இந்தியாவின் ‘மோஸ்ட் வான்டட்’ கேங்ஸ்டர் “அன்மோல் பிஷ்னோய்”.. நாடு கடத்தப்பட்டு கைது!!
Anmol Bishnoi: அன்மோலின் சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது அகமதாபாத் சபர்மதி மத்திய சிறையில் காவலில் உள்ளார். தொடர்ந்து, அன்மோலை டெல்லியில் கைது செய்த NIA அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. தொடர்ந்து, அவரை 11 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லி, நவம்பர் 19: கடந்த 2022ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த பிரபல கேங்ஸ்டர் அன்மோல் பிஷ்னோய், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். முறையான ஆவணங்கள் இன்றி, தங்கள் நாட்டிற்குள் நுழையும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களை அமெரிக்கா அரசு தொடர்ந்த வெளியேற்றி வருகிறது. அந்தவகையில், நாடு கடத்தி கொண்டுவரப்பட்ட அன்மோல் பிஷ்னோய், டெல்லி வந்திறங்கிய உடனே என்ஐஏ அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர். இவர், பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் இளைய சகோதரர் என்பதும், இருவரும் பல மாநிலங்களில் தொடர்புடைய குற்றச்சம்பவங்களால் சட்ட அமலாக்கத்துறையின் கண்காணிப்பில் நீண்ட காலமாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : மனைவி மற்றும் பிள்ளைகளை கொன்று புதைத்த வனத்துறை அதிகாரி.. காணாமல் போனதாக நாடகம்!




நாடு கடத்தி வரப்பட்ட 200 இந்தியர்கள்:
அமெரிக்காவில் டிரம்ப் அதிபராக பதவியேற்ற முதல் சட்டவிரோதமாக அங்கு குடியேறியவர்களை நாடு கடத்தி வருகிறது. அந்தவகையில், ஏற்கெனவே நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிறை கைதிகளை போல கை, கால்களில் விலங்கு போடப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக அமெரிக்கவில் இருந்து இன்று 200 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் நாடு நாடு கடத்தி கொண்டு வரப்பட்டனர். இந்த 200 பேரில் 197 பேர் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள். மீதமுள்ள மூவரில், ஒருவரான அன்மோல் பிஷ்னோய், பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோயின் இளைய சகோதரர் ஆவார். மற்ற இருவரும் பஞ்சாப்பில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டவர்கள் ஆவார்கள்.
லாரன்ஸ் பிஷ்னோய் பின்னணி:
லாரன்ஸ் பிஷ்னோய் முன்னாள் மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை முயற்சி, நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது நடந்த துப்பாக்கிச்சூடு, பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கு உள்ளிட்ட பல முக்கிய குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார். இவரது சகோதரரான அன்மோல் பிஷ்னோய், போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையே பலமுறை பயணம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலி பாஸ்போர்ட் மூலம் தப்பிய அன்மோல்:
அன்மோல் பிஷ்னோய் 2022 ஏப்ரலில் போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றார். சித்து மூஸ்வாலா கொலை நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பே அவர் காணாமல் போனார். பின்னர், போலி ஆவணங்களின் உதவியால் அமெரிக்கா – கனடா இடையே பயணம் செய்ததாக சந்தேகிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு அவர் கலிபோர்னியாவில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவர் இன்று இந்தியா நாடு கடத்தி வரப்பட்டார். தொடர்ந்து, அன்மோல் டெல்லி வந்தவுடன் NIA அதிகாரிகள் அவரை அதிகாரப்பூர்வமாகக் கைது செய்தனர்.
அமெரிக்காவில் இருந்தபடியே சதி:
NIA வெளியிட்ட தகவலின்படி, அன்மோல் 2020ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை சகோதரர் லாரன்ஸுக்கு பயங்கரவாத செயல்களில் உதவி செய்துள்ளார். அதோடு, அமெரிக்காவில் இருந்தபடியே தங்களது வலையமைப்பை ஒழுங்குபடுத்தி வந்துள்ளார். என்க்ரிப்ட் செய்யப்பட்ட தொடர்பு செயலிகள் மூலம் பிஷ்னோய் தங்களது கும்பலை தொடர்ந்து இயக்கி வந்துள்ளார். துப்பாக்கிச்சூடு, மிரட்டல், பணம் பறிப்பு செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தங்குமிடம் மற்றும் தளவாட உதவிகளை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இந்தியாவில் செயல்படும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை வெளிநாட்டிலிருந்து ஒருங்கிணைத்து வழிநடத்தினார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : கத்தியுடன் இருவரை ஓட ஓட விரட்டி குத்த முயற்சி.. விமான நிலையத்தில் பரபரப்பு!!
அன்மோல் பிஷ்னோய், தற்போது சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலைச் சேர்ந்த 19வது நபராக கைது செய்யப்படுபவர் ஆவார். மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாபில் அவருக்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இந்தியா வந்ததும் எந்த நிறுவனம் முதலில் அவரை காவலில் எடுக்க வேண்டும் என மத்திய அரசு தீர்மானிக்க வேண்டியிருந்தது. தொடர்ந்து, அவரை 11 நாட்கள் நீதிமன்ற காவலில் NIA விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.