தண்ணீர் குடித்தும் தாகம் அடங்கவில்லையா?.. இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்!
Consult Doctor If You Have These Symptoms | நம் உடலில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அதனை நமது உடல் அறிகுறிகளே காட்டி கொடுத்துவிடும். அந்த வகையில், அதிக தாகம் எடுப்பது, தண்ணீர் குடித்தும் தாகம் தீராமல் இருப்பதற்கு பின்னால் இருக்கும் ஆபத்துக்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
நீரின்றி அமையாது உலக என்ற வள்ளுவனின் வாக்கிற்கு ஏற்ப தான் உலகம் இயங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த உலகம் இயங்குவதற்கும், மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கும் மிக முக்கியமான ஒன்று என்றால் தண்ணீர் தான். மனிதனின் உடல் 50 முதல் 60 சதவீதம் வரை தண்ணீரால் ஆனது என கூறப்படுகிறது. எனவே மனிதர்களின் உடலில் இருந்து ஒவ்வொரு முறை நீர் வெளியேறும்போதும், தாகம் எடுக்கும். அவ்வாறு தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடித்தால் தாகம் தீர்ந்துவிடும். ஆனால், சிலருக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் தீராது. அவ்வாறு இருந்தால் அது உடல்நல பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம். அது குறித்து கவனம் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்
தண்ணீர் குடித்தும் தாகம் அடங்காதவர்கள் தாகம் ஏற்படும்போது வாய் வறட்சியாக இருப்பது, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சோர்வு மற்றும் பலவீனம் உள்ளிட்ட அறிகுறிகளை சந்தித்தால் அந்த நபர் உடனடியாக மருத்துவரை அணுகி உடல்நிலை குறித்து பரிசோதனை மேற்கொள்வது மிகவும் அவசியமானதாக உள்ளது. அவ்வாறு உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது உடல்நலத்தை பாதுகாக்க பெரும் உதவியாக இருக்கும்.
இதையும் படிங்க : Kiss Day 2026: மகிழ்ச்சியான ஹார்மோன்களை வெளிப்படுத்தும் முத்தம்.. முத்த தினம் உருவானது எப்படி..?
என்ன என்ன சிக்கல்கள் ஏற்படலாம்
இவ்வாறு தண்ணீர் குடித்தும் தாகம் அடங்காமல் இருப்பதற்கு பின்னால் சில நோய்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.
நீரிழிவு நோய்
அடிக்கடி தாகம் எடுப்பது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு தொடர்ந்து உயரும்போது சிறுநீர் மூலம் சர்க்கரையை வெளியேற்றுவதற்கான செயல்பாடு நடைபெறும். உடலில் செயல்பாடுகளால் குறைந்த அளவு தான் சர்க்கரையை வெளியேற்ற முடியும். இந்த நிலையில், தொடர்ச்சியாக சிறுநீர் வெளியேற்றுவதன் மூலம் உடலில் உள்ள நீர் சத்து பெருமளவில் குறைந்துவிடும்.
இதையும் படிங்கா : Kitchen Tricks: கோதுமை மாவு விரைவாக கட்டி சேர்ந்து விடுகிறதா? இந்த ட்ரிக் யூஸ் பண்ணி பாருங்க!
ரத்த சோகை
ரத்த சோகை நோயின் காரணமாக உடலில் உள்ள சிவப்பணுக்களால் ஆக்சிஜனை சரிவர கடத்த முடியாத சூழல் ஏற்படும். இந்த சூழலில் ரத்தத்தை உடல் முழுக்க கடத்த முடியாத சூழல் உருவாகும். இந்த நிலையில், ரத்தத்தினை உடல் முழுக்க கடத்த நீர்சத்து தேவை அதிகரிப்பதால் அதிக தாகம் ஏற்படும்.
எனவே அடிக்கடி தாகம் ஏற்படுகிறது அல்லது தண்ணீர் குடித்தும் தாகம் தீரவில்லை என்றால் மருத்துவரை அணுகுவது உடல்நலனை பாதுகாக்க உதவும்.