இருக்கின்றன. தேர்வு முடிவுகள் வாழ்க்கையின் ஒரு கட்டம் மட்டுமே என்பதை நினைவில் வைத்துக் கொள்வது அவசியம்