கேரளாவில் வேகமாக பரவும் அமீபா மூளைக்காய்ச்சல்.. பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு!
Amoebic Meningoencephalitis Spreading In Kerala | கேரளாவில் அமீபா மூளைக்காய்ச்சல் தொற்று நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாதிரி புகைப்படம்
திருவனந்தபுரம், நவம்பர் 22 : கேரளாவில் (Kerala) அமீபா மூளைக்காய்ச்சல் (Amoebic Meningoencephalitis) மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கோழிக்கோடு, மலப்புரம், திருவனந்தபுரம், கொள்ளம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தொற்று பரவல் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இந்த அமீபா மூளைக்காய்ச்சல் தொற்று எண்ணிக்கை மட்டுமன்றி, இதன் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2025, நவம்பர் மாதத்தில் மட்டும் அங்கு இதுவரை 7 பேர் அமீபா மூளைக்காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த் நிலையில், கேரளாவுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள இந்த அமீபா மூளைக்காய்ச்சல் பரவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.
26 வயது பெண் அமீபா மூளைக்காய்ச்சலால் பலி
நாளுக்கு நாள் இந்த தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் ஆனாடு பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவரின் மனைவி வினயா என்ற 26 வயதுன் இளம் பெண் அமீபா மூளைக்காய்ச்சல் பாதித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அமீபா மூளைக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட அந்த பெண் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நெடுமங்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க : நடத்தையில் சந்தேகம்.. மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவன்.. மகளுக்கும் கத்தி குத்து!
அமீபா மூளைக்காய்ச்சலால் 40 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை
இந்த நிலையில், கேரளாவில் இதுவரை அமீபா மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக 2025, நவம்பர் மாதத்தில் மட்டும் அங்கு அமீபா மூளைக்காய்ச்சல் காரணமாக அங்கு 17 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அவர்களில் 7 பேர் அடுத்து அடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க : 8 பிள்ளைகள்.. குடும்ப வறுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட தந்தை.. சோக சம்பவம்!
திருவனந்தபுரத்தில் மட்டும் 8 பேர் பலி
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இந்த தொற்று பாதிப்பு மிக தீவிரமாக உள்ள நிலையில், திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் பெரும்பாலான பகுதிகளில் தேங்கி கிடக்கும் மற்றும் அசுத்தமான தண்ணீர் மூலம் தான் அமீபா மனிதர்களின் மூக்கு, வாய் வழியாக உள்ளே சென்று மூளைக்காய்சலை ஏற்படுத்துவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.