என்னையே அடிக்கிறீங்களா? – ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்!
Uttarakhand Crime News: உத்தரகாண்டில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன், ஆசிரியரைத் தனது டிபன் பாக்ஸில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மாணவர்-ஆசிரியர் உறவில் அதிகரித்து வரும் மோதலுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

ஆசிரியர் மீது துப்பாக்கிச்சூடு
உத்தரகாண்ட், ஆகஸ்ட் 22: உத்தரகாண்ட் மாநிலத்தில் செயல்படும் பள்ளி ஒன்றில் ஆசிரியர் மீது 9ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. ஆசிரியர் அடிவாங்காவிட்டால் வாழ்க்கையில் சரியாக உருவாக மாட்டான் என ஒரு கருத்து 2000ம் ஆண்டுகளின் தொடக்க காலக்கட்டம் வரை இருந்தது. ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஆசிரியர் திட்டினாலோ, அடித்தாலோ அதற்கு பழிவாங்கும் எண்ணம், எதிர்மறை கருத்து உருவாவது உள்ளிட்டவை மாணவர்களின் மனதில் தோன்றி விடுகிறது. இதற்கு சரியான விழிப்புணர்வு வேண்டும். மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே நல்லுறவு அமைய வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இப்படியான நிலையில் ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அப்படியான ஒரு சம்பவம் தான் உத்தரகாண்டில் நடைபெற்றுள்ளது.
நடந்தது என்ன?
உத்தரகாண்ட் மாநிலத்தில் uள்ள குண்டேஸ்வரி சாலையில் ஸ்ரீ குருநானக் சீனியர் செகண்டரி பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு இயற்பியல் ஆசிரியராக ககன்தீப் சிங் கோஹ்லி என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் வழக்கம்போல 2025 ஆகஸ்ட் 20 ஆம் தேதி வகுப்பு முடித்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது திடீரென 9ம் வகுப்பு பயிலும் மாணவர் தனது டிபன் பாக்ஸில் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கியை எடுத்துள்ளார். யாருக்கும் தெரியாமல் ககன்தீப் சிங் கோஹ்லி பின்னால் இருந்து அவரைச் சுட்டார். இதில் தோட்டா ஆசிரியரின் வலது தோள்பட்டையில் பாய்ந்தது.
Also Read: Crime: சிறுமி கடத்தல்.. சினிமாவை மிஞ்சிய ட்விஸ்ட்.. கடைசியில் சிக்கிய இளைஞன்!
இதில் காயமடைந்த ஆசிரியர் ககன்தீப் சிங் கோஹ்லியை சக பள்ளி ஆசிரியர்கள் அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சுட்டுவிட்டு தப்ப முயன்ற மாணவனை சக மாணவர்கள் விரட்டி பிடித்தனர்.
இதுதான் காரணமா?
உள்ளூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவனிடம் விசாரணை நடத்தினர். அதில் இரண்டு நாட்களுக்கு முன்பு ககன்தீப் சிங் கோஹ்லியின் வகுப்பில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கத் தவறியதற்காக அவர் என்னை கன்னத்தில் அறைந்தார். மேலும் சக மாணவர்கள் முன்னிலையில் என்னை திட்டியதால் கோபமும், ஆத்திரமும் அவர் மீது ஏற்பட்டதாக அந்த மாணவன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
Also Read: வறுமையில் வாடிய குடும்பம்.. 3 பெண்கள் எடுத்த விபரீத முடிவு.. விருதுநகரில் அதிர்ச்சி!
அதனால் அவரை பழிவாங்க எண்ணி துப்பாக்கியால் சுட்டேன் எனவும் கூறியுள்ளான். இதனிடையே சம்பந்தப்பட்ட மாணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.இந்த துப்பாக்கிச் சூடு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உதம் சிங் நகர் தனியார் பள்ளி சங்கம், மாவட்டத்தில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளும், ஆகஸ்ட் 21ம் தேதி ஊழியர்களுக்கு வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கோரி, காஷிபூரின் ராம்லீலா மைதானத்திலிருந்து துணை பிரிவு மாஜிஸ்திரேட் அலுவலகம் வரை அமைதிப் பேரணி நடத்தினார்கள்.