CP Radhakrishnan: துணை குடியரசுத் தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. வாக்கெடுப்பில் வெற்றி!
Vice President of India: இந்தியாவின் புதிய துணை குடியரசுத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றார். இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்து மூன்றாவது நபராக இந்த உயரிய பதவிக்கு தேர்வு செய்யப்படும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.

டெல்லி, செப்டம்பர் 9: இந்தியாவின் புதிய துணை குடியரசுத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் (CP Radhakrishnan) தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற துணை குடியரசுத் தலைவருக்கான வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றார். அவருக்கு 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து இந்த உயரிய பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட மூன்றாவது நபர் என்ற பெருமையை சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆர். வெங்கட்ராமன் ஆகியோர் இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்கள். சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள், பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
துணை குடியரசுத் தலைவர் தேர்தல்
இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராக பதவி வகித்து வந்த ஜெகதீப் தன்கர் கடந்த 2025 ஜூலை 21ஆம் தேதி உடல் நலக் குறைவை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து இந்தியாவின் அடுத்த துணை குடியரசுத் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது. இது தொடர்பான தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வந்த நிலையில் மறுபக்கம் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி துணை குடியரசு தலைவருக்கான வேட்பாளரை தேர்வு செய்வதில் ஆலோசனை ஈடுபட்டது.
Also Read: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு இப்படி ஒரு வரலாறு இருக்கா?
இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநராக பதவி வகித்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். அதே சமயம் நீண்ட இழுபறிக்கு பின் இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானாவைச் சேர்ந்த உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இரு அவைகளின் உறுப்பினர்களையும் சேர்த்து 782 பேர் இருந்த நிலையில் இந்த தேர்தலை பிஜூ ஜனதா தளம், தேசிய ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக தெரிவித்தனர். இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றது.
Also Read: பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி ராதாகிருஷ்ணன் அறிவிப்பு.. இவர் கடந்து வந்த பாதை என்ன?
சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி
முன்னதாக நாடாளுமன்றத்தில் இரு அவைகளையும் சேர்த்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 422 உறுப்பினர்கள் இருந்தனர். வெற்றிக்கு 391 வாக்குகள் தேவை என்பதால் சி.பி.ராதாகிருஷ்ணன் எளிதாக வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டிருந்தது. அதன்படி சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார். 12 பேர் தேர்தலை புறக்கணித்த நிலையில் மொத்தமாக்ல 767 வாக்குகள் பதிவாகியிருந்தது.
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற துணை குடியரசுத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கர் 528 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மார்கரெட் நாசரேத் ஆல்வா 182 வாக்குகள் பெற்றிருந்தார். அப்போது பாஜக தனிப்பெரும்பான்மையுடன் இருந்தது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணி அமைந்ததால் இம்முறை வாக்கு வித்யாசம் சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.