இளைஞர்களிடையே சிறுநீரக கற்கள் அதிகரிப்பதற்கான காரணம் என்ன? எப்படி தவிர்ப்பது?
Kidney stone rise alert : இப்போது 20 முதல் 30 வயது வரையிலான இளைஞர்களிடையே கிட்னி ஸ்டோன் பிரச்னை அதிகரித்திருக்கிறது. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் காரணமாக இந்தப் பிரச்னையை எதிர்கொள்கின்றனர். இதற்கு பின்னால் உள்ள காரணம் மற்றும் எப்படி தவிர்ப்பது என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
சிறுநீரக கற்கள் (Kidney Stone) ஒரு காலத்தில் நடுத்தர வயதினருக்கு மட்டுமே காணப்பட்ட ஒரு உடல்நலப் பிரச்னையாக இருந்து வந்தது. ஆனால் சமீப காலங்களில், 20 மற்றும் 30 வயதுடைய இளைஞர்களிடமும் சிறுநீரக நோய்கள் மற்றும் அறிகுறிகள் ஏற்படத் துவங்கியுள்ளன. இதற்குப் பின்னால் வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை பழக்கம் ஆகியவை கூறப்படுகிறது. குறிப்பாக சரியான அளவில் குடிநீர் அருந்தாமல் இருப்பது, ஜங்க் ஃபுட் குடல் ஆரோக்கியம், (Gut Health), மன அழுத்தம் (Stress) காரணமாக பலர் இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பிரச்னைக்கு பின்னால் உள்ள காரணம், மற்றும் அவற்றை எப்படி தவிர்ப்பது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
நம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் சோடா, எனர்ஜி பானங்கள், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள், தேநீர் மற்றும் காபி ஆகியவற்றின் அதிகப்படியான நுகர்வு இளைஞர்களிடையே சிறுநீரக கற்கள் அதிகரிப்பதற்கு ஒரு காரணமாகும். இவை அனைத்தும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுமுறை
மடிக்கணினிகளுக்கு முன்னால் நீண்ட நேரம் தனியாக அமர்ந்திருப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும் ஒரு வழியாகும். இது வேலையின் ஒரு பகுதியாக இருந்தாலும், அது உங்கள் ஆரோக்கியத்தை கணிசமாக பாதிக்கலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகள், அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் புரதங்கள் மற்றும் அதிக சோடியம் உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதோடு, நீண்ட நேரம் அமர்ந்திருப்பது போன்றவையும் சிறுநீரில் கால்சியம் மற்றும் யூரிக் அமிலத்தை அதிகரிக்கிறது. காலப்போக்கில், இது கல் உருவாவதற்கு வழிவகுக்கும்.
இதற்கிடையில், இந்தப் பிரச்னைக்கு ஜங்க் ஃபுட் போன்றவை மட்டுமே காரணம் அல்ல. நம் ஆரோக்கியம் என எடுத்துக்கொள்ளும் பசலைக்கீரை, பீட்ரூட், பாதாம், சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்ற உணவுகளில் ஆக்சலேட்டுகள் அதிகம் உள்ளன. இவை அதிகமாக உட்கொண்டால், சிறுநீரக கற்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் சேர்மங்கள் ஆகும்.
மேலும் டயட் என்ற பெயரில் நாம் அதிக சாலட்களை சாப்பிடுகிறோம். அவையும் பிரச்னைக்கு காரணமாக அமையும். எனவே, உணவில் கால்சியம் குறைவாக இருந்தால், உடல் அதிக ஆக்சலேட்டுகளை உறிஞ்சுகிறது, இது ஆபத்தை அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் கால்சியம், புரோட்டீன் பவுடர்கள், வைட்டமின் சி சப்ளிமென்ட்கள் சிறுநீரக கற்கள் உருவாவதற்கு முக்கிய காரணங்களாகும். எனவே அவற்றின் பயன்பாடுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்வது நல்லது.
மாற்ற வேண்டிய வாழ்க்கை முறை
- தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
- ஆக்சலேட் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
- சப்ளிமெண்ட்களின் பயன்பாட்டைக் குறைக்கவும்
- குடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்
- சரிவிகித உணவை மேற்கொள்ளுங்கள்.