பாட்டில் மூடியை விழுங்கிய சிறுவன்.. துடிதுடித்து இறந்து போன சோகம்..
Andhra Pradesh: ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தை தொண்டையில் தண்ணீர் பாட்டில் மூடி சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த குழந்தை
ஆந்திரா, செப்டம்பர் 13, 2025: ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு துயர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, ஒன்றரை வயது குழந்தை தொண்டையில் தண்ணீர் பாட்டில் மூடி சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள குத்தி நகரத்தைச் சேர்ந்த யுகந்தர் மற்றும் மௌனிகா தம்பதியினருக்கு ரக்ஷித் ராம் என்ற ஒன்றரை வயது மகன் உள்ளார். யுகந்தர் மற்றும் மௌனிகா இருவரும் அரசு ஊழியர்கள்.. யுகந்தர் அனந்தபூரில் உள்ள R&B துறையில் உதவி பொறியாளராக பணிபுரிகிறார். மௌனிகா குத்தி நகரத்தில் உள்ள டிரான்ஸ்கோ துறையில் ADE ஆக பணிபுரிகிறார்.
வீட்டில் ஒரு குழந்தை இருந்தால் அந்த வீட்டில் மிகவும் ஜாக்கிரதையாக கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். குழந்தைகள் எப்போது என்ன செய்வார்கள் என்று தெரியாது. எப்போதுமே துரு துருவென்று எதையாவது ஒன்றை கையில் எடுத்து வாயில் வைத்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். தவறுதலாக ஏதாவது ஒரு பொருளை வாயில் வைத்துக் கொண்டால் அது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் குறிப்பாக சிறு குழந்தைகள் ஒரு சில பொருட்கள் வாயில் வைக்கும் பொழுது அது தொண்டையில் சிக்கி அல்லது அந்த பொருட்கள் மூச்சுக் குழாய்க்கு சென்று மூச்சு விட சிரமம் ஏற்பட்டு உயிர் இழக்கும் நிலை ஏற்படுகிறது. இது போன்ற ஒரு சம்பவம் தான் தற்போது ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
Also Read: திடீரென ஏற்பட்ட பிரசவ வலி.. காட்டில் குழந்தை பெற்ற பெண்.. தாயும், சேயும் நலம்!
பாட்டில் மூடி சிக்கி திணறிய சிறுவன்:
தாய் மௌனிகா இரவு பணி மேற்கொண்டு வருவதால் தனது ஒன்றரை வயது மகனை தன்னுடன் வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மௌனிகா பணியின் இருக்கும் போது அவரது ஒன்றரை வயது மகன் பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது தவறுதலாக அங்கு இருந்த குடிநீர் பாட்டிலின் மூடியை வாயில் வைத்து விளையாடி உள்ளான். விளையாட்டு விபரீதமாகும் என்ற சொல்லுக்கு ஏற்ப பாட்டில் மூடி தொண்டைக்குள் சிக்கியுள்ளது.
உடனடியாக அந்த சிறுவன் மூச்சு விட திணறியுள்ளான். இதனை கண்ட தாய் மௌனிகா அலறி அடித்து அந்த குழந்தையை அருகில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் அந்த குழந்தைக்கு அவசர சிகிச்சை வழங்கினர். ஆனால் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி தாயின் கண் முன்னே துடித்து இறந்து போனது.
ஒன்றரை வயது ரக்ஷித்திரம் இறந்து விட்டதாக மருத்துவர்கள் சொன்னதை அடுத்து மௌனிகா அங்கேயே கதறி அழுதுள்ளார். இந்த சம்பவம் குடும்பத்தினர் இடையே வரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.