இந்தியா கூட்டணிக்கு குட்பை.. அதிர்ச்சி கொடுத்த ஆம் ஆத்மி.. அரசியலில் பரபரப்பு!

INDIA Alliance : இந்தியா கூட்டணியில் வெளியேறுவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் பேட்டியளித்துள்ளார். பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் இந்த முடிவு இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்தியா கூட்டணிக்கு குட்பை.. அதிர்ச்சி கொடுத்த ஆம் ஆத்மி.. அரசியலில் பரபரப்பு!

ஆம் ஆத்மி

Updated On: 

18 Jul 2025 23:05 PM

டெல்லி, ஜூலை 18 : இந்தியா கூட்டணியில் (INDIA Alliance) இருந்து வெளியேறுவதாக ஆம் ஆத்மி கட்சி (Aam Aadmi Party) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங் பேட்டியளித்துள்ளார். 2024 மக்களவை தேர்தலுக்கு பின்னர், முதல்முறையாக இந்தியா கூட்டணியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அக்கூட்டத்தை ஆம் ஆத்மி புறக்கணித்துள்ளது. இந்தியா கூட்டணியிலிருந்து ஆம் ஆத்மி வெளியேறியுள்ளதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவை வீழ்த்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது தான் இந்தியா கூட்டணி. தேசிய அளவில் காங்கிரஸ், திரிணாமல் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, இடதுசாரிகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கியது தான் இந்தியா கூட்டணி. 2024 மக்களவைத் தேர்தலில் மாநில அளவில் பாஜகவை எதிர்த்து களம் கண்ட இந்தியா கூட்டணி குறிப்பிடத் தகுந்த அளவில் வெற்றியை ஈட்டியது.

அசுர பலத்தில் இருந்த பாஜக, தனிப் பெரும்பான்மை இழக்க பெரும் காரணமாக அமைந்தது இந்தியா கூட்டணி தான். இந்தக் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தற்போது இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளதாக பரவி வரும் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜகவிடம் ஆம் ஆத்மி தோல்வியை தழுவியது. அதன் பிறகு அரசியல் ரீதியாக சுணக்கமாக செயல்பட்டு வந்த ஆம் ஆத்மி, இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறும் பெரிய முடிவை எடுத்துள்ளது.

Also Read : விமான விபத்து.. விசாரணை அறிக்கை பல கேள்விகளை எழுப்புகிறது.. ஏர் இந்தியா சுற்றறிக்கை!

இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆம் ஆத்மி


இதுகுறித்து அக்கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங், “2024 மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே இந்திய கூட்டணி உருவாக்கப்பட்டது என்ற எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம். நாடாளுமன்றத்தைப் பொறுத்தவரை, அரசாங்கத்தின் அனைத்து தவறான கொள்கைகளையும் நாங்கள் எப்போதும் எதிர்த்து வருகிறோம். இன்றைய தேதியில் ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளோம். எங்கள் கூட்டணி மக்களவைத் தேர்தலுக்கானது மட்டுமே. டெல்லி மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களில் நாங்கள் தனித்துப் போட்டியிட்டோம். பீகார் தேர்தலில் நாங்கள் தனியாகப் போட்டியிடப் போகிறோம்” என கூறினார்.

2025ஆம் ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் இந்த முடிவு இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு நடைபெறும் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் எம்பி சஞ்சய் தெரிவித்துள்ளார்.

Also Read : பயணிகளின் பாதுகாப்பு.. ரயில்களில் வரும் பெரிய மாற்றம்.. ரயில்வே எடுத்த முடிவு!

அதோடு இல்லாமல் பீகார் தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து களம் காண உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்தியா கூட்டணி என்பது மக்களவைத் தேர்தலுக்கு மட்டும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். வரும் திங்கட்கிழமை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், நாட்டில் நிலவும் அரசியல் சூழல் குறித்து விவாதிக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட உள்ளனர். இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் ஆம் ஆத்மி கட்சியின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது