கோடையில் அதிக வெப்பத்தால் விரைவில் வயது முதிர்வு ஏற்படும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Heatwave Effect : அதிகமான வெப்பம் நமது உடலில் உள்ள செல்களை அதிகம் பாதிக்கிறது. அமெரிக்கா பல்கலைக்கழக ஆய்வின் படி, வருடத்திற்கு 140 நாட்களுக்கு மேல் அதிக வெப்பத்தை சந்திக்கும் மக்கள், அவர்களது உண்மையான வயதைவிட 14 மாதங்கள் கூடுதல் வயது முதிர்வை சந்திக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகிறது.

கோடையில் அதிக வெப்பத்தால் விரைவில் வயது முதிர்வு ஏற்படும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மாதிரி புகைப்படம்

Published: 

13 May 2025 20:12 PM

ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்களில் நிலவும் கடுமையான வெயில் உடல், மனது, சுற்றுச்சூழல் ஆகிய அனைத்திலும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தியாக மாறி வருகிறது. குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில், உலகம் முழுவதும் கால நிலை மாற்றம் (climate change) காரணமாக வெப்ப அலைகள் (heatwaves) அதிகரித்து வருகின்றன. இதன் தாக்கம் டீஹைட்ரேஷன், தோல் பிரச்சனைகள், சோர்வு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் ஆகிய உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில் வெயிலின் தாக்கத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடும் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகள்

கடுமையான வெயில், மேற்சொன்ன உடல் நல பாதிப்புகளை விட கடுமையான விளைவுகளை உடலில் ஏற்படுத்துகிறது என்று பல வருட ஆய்வுகளுக்குப் பிறகு தெளிவாகியுள்ளது. யூனிவர்சிட்டி ஆப் சவுதர்ன் கலிஃபோர்னியாவில் (University of Southern California)  நடத்தப்பட்ட புதிய ஆய்வில், கடுமையான வெப்பம் செல்களில் முதிர்வை வேகமாக்கி, உடலின் செயல்முறைகளை பாதிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

வெப்பம் அதிகமான பகுதிகளில் அதிகரிக்கும் வயது முதிர்வு

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை, 3,686 பேரிடம் ஆய்வு நடத்தப்ட்டிருக்கிறது.  இவர்கள் அனைவரும் 56 வயதுக்கும் மேற்பட்டவர்கள். அதில், ஃபுளோரிடா, டெக்சாஸ், நார்த் கலிஃபோர்னியா போன்ற வெப்பமான பகுதிகளில் வசிப்பவர்கள், குளிர்ச்சியான பகுதிகளை விட உடல்நிலை அடிப்படையில் அதிக வயதானவர்களாக காட்சி அளித்தனர். இதனால் ஓய்வு காலத்துக்கு ஏற்ற சிறந்த பகுதிகளாக கருதப்பட்டவை, இப்போது வெப்பத்தால் உயிரிழப்பு அபாயம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளாக மாறியுள்ளன.

செல்களின் அடிப்படையில் வயது முதிர்வு

நமது வயதைக் கணிக்கும் பிறந்த ஆண்டை விட செல்லின் செயல்பாடுகள் மற்றும் உடல் நலத்திற்கு பயலாஜிகல் வயது முக்கியமானது. இந்த ஆய்வில், PCPhenoAge, PCGrimAge மற்றும் DunedinPACE எனும் மூன்று புதிய ஆய்வுக் கருவிகள் மூலம், செல்களில் நடக்கும் மாற்றங்களைப் பதிவு செய்துள்ளனர். ஒரு ஆண்டில் 140 நாட்களுக்கு மேல் கடும் வெப்பத்தை எதிர்கொண்டவர்கள், அவர்களது உண்மை வயதைவிட 14 மாதங்கள் அதிகமான வயது மூப்பை சந்திக்கிறார்கள்.

மனித உடல் இயற்கையான முறையில் மெதுவாக வயது முதிர்வை அடைகிறது. வயது முதிர்வை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், தற்போதைய காலநிலை மாற்றங்களால் ஏற்படும் அதிகப்படியான வெப்பம், இந்த இயற்கை முறையை வேகமாக்கி வருகிறது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வுகளும், அந்த நாடுகளில் உள்ள மக்கள்  செல்களினால் விரைவாக வயது முதிர்வை சந்திக்கின்றனர் என்பதை நிரூபிக்கின்றன. இது உடல் செயல்திறன் குறைதல், நோய்களுக்கான ஆபத்து அதிகரிப்பு, மனநல சிக்கல்கள் மற்றும் வாழ்நாள் குறைவு போன்ற பல பிரச்னைகளை உருவாக்கும்.